#ICC Champions Trophy

8 அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி கற்றுத் தந்த பாடம்… ப்ளஸ், மைனஸ் அலசல்! #CT17

ட்டாவது சாம்பியன்ஸ் டிராபிக்கான 18 நாள் யுத்தம் முடிந்தது. இதுவரை நடந்ததிலேயே மிகவும் த்ரில்லான ஐசிசி தொடர் இது. `இந்த அணிகள்தான் அரை இறுதி வரும்’,  `இந்தியா – பாகிஸ்தான்தான் இறுதியில் மோதும்’, `பாகிஸ்தான், வரலாறு படைக்கும்’ என்றெல்லாம் எவரும் உறுதியாகக் கணிக்கவில்லை. அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, பல அதிர்ச்சி முடிவுகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளித்தந்திருக்கிறது இந்தத் தொடர்.

சோகம், அழுகை, சஸ்பென்ஸ், போராட்டம், வியூகம், அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆவேசம், உற்சாகம் என எல்லாவற்றையும் கலந்து கட்டிய காக்டெயில் மாஸ் மசாலா சினிமாவாக நடந்து முடிந்திருக்கிறது சாம்பியன்ஸ் டிராபி தொடர். `உங்கள் நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் அடுத்த தலைமுறைக்கு வழிவிடுங்கள்’ என, சிலருக்கு உணர்த்தியிருக்கிறது. `இனி நீங்கள்தான் கிரிக்கெட் உலகை ஆளப்போகிறவர்’ என சிலரை அடையாளம் காட்டியிருக்கிறது. நிச்சயமாக மிகச்சிறப்பான தொடர். ஆரோக்கியமான கிரிக்கெட்டை  விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் பெருந்தீனி போட்டது. பெரும்பாலான போட்டிகள் ஒரு சார்புள்ளவகையாக நடந்து முடிந்தாலும், எந்த அணிக்கும் தொடர் சாதகமாகிவிடாமல் அத்தனை அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள தொடராக நடந்து முடிந்தது. பலசாலி  என எவரும் இல்லை. சிறு எறும்புக்குக்கூட யானையை அலறவைக்கும் திறமை இருக்கிறது என உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. கத்துக்குட்டி அணிகளுக்குக்கூட தன்னம்பிக்கையை  அள்ளி ஊட்டியிருக்கும் இந்தத் தொடரைப் பற்றி விரிவாகப் பேச பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இங்கே ஒவ்வோர் அணியின் பெர்ஃபாமன்ஸைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

வங்கதேசமும், பாகிஸ்தானும் எழுச்சி கண்ட அணிகள். இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடின. ஆஸ்திரேலியாவின் கனவை மழை கெடுத்தது. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. ஆசிய கண்டத்துக்கு அப்பால் நடந்த தொடர்களில் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியது ஆச்சர்யமான  நிகழ்வு. எந்த அணிகள் எங்கே சறுக்கின… எங்கே தடுமாறின… எங்கே சிலிர்த்தெழுந்தன… எங்கே வெற்றிக்கோட்டைத் தொட்டன?

நியூசிலாந்து :

இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையில் ரன்னர் பட்டம் வென்ற நியூசிலாந்து அணியால், இந்த முறை லீக் சுற்றையே தாண்ட முடியவில்லை. இந்தத் தொடரில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் முதன்மையானது நியூசிலாந்து. வில்லியம்சன் அணி இப்படி ஏமாற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு நன்றாகவே இருந்தது. 291 ரன்களைத் துரத்திய ஆஸ்திரேலியாவை, முதல் பத்து ஓவர்களுக்குள் கழுத்தில் கத்தி வைத்து அடக்கியது நியூசிலாந்து. ஒன்பது ஓவர்களில் 53/3 என ஆஸ்திரேலியா தடுமாறியபோது மழை வந்தது. அன்று பெய்த மழை நியூசிலாந்தின் கனவை அடியோடு தகர்த்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் கடைசி 37 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. பேட்டிங் வரிசையை மாற்றாமல் இங்கிலாந்துடன் விளையாடினார் கேன் வில்லியம்சன்.  பெளலிங், பேட்டிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் இங்கிலாந்திடம்  தோற்றது நியூசிலாந்து. வங்கதேசத்துடன் ஏற்கெனவே பல போட்டிகளில் தோற்றும்கூட அலட்சியமாக ஆடியது நியூசிலாந்து. விளைவு,  படுதோல்வி!

கேன் வில்லியம்சன்

இந்தத் தொடரில் கேன் வில்லியம்சன், தனி ஒருவனாகப் போராடினார்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுத்தார்; இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை நெருங்கினார்; வங்கதேசத்தோடு விளையாடியபோது அரை சதம் எடுத்தார். 90-களின் மத்தியிலும் இறுதியிலும் `சச்சின் விக்கெட்டைத் தூக்கினால், இந்தியா காலி’ என்றொரு நிலை இருந்தது. இப்போது வில்லயம்சனை அவுட்டாக்கினால் நியூசிலாந்தை முடக்கிவிடலாம் எனும் சூட்சமத்தை, விளையாடிய மூன்று அணிகளும் உணர்ந்துகொண்டன. அந்தத் திட்டப்படி நியூசிலாந்தைப் போட்டுத்தாக்கின.

பேட்டிங்கில் அணியைத் தூக்கி நிறுத்திய பாகுபலியாக இருந்த வில்லியம்சன்,  கேப்டன்சியில் சிவகாமிபோல செயல்பட்டார். அது அணிக்கு பெரும் பின்னடைவாக முடிந்தது. நன்றாக விளையாடிக்கொண்டிருந்த டாம் லாதத்தை வெளியே உட்காரவைத்தார். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிய நீல் ப்ரூமூக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தார். சமீப காலங்களில் நியூசிலாந்து அணிக்கு மேட்ச் வின்னராகத் திகழ்ந்த கொலின் டீ கிரான்ட்ஹோமை பிளெயிங் லெவனில் எடுக்கவில்லை. ஐபிஎல்-லில் கலக்கிய மெக்லாகனுக்கு வாய்ப்புகளே தரவில்லை.

கோரே ஆண்டர்சன், நீல் ப்ரூம், ஜேம்ஸ் நீஷம், மிச்செல் சான்ட்னர் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார் வில்லியம்சன். ஆடிய மூன்று போட்டிகளிலும் ஒரே அணியே விளையாடியது. வில்லியம்சனின் திடீர் பிடிவாதம் அணிக்குப் பாதகமாக அமைந்தது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரை இறுதி வரையாவது முன்னேற வேண்டும் எனில், கேன் வில்லியம்சன் தன் கேப்டன்சியை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

ஆஸ்திரேலியா :

`பேட்டிங் துறை நிலையற்றத்தன்மையோடு இருப்பதையும், அரை இறுதிக்குத் தகுதிபெறுவதே பெரும்சவால்தான்’ என சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு – மினி தொடரில் எழுதியிருந்தோம். அதை அப்படியே நிரூபித்துவிட்டது ஆஸ்திரேலியா. பந்துவீச்சும் சுமாராகவே இருந்தது. மழையும் ஆஸ்திரேலியாவுக்குப் பாதகம் செய்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் சாம்பியன் ஆக ஆசைப்படும் அணி நேர்த்தியாக விளையாடியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியிருக்கிறது ஆஸ்திரேலியா. நியூசிலாந்துடனான போட்டியில் மழையால் தப்பித்தது, வங்கதேசத்துடனான போட்டியில் மழையால் நொறுங்கிப்போனது. இங்கிலாந்துடனான போட்டியில் தெளிவாகத் தோற்றது.

ஆஸ்திரேலிய அணி

2009- ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாவின் ஆட்சி மங்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் எல்லா அணிகளுமே சொந்த ஊரில் சிறப்பாகவே ஆடுகின்றன. அயல் மண்ணில் அவமானகரமான தோல்வியடைவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இப்போதுள்ள ஆஸ்திரேலியா அணி பல் பிடுங்கப்பட்ட பாம்புபோன்றது. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தன் மண்ணில் நடந்த அத்தனை போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்துடனான போட்டியை நியூசிலாந்து மண்ணில் ஆடியபோது படுதோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்தும் ஆஸ்திரேலிய அணியைப்போலவே சொந்த மண்ணில் அத்தனை போட்டிகளையும் வென்றது. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் ரன்னராக ஒதுங்கிக்கொண்டது.

ஆகையால், 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாகக் கருத முடியாத வகையிலேயே விளங்கியது. சாம்பியன்ஸ் டிராபியில் வாங்கிய மரண அடியிலிருந்து  அந்த அணி மீள்வது அவ்வளவு எளிதல்ல. 2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றதற்குப் பிறகு இந்த எட்டு ஆண்டுகளில் நடந்து முடிந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபிகளிலும் இன்னமும் ஒரே ஒரு போட்டியில்கூட ஆஸ்திரேலியா வெல்லவில்லை என்பது பெருந்துயரம். பழைய பன்னீர்செல்வமாக வரவேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்தத் தொடரின் முடிவில் அந்த அணியின் கேப்டனும், பயிற்சியாளரும், அணி நிர்வாகமும் உணர்ந்திருக்கும்.

இலங்கை :

`பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். இலங்கையைப் பொறுத்தவரையில் நஷ்டம் எதுவுமில்லை. ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டியும்  லாபம். எத்தனை கட்டத்தைத் தாண்டுகிறது என்பதையும்தான் பார்க்கத்தானேபோகிறோம்’ – இந்த வரிகள் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புகுறித்து மினி தொடரில் குறிப்பிட்டிருந்தவை.

இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு சவால்விடும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, பாகிஸ்தானிடம் சரணடைந்தது. ஆனால், இந்தியாவை விரட்டியடித்தது. அந்த ஒரு மேட்ச், இலங்கைக்கு தன்னம்பிக்கையைத் தந்திருக்கிறது. டிக்வெல்லா, அசேலா குணரத்னே, குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா போன்றோருக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு யார் யாரை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்நேரம் கண்டுபிடித்திருக்கும். தொடர்ந்து கடுமையாக உழைத்து ஃபீல்டிங், சுழற்பந்து உள்ளிட்ட ஏரியாக்களில் கூடுதல் கவனம் செலுத்தினால்,  இந்தத் தொடரில் பாகிஸ்தான் செய்த மேஜிக்கை, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கையாலும் நிகழ்த்த முடியும்.

தென் ஆப்பிரிக்கா :

சாம்பியன் ஆகத் தகுதியான அணி. எனினும் நாக்அவுட் போட்டிகளில் சொதப்பும் என்பதால், அரை இறுதிக்குப் பிறகு வெற்றி வாய்ப்பைக் கணிப்பது சிரமம் என்றே கருதப்பட்டது. ஐசிசி தொடர்களில் எப்போதுமே ரசிகர்களின்  எதிர்பார்ப்புக்கு மாறாக விளையாடுவது தென் ஆப்பிரிக்காவின் வழக்கம். `இறுதிப் போட்டிக்குச் செல்வதும், கோப்பையை வெல்வதும்தான் சிரமமாக இருக்கப்போகிறது’ எனப் பலரும் எதிர்பார்க்க, `நாங்க அரை இறுதிக்குத் தகுதிபெறுவதே சிரமம்தான் அய்யா’ என புது டிவிஸ்ட் வைத்தது  டிவில்லியர்ஸ் அணி.

ஏபி டி வில்லியர்ஸ்

இந்த முறை தென் ஆப்பிரிக்காவுக்குக் கிடைத்த அணி அற்புதமானது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என சகல வகைகளிலும் சிறப்பான வீரர்கள் இருந்தார்கள். டிவில்லியர்ஸ், `இந்த முறை நாங்கள் நிச்சயம் சாம்பியன் ஆவோம்’ என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், இப்படியொரு மோசமான தொடரில் பங்கேற்கப்போகிறோம் என்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாக்அவுட் சுற்றில் சொதப்பிய வரலாறு தென் ஆப்பிரிக்காவை மனரீதியாக தன்னம்பிக்கையைக் குலைப்பதுபோல தெரிகிறது. அத்தனை வீரர்களும் தயக்கமாகவே ஆடினார்கள். மில்லர், ரபடா, மோர்கல் தவிர வேறு எந்த வீரரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானுடனான தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இந்தியாவிடம் அடைந்த படுதோல்வி தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஆறாத ரணம். போராட்ட குணமின்றி படுத்தேவிட்ட தென் ஆப்பிரிக்கா, மீண்டும் சிலிர்த்தெழும். ஆனால், திரும்பத் திரும்பத் தன்னம்பிக்கையின்றி நாக்அவுட்டில் பங்கேற்றால், 2051-ம் ஆண்டில்கூட தென் ஆப்பிரிக்காவால் சாம்பியன் ஆக முடியாது. ஒரு பலசாலி, வாழ்க்கையின் முக்கியமான சமயங்களில் என்னென்ன தவறுகளை எல்லாம் செய்யக் கூடாது என்பதை தென் ஆப்பிரிக்காவைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற அணிகள் எல்லாமே இந்தத் தொடரிலிருந்து ஏதாவதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே விளையாடிய தொடர்களிலிருந்தே ஒழுங்காக பாடம் கற்கவில்லை. எனவே, புதிதாக எதையும் கற்கவில்லை. தென் ஆப்பிரிக்கா செய்தத் தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருந்தால்,  அது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாலும், உலகின் நம்பர் 1 பெளலராலும்கூட தன்  அணியைக் காப்பாற்ற முடியாது என்பதே மற்ற அணிகள் தென் ஆப்பிரிக்காவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இங்கிலாந்து :

கெளரவமான தோல்வியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கோப்பையை வெல்லும் அணிகளில் இங்கிலாந்து முக்கியமானதாகக் கருதப்பட்டது. லீக் சுற்றில் வங்கதேசத்துடன் கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடி போட்டியை வென்றது. நியூசிலாந்தை நையப்புடைத்தது. ஆஸ்திரேலியாவை நேர்த்தியாக வென்றது. அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கே செல்ல முடியாமல் வெளியேறியது இங்கிலாந்து.

இங்கிலாந்து, இந்தத் தொடரில் நன்றாகவே ஆடியது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் எல்லாமே ஓரளவு நன்றாகவே இருந்தது. பாகிஸ்தானுடனான போட்டி நடந்த அன்று சரியாக ஆடவில்லை. அன்றைய தினம் பாகிஸ்தானுக்கானதாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்தில் தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியதே. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு அணியைத் தயார்செய்வதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்திருக்கிறது இங்கிலாந்து. இதே ஃபார்மை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தக்கவைத்தால், 44 வருட சோகத்துக்குப் பிறகு உலகக்கோப்பையை முதன்முதலில் தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி

வங்கதேசம் :

`உலகில் கோப்பைகளை வெல்ல, ஓடவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆமை வேகமா, புலிப்பாய்ச்சலா என்பதை முடிவுசெய்யவேண்டியது வங்கதேச வீரர்கள்தான்’  – வங்கதேச அணி குறித்த பார்வையில் இப்படி எழுதியிருந்தோம். இந்த சாம்பியன்ஸ் தொடரில் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது வங்கதேசம். இனி ஓடவேண்டியது அவசியம். ஆனால், உசேன் போல்ட் வேகத்தில் ஓடினால் மட்டுமே 2019-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வெல்ல முடியும்.

இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக ஆடிய வங்கதேசம், பெளலிங்கில் சில தவறுகளைச் செய்ததால் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மழையின் புண்ணியத்தால் படுதோல்வியிலிருந்து தப்பித்தது. நியூசிலாந்துடனான போட்டியில் சேஸிங்கில் வென்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தத் தொடரில் சுவாரஸ்யமாக இருந்த ஒரே ஒரு போட்டி வங்கதேசம் – நியூசிலாந்து இடையிலான போட்டிதான். அரை இறுதியில் இந்தியாவுடனான போட்டியில் சற்றே தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டனர் வங்கதேச வீரர்கள்.

அரை இறுதி வரை வந்ததிலேயே திருப்திப்பட்டுக்கொண்டதால் இந்திய வீரர்கள் அடித்த அடியில் சின்னாபின்னமாகியது வங்கதேசம். ஒரு தொடரை வெல்ல வேண்டுமெனில், எப்படி ஃபார்மை கடைசிவரை தக்கவைக்க வேண்டும்; எந்தெந்த வீரர்கள் பெரிய தொடர்களில் பங்கேற்பதற்கு உகந்தவர்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நேரம்  அனுபவத்தால் விடை கண்டுபிடித்திருக்கும்  வங்கதேசம்.  அந்த அனுபவம், இனிவரும் காலங்களில் வங்கதேசத்தைப் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

பாகிஸ்தான் :

பங்காளிகள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். லீக் சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் தோற்றபோது `ம்ஹூம் தேறாது’ எனப் பலரும் முடிவுசெய்திருந்தார்கள். அந்த நேரத்தில்தான் சர்ப்ராஸ்கான் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.  `கனவுகள் நொறுங்கிவிடவில்லை… இன்னமும் வாய்ப்புகள் இருக்கின்றன’ என உறுதியாகச் சொன்னார். அவரின் வார்த்தைகளை  இறுகப் பற்றிக்கொண்டனர் மீதி 14 பேர்.

இந்தியாவுடன் பாகிஸ்தான் லீக் சுற்றில் விளையாடிய போட்டியையும், தென் ஆப்பிரிக்காவுடன் லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய போட்டியையும் நீங்கள் முழுவதுமாகப் பார்த்து அசந்துபோயிருப்பீர்கள். கம்பத்தில் கட்டிவைத்து இந்தியா தோலை உரித்த பிறகு பாட்சாவாக மாறிய டிரான்ஸ்ஃபர்மேஷன் வாவ்! `ஒருகாலத்தில் நாங்க எப்பேர்ப்பட்ட அணி தெரியுமா? எங்களது வேகப்பந்தின் பலம் தெரியுமா?’  என இந்தத் தலைமுறை ரசிகர்களிடம் கேள்வி கேட்டது மட்டுமின்றி, 25 வருடங்களுக்குப் பிந்தைய பாகிஸ்தான் அணியையும் நினைவுபடுத்தியது.

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான்  அணி

இந்தியாவுக்கு எதிராக கேட்ச் விட்டு, பெளலிங்கில் சொதப்பிய ஹசன் அலி , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பெளலிங்கில் விக்கெட்டுகளை அள்ளி ஆர்ப்பரித்தார்; அருமையாக ஃபீல்டிங் செய்து கேட்ச்களைப் பிடித்துக் கொக்கரித்தார். தென் ஆப்பிரிக்கா நானூறு ரன்களை விளாசக்கூடிய அருமையான பேட்டிங் வரிசை வைத்திருந்தது. அந்த அணியை 219 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவும் விடாப்பிடியாகப் போராடியது. ஆனால், அமைதியாக இருந்து எங்கே திமிறி எழ வேண்டுமோ அந்தத் தருணத்தில் சரியாகத் திமிறி எழுந்து தென் ஆப்பிரிக்காவை வெற்றிகொண்டது. இலங்கை ஃபீல்டர்கள் புண்ணியத்தால் எளிதில் ஜெயித்துவிட்டு அரை இறுதியில் இங்கிலாந்தைச் சந்தித்தது. பலசாலி இங்கிலாந்திடம் ‘என் பெளன்சர்களுக்கும் ஷார்ட்பிட்ச் பந்துகளுக்கும் விடை சொல்லிவிட்டு இறுதிப்போட்டிக்குள் நுழை’ என்பதுபோலிருந்தது பாகிஸ்தானின் பெளலிங். 211 ரன்களுக்குள் சுருண்ட அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீள்வதற்குள் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கற்றுக்கொண்டிருந்த மொத்த வித்தையையும் இறக்கியிருந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்கள், ஃபினிஷர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்ய ஓப்பனிங் ஸ்பெல், சுழற்பந்து அட்டாக், துடிப்பான ஃபீல்டிங், நல்ல கேப்டன்சி என மற்றவர்களும் தங்களது பணியைச் சரியாகச் செய்தார்கள். ஊர் கூடி தேர் இழுத்தது பாகிஸ்தான். அது அற்புதமான வெற்றி. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வெற்றி. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் புது இன்னிங்ஸ் ஆரம்பித்திருக்கிறது.

இந்தியா :

முதல் போட்டியில் பாகிஸ்தானை நேர்த்தியாக ஆடி வென்றது இந்திய அணி. இலங்கையுடன் மோசமாகத் தோற்றது. தென் ஆப்பிரிக்காவுடனான வெற்றியில் நியாயமிருந்தது. வங்கதேசத்தை நொறுக்கியது. கடைசியில் பாகிஸ்தானிடம் பணிந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை எல்லா வகையிலும் வென்றது. அது இந்தியாவுக்கு ஒரு மோசமான நாள் அவ்வளவே!

கோப்பையை வெல்லும் எனக் கருதப்பட்ட மூன்று அணிகளில் ஒன்று, மறைமுகக் காலிறுதியில் வெளியேறியது. இன்னொன்று அரை இறுதியில் வெளியேறியது. இந்தியா இறுதிப்போட்டி வரை வந்து ரன்னர் ஆகியிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரையில் வின்னரிலிருந்து ரன்னர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இதற்காக பதற்றப்படத் தேவையில்லை. இந்தத் தொடரிலிருந்து இந்தியாவுக்கு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் கிடைத்திருக்கின்றன.

 

 

 

ஷிகர் தவான்

நன்றி விகடன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.