தன்னிகரில்லா தனிப்பெரும் தலைவன் மகேந்திரசிங் டோணி..!!
இந்த கிரிக்கட் உலகம் எவ்வளவு அழகானது என்பது அதை சிறு வயது முதல் அதை ரசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். கிரிக்கட் பார்ப்பதற்காக எத்தனை அடிகள் எத்தனை கசப்பான வார்த்தைகளை கடந்து வந்திருப்போம். அத்தனைக்கும் காரணம் இந்த கிரிக்கட் மீதான காதல் தானே.
தனி நபர் விருப்பங்கள் வேறுபட்டவை. இதன் மேல் தான் விருப்பம் வைக்க வேண்டும் என்று திணிக்கப்பட முடியாதவை. அந்த வகையில் இந்திய கிரிக்கட் அணியை உயிராக நேசிக்க காரணமான மகேந்திர சிங் டோணி எனும் தலைவன் பற்றிய பார்வை.
ஒரு கிரிக்கட் வீரனாக ஆரம்பகாலம் முதல் இன்று வரை டோணி சாதித்தவை பல உலகறிந்த விடயம். முதல் போட்டியில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்த டோணி அடுத்து 42 போட்டிகளில் ஒரு நாள் போட்டி தரப்படுத்தலில் அத்தனை முன்னணி வீரர்களையும் பின் தள்ளி சர்வதேச ரீதியில் முதலிடத்தை பிடித்துக்கொள்கின்றார்.
மிக குறைந்த போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தவர் என்கின்ற சாதனை இன்று வரை டோணிக்கே சொந்தமாக இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் அதிரடியில் கலக்கிய டோணி பல ரசிகர்கள் மனங்களில் ஹலிகப்டர் எனும் ஆட்ட முறை மூலம் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விடுகின்றார். டோணி அவுட் ஆகவில்லை என்றால் எதிரணி முகத்தில் பயம் தெரியும்.
ஆரம்ப காலம் முதலே அணிக்காக அர்பணித்து விளைாயாடும் வீரனாக அனைவர் மனங்களையும் கவர்ந்து விடுகின்றார்.
2007ம் ஆண்டு T20 உலக கிண்ண தொடருக்கா பல விமர்சனங்கள் மத்தியில் அணித்தலைவராக தேர்வு செய்யப்படுகின்றார் டோணி. மிக குறுகிய காலத்தில் தொடர் தொடங்குகின்றது. 2007ம் ஆண்டு 50 – 50 உலகக்கிண்ணத்தை பறிகொடுத்த வலிமையான இந்திய அணியின் மேலே நம்பிக்கை இழந்த நிலையில் இந்த டோணி தலைமையிலான இளம் அணி மேல் விமர்சனத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
தனது உயர்ந்தபட்ச தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய மகேந்திரசிங் டோணி அத்தனை விமர்சனங்களையும் தகர்த்தெறிந்து முதல் உலக T20 கிண்ணத்தை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுக்கிறார். உலகமே அந்த இளம் தலைவனின் தலைமைத்துவத்தை கண்டு மெய்சிலிர்த்துப்போகின்றது.
அடுத்து தொடர் வெற்றிகள் மூலம் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவனாக நியமிக்கப்படுகின்றார் டோணி. இந்திய அணியின் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது. எங்கும் டோணி தலைமையில் வெற்றிக்கொடி பறக்கிறது.
2011ம் ஆண்டு உலக்கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கின்றது. சொல்லி நிறுத்தும் களத்தடுப்புகள், கண நேரத்தில் மாற்றும் முடிவுகள் என் அத்தனையிலும் கலக்கிய மகேந்திர சிங் டோணி சிக்சராய் வானத்தில் பறக்க விடுகின்றார் ரசிகர்கள் மனதினை. கோடி ரசிகர்கள் ஆர்ப்ரிக்கின்றனர் எங்கும் டோணி! டோணி! டோணி! சத்தம் அதிரவைக்கின்றது. முதல் உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டோணி பற்றி சாதனை நாயகன் சச்சின் மனமகிழ்ந்து சொல்கிறார் டோணி போல தலைவன் இல்லை என்று. சிறு வயது முதல் சச்சினை ரசித்து வளர்த்த டோணிக்கு இது கோடி விருதுக்கு சமன் அல்லவா.
சக வீரர்களை மிகுந்த மரியாதையாக நடத்தும் டோணி ஒரு பொழுதும் தன் சுய நிலையில் தடுமாற்றம் கொண்டதில்லை. ஒரு தலைவனிற்கான தலைமைத்துவ பண்பு அத்தனையும் கைவரப்பெற்றவர். வெற்றிகளில் ஆடியதில்லை தோல்விகளால் அடங்கி போனதில்லை. என்றும் அமைதியாக வழிநடத்தும் இயல்பு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
விக்கட்டிற்கு பின்னரான சாம்ராஜ்யம் அது. அந்த கை அசைவுகள், சடுதியில் மாறும் பார்வைகள் என அமைதியாக மிரட்டுவார் டோணி. விக்கட் காப்பாளர் எனும் நிலையில் டோணி இருந்தால் துடுப்பாட்ட காரரின் கால் கோட்டை தாண்ட அஞ்சும் மீறி தாண்டினால் அவரின் நிலை பரிதாபம். மின்னலை விட வேகமான ஸ்டம்பிங் என்று புகழும் அளவிற்கு டோணியின் திறமை அசாத்தியமானது.
தனது நிதானம் கலந்த அதிரடி மூலம் பல வெற்றிகள் வசமாகின்றது. முதன் முதலாக இந்திய அணியினை அனைத்து வகையான போட்டிகளிலும் முதலிடத்திற்கு நகர்த்தி தன் தலைமைத்துவத்தின் வலிமையை நிரூபிக்கிறார் டோணி.
2013ம் ஆண்டு சம்பியன் உலக்கிண்ண தொடரிலும் தனது அசாத்தியமான தலைமைத்துவம் மூலம் கிண்ணத்தை வென்று கொடுக்கிறார் டோணி. கிரிக்கட்போட்டிகளை தலைமை தாங்கிய 400ற்கு மேற்பட்ட தலைவர்களில் அனைத்து வகையான உலக்கிண்ணத்தையும் வென்றவர் என்ற பெருமை உலகத்தில் ஒருவருக்கு தான் இருக்கிறது அவர் தான் மகேந்திரசிங் டோணி.
இத்தனை மாபெரும் சாதனைகளுக்கும் சொந்தமான டோணியின் வாழ்க்கை என்றும் வெற்றியால் மட்டும் நிறைந்ததல்ல. கடும் தோல்விகள். குத்தி கிழிக்கும் விமர்சனங்கள் என வலிகள் அதிகம். அத்தனையையும் தன் நம்பிக்கையால் தகர்த்தெறியும் ஒரு வீரன் இனிமேல் டோணி போல் சத்தியமாய் சாத்தியமில்லை.
உயிர் ரசிகன்
#க.அஞ்சலன்.
