இலங்கை கிரிக்கட் சபையின் மாகாண கிரிக்கட் தொடரில் விளையாடும் வடக்கின் தமிழ் வீரர்கள் இவர்கள் தான்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நடாத்தும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாண மட்ட கிரிக்கெட் போட்டி தொடர் இன்று ஆரம்பமாகியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்ட ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 மைதானக்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய லகிரு குமார, பினுர பெர்னாண்டோ மற்றும் அசித மதுஷங்க ஆகிய வீரர்களும் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிய பல வீரர்களும் எதிர்கால இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவுள்ள பல திறமையான இளம் வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகின்றமை முக்கிய விடயமாகும்.
வடமாகாண அணி சார்பாக யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான கபில்ராஜ் மற்றும் யதுஷன், யாழ் இந்துக் கல்லூரி மாணவனான கஜாநாத், யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனான ரதீஷன், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவனான அஞ்சயன், மன்னார் புனித வளனர் மகாவித்தியால மாணவனாகிய சுயன் மியாஸ், கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவனாகிய ரஜீவன் மற்றும் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனாகிய டார்வின் ஆகிய தமிழ் வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாண அணியில் ஆர்.தேனுதரன், எம்.சாருகன், கே.தனுஷாந்த், ரபாஸ் ஆகிய தமிழ்பேசும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அத்தோடு மத்திய மாகாண அணியில் முன்னாள் 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணி வீரர் ச.சங்கீத், மொதமட் அல்பர் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகிய வீரர்களும், ஊவா மாகாண அணியில் மொஹமட் சமாய், எஸ். கோபிநாத் ஆகிய தமிழ்பேசும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த போட்டிகளில் மிக திறமையாக விளையாடி இலங்கையின் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட விளையாட்டு.கொம் அன்போடு வாழ்த்துகின்றது.
