West Indies

பிரைன் சாள்ஸ் லாரா – வாரம் ஒரு பிரபலம்.

கிரிக்கெட் வரலாற்றின் ஆரம்பகாலங்களை எடுத்து நோக்கினால் அதிலே மேற்கு இந்திய தீவுகளுக்கு என்று தனியான இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு காலத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்காக கிரிக்கெட் ஆடி தனது அருமை பெருமைகளை உலகறியச் செய்த சாதனை நாயகன் “பிறின்ஸ்” என புனைபெயர் கொண்டு அழைக்கப்படும் பிரைன் சாள்ஸ் லாரா இன் வரலாற்றினையும் அவரின் சாதனைகளையுமே இக்கட்டுரை எடுத்தியம்பவுள்ளது.

1969 ஆம் ஆண்டு வைகாசிமாதம் இரண்டாம்திகதி பிறந்த இவர் ஒரு இடதுகை துடுப்பாட்ட வீரர் ஆவார். பந்தினை வலது கையினால் வீசக்கூடியவரும் ஆவார். இவர் மேற்கு இந்திய தீவுகளுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு கார்த்திகைமாதம் ஒன்பதாம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரிலே ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் 289 இனிங்சுகளில் துடுப்பெடுத்தாடி 13086 பந்துகளுக்கு முகங்கொடுத்து 10405 ஓட்டங்களை 40.17 எனும் சராசரியில் குவித்துள்ளார். இதில் 63 அரைச்சதங்களும் 19 சதங்களும் அடங்கும். அதிகூடிய ஓட்டம் 169 ஆகும். இவ் ஓட்ட எண்ணிக்கையில் 1035 நான்கு ஓட்டங்களும் 133 ஆறு ஓட்டங்களும் அடங்கும். 16 தடவைகள் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார். 30 தடவைகள் ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்க்கது.

அதுமட்டுமில்லாது நான்கு விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 21 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக தனது இறுதிப்போட்டியை ஆடினார்.

 

1990 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஆறாம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் 232 இனிங்சுகளில் துடுப்பெடுத்தாடி 19753 பந்துகளை சந்தித்து 11953 ஓட்டங்களை 52.89 எனும் மகத்தான சராசரியில் பெற்றுள்ளார். இதில் 48 அரைச்சதங்களும் 34 சதங்களும் ஒன்பது இரட்டை சதங்களும் இரண்டு முச்சதமும் ஓர் நானூறு ஓட்டமும் அடங்கும். இவ் ஓட்ட எண்ணிக்கையில் 1559 நான்கு ஓட்டங்களும் 88 ஆறு ஓட்டங்களும் அடங்கும். 17 தடவைகள் பூச்சியத்தில் ஆட்டமிழந்துள்ளார். ஆறு தடவைகள் ஆட்டமிழக்காது களத்தில் இருந்துள்ளார்.

இவரது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் இதுவரை யாருமே எட்டாத யாராலும் எளிதில் எட்டிட முடியாத 400 எனும் இமாலயமாகும். இப்படிப்பட்ட இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒன்பதாம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக விடைபெற்றார்.

பிரைன் லாரா தான் ஆடிய காலத்தில் ஒருகால கட்டத்தில் ஐசிசி இனுடைய சிறந்த துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

முதற்தர போட்டி ஒன்றிலே 1994 ஆம் ஆண்டு 501 எனும் இமாலய இலக்கினை எட்டியுள்ளார். இந்த ஓட்டங்களை பெறுவதற்கு களத்திலே 474 நிமிடங்கள் நிலைத்து நின்று 427 பந்துகளுக்கு முகம் கொடுத்துள்ளார். இதிலே பத்து ஆறு ஓட்டங்களும் 62 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளிலே அதிகபட்ச ஓட்டமான 400 ஓட்டங்களை இங்கிலாந்து எதிராக 2004 இல் பெற்றுள்ளார். இங்கு இவர் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயமாகும். அதுமட்டுமல்லாது சதம் இரட்டை சதம் முச்சதம் மற்றும் நானூறு ஓட்டங்களை பெற்ற முதலாவது வீரராவார்.

2003 ஆண்டு தென்னாபிரிக்காவின் ரொபின் பீற்றர்சன் வீசிய ஒரு ஓவரிலே 28 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் பெற்ற சாதனையினை நிகழ்த்தியிருந்தார். எனினும் இச்சாதனை 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ஜோஜ் பெய்லியால் சமன் செய்யப்பட்டது.

 

1993 ஆம் ஆண்டு ஆண்டு தைமாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலே 277 ஓட்டங்களைப் பெற்றார். இது இவரது கன்னி சதமாகும். இது இவர் ஆடிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்க்கது. இப்போட்டி சிட்னி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நாளின் ஞாபமாக தனது மகளுக்கு”சிட்னி” எனும் பெயரும் சூட்டினார்.

Brian-Lara-during-his-innings-of-277

1999இல் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக பார்படோஸில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த இன்னிங்ஸ் விஸ்டன் ஆல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இரண்டாவது துடுப்பாட்ட பேர்போமன்ஸ் (Performance) என கணிக்கப்பட்டது. முதலாவதாக ஆஷஸ் போட்டியில் 1937இல் சேர் டொன் பிரட்மன் பெற்ற 270 ஓட்டங்கள் உள்ளது.

After Match Winning Innings

சேர் டொனால்ட் பிரட்மனுக்கு அடுத்ததாக இரண்டு தடவைகள் முச்சதங்கள் எனும் சாதனையைப் படைத்தார். அதுமட்டுமல்லாது ஒன்பது தடவைகள் இரட்டைசதம் கடந்துள்ளார. பிரட்மன் பன்னிரண்டு, சங்கா பதினொரு இரட்டை சதங்களுடன் முதலிரு இடங்களில் உள்ளனர். முத்தையா முரளிதரனே ஒரு கால கட்டத்தில் கூறியிருந்தார் லாராவிற்கு பந்து வீசுவது கடினம் என்று. ஒரு அணித்தலைவராக ஐந்து தடவைகள் இரட்டைசதம் கடந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு தொடர்சியான மூன்று சதங்களை விளாசியுள்ளார்.

1994 & 1995 ஆம் ஆண்டுகளில் “Wisden Leading Cricketer in the World” எனும் விருதினையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது “ICC World XI” அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

பிரைன் லாரா ஆடிய 131 டெஸ்ட் ஆட்டங்களில் 32 போட்டிகளிலும் 299 ஒருநாள் போட்டிகளில் 139 போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.

2012 இல் ஐசிசியின் Hall of Fame இல் லாரா அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்தும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

2013 இல் MCC இன் கௌரவ வாழ்நாள் அங்கத்தவராக லாரா கௌரவம் அளிக்கப்பட்டிருந்தார். இந்த கௌரவம் பெற்ற 31வது மேற்கிந்திய தீவுகளின் வீரராவார்.

 

பேர்த்தில் அடம் கில்கிறிஸ்டின் லெஜேன்ட்ஸ் லெவன் அணி சார்பில் லாரா பிக்பாஸ் அணியான பேர்த் ஸ்கெட்ச்சேர்ஸ் அணிக்கு எதிராக ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் ரி20 போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெறுகின்ற கண்காட்சி ரி20 போட்டி ஒன்றில் பங்கெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சானைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கிரிக்கெட் உலகின் கதாநாயகர் பிரைன் சாள்ஸ் லாரா……….

சி.சாந்தகுமார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.