India

உலககிண்ண போட்டிகளின் உணர்ச்சிப் பெருக்கு…! ரசிகனின் பார்வை

உலககிண்ண போட்டிகளின் உணர்ச்சிப் பெருக்கு…!

ரசிகனின் பார்வை

அந்த சம்பவம் நடந்து நேத்தோட 23 வருஷம் முடிஞ்சிருச்சு. கிரிக்கெட் வெறும் விளையாட்டுங்கிறதை தாண்டி அது நம்ம மனசுல ரொம்ப ஆழமா வேரூன்றி நிக்கிற ஒரு விஷயம்ன்னு நான் புரிஞ்சிகிட்ட ஒரு தருணம்னு சொல்லலாம்.

1996 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியால நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஏன்னா சச்சின் தன்னோட பெஸ்ட் ஃபார்ம்ல இருந்த நேரம் அது. இந்தியாவே அவர் பேரை மந்திரம் மாதிரி உச்சரிச்சிகிட்டு இருந்தது. அதுக்கேத்த மாதிரி உலகக்கோப்பையோட ஆரம்பத்துல இருந்தே சச்சின் அட்டகாசமா விளையாடிக்கிட்டிருந்தாரு. அவரோட உலகக்கோப்பை தாகம் உச்சத்துல இருந்த நேரமும் கூட. அது அவர் விளையாடுற ஒவ்வொரு மேட்சிலேயும் உணர முடிஞ்சது. ஆனா இந்த கட்டுரையோட நோக்கம் சச்சின் இல்ல. இன்னொருத்தர்.

 

சச்சினை விட ஒரு வயசு மூத்தவர். ஸ்கூல்ல சச்சினோட படிக்கும்போது 664 ரன் பார்ட்னர்ஷிப் வச்சி அடிச்சவர். இந்த சம்பவம் நடந்த மூணு வருஷம் கழிச்சி தன்னோட முதல் ரஞ்சி டிராபி மேட்ச்-ல தான் சந்திச்ச முதல் பந்துலயே சிக்ஸர் அடிச்சவர். உருவம், நிறம், கழுத்துல நிறைய செயின் எல்லாம் போட்டுக்கிட்டு இவர் உள்ள இறங்குறதை பார்த்தா இந்தியக்காரனா இல்ல வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனான்னு சந்தேகம் வரக்கூடிய உடல்மொழியை கொண்டவர். வினோத் காம்ப்லி.

உண்மையை சொல்லனும்னா அந்த நேரத்துல சச்சினோட கம்பேர் பண்றப்போ (சச்சினோட யாரையும் கம்பேர் பண்ற அளவுக்கு இப்போ இங்க யாருமில்லைங்கிறது எனக்கு தெரியும்னாலும் கூட..) காம்ப்லிக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாங்க. சச்சின் வர்ற பூஸ்ட் விளம்பரத்தை விட காம்ப்லி வர்ற விளம்பரம் ரொம்ப நல்லா இருக்கும். காம்ப்லியோட பேட்டிங்க்ல ஒரு கவர்ச்சி இருக்கும். இடது கை ஆட்டக்காரர்ங்கிறதால ஒரு ஸ்பெஷல் அட்டென்சன் இருக்கும். ஆனா இந்த உலகக்கோப்பை ஆரம்பிக்கும்போது காம்ப்ளி சுத்தமா ஃபார்ம்லயே இல்ல. இன்னும் சொல்லப்போனா இந்த கருவாயனை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கானுங்கன்னு என் சித்தப்பாவே சொல்லி நான் கேட்டிருக்கேன்.

கென்யாவோட முதல் போட்டியில காம்ப்லி எடுத்தது வெறும் ரெண்டு ரன். ஆனா வெஸ்ட் இண்டீஸோட நடந்த ரெண்டாவது மேட்ச்-ல 33 ரன் அடிச்சி நாட் அவுட்டா இருந்தாரு. அது லோ ஸ்கோரிங் மேட்ச். 174-தான் டார்கட். சச்சின் வழக்கம்போல 70 ரன் அடிச்சாரு. ஆனா அடுத்த நடந்த முக்கியமான ஆஸ்திரேலியா மேட்ச்-ல காம்ப்லி டக் அவுட் ஆனார். ரொம்ப நாள் கழிச்சி அவரை அந்த மேட்ச்-ல ஒன் டவுனா இறக்குனாங்க. ஆனா அதை யூஸ் பண்ணிக்கல. வெறும் 16 ரன்ல தோத்தோம். சச்சின் அதுலயும் 90 ரன் அடிச்சிருந்தாரு.

 

அடுத்த மேட்ச் இலங்கை கூட. சேசிங்-ல ஒரு புரட்சியே பண்ணிட்டிருந்தாங்க ஸ்ரீலங்கா. அந்த மேட்ச் சச்சின் 100 அடிச்சாரு. 270+ சேசிங் டார்கெட். இலங்கை அசால்ட்டா அடிச்சாங்க. காம்ப்லி மொத்தமே ஒரு பால்தான் மீட் பண்ணாரு. ஆனா இந்த இடத்துல எங்களுக்கெல்லாம் காம்ப்லி மேல லைட்டா நம்பிக்கை வர ஆரம்பிச்சிருந்தது. இந்த மொத்த டீமே ஒரு நல்ல ஃபார்ம்ல இருக்குற மாதிரியான நம்பிக்கை கிடைச்சது. அஜய் ஜடேஜா மேல பெரிய நம்பிக்கை இந்த உலகக்கோப்பை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தது. ஆனா அவர் வரிசையா சொதப்பிக்கிட்டு இருந்தாரு. அதுவேர் இல்லாம அவரை ஒருநாள் ஓப்பனிங் இறக்குறது.. அப்புறம் ஆறாவது விக்கட்டுக்கு அப்புறம் இறக்குறதுன்னு நிறைய காமெடி வேற நடந்துக்கிட்டு இருந்தது. ஆனா அப்போ இந்தியால இருந்த அதிரடி பேட்ஸ்மேன்-ல ஜடேஜா முக்கியமான ஆளு.

அடுத்து நடந்த ஜிம்பாபவே மேட்ச்-ல சச்சின் 3 ரன்ல அவுட் ஆகி போயிற, சித்துவும், காம்பிளியும் அடி வெளுத்தாங்க. காம்ப்லி செஞ்சுரி அடிச்சாரு. அவர் செஞ்சுரி அடிச்சிட்டு ஹெல்மெட்டை கழட்டுனப்போ அவர் கண்கள்ல கண்ணீர் இருந்ததை எத்தனை பேர் கவனிச்சிருப்பாங்கன்னு தெரியல. ஆனா அது உண்மை. அடுத்து நடந்த பாகிஸ்தான் மேட்ச்-ல 24 ரன் அடிச்சாரு காம்ப்லி. அந்த மேட்ச் நல்லபடியா ஜெயிச்சதால பெருசா எந்த பிரச்சினையும் இல்ல. இதோ அடுத்த மேட்ச் செமி பைனல்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா கூட லீக் ஸ்டேஜ்-ல தோத்திருக்கோம். காயம்பட்ட சிங்கத்தோட கர்ஜனை வசனமெல்லாம் அப்போவே பேசிட்டிருந்தோம். அதுக்கேத்த மாதிரியே ஸ்ரீநாத் அட்டகாசமா பவுலிங் போட்டு முதல் மூணு விக்கட்டை ஈஸியா எடுத்தாரு. ஆனா டீ சில்வாவும், மஹாநாமாவும் நின்னு அடிச்சாங்க. பெரிய ஸ்கொர் ஒன்னும் இல்ல. ஜஸ்ட் 250+. சச்சின், சித்து,காம்ப்ளி இவங்க இருக்குற ஃபார்ம்க்கு, அதுபோக அஷாருதீன், ஜடேஜான்னு நல்ல பிளேயர்ஸ் இருந்ததால ரொம்ப தைரியமா இருந்தோம்.

சித்து சீக்கிரம் அவுட் ஆயிட்டாலும் கூட, சச்சினும், மஞ்சரேக்கரும் சேர்ந்து நல்லாதான் விளையாடிகிட்டு இருந்தாங்க. ஆனா 65 ரன் எடுத்திருந்தப்போ சச்சின் அவுட் ஆனார். அதுக்கப்புறம் நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ மேஜிக் மாதிரி இருந்தது. பிளாக் மேஜிக்ன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். எல்லாருக்குமே பேட்டிங் பண்றது எப்படின்னு மறந்து போனமாதிரி அவுட் ஆகிட்டு போனாங்க. அஞ்சாவது விக்கட்டுக்கு இறங்குன காம்ப்லி மட்டும் அப்படியே எதிர்ல நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்குறாரு. அதுலயும் ஜடேஜா அவுட்டான விதத்தை எல்லாம் என்னால கனவுல கூட மறக்கமுடியாது.ஜெயசூர்யா பால் போடுறாரு. முட்டி போட்டு அதை சுவீப் பண்ண ஜடேஜா ட்ரை பண்ண, அது பின்னாடி வழியா போயி ஸ்டெம்ப்ல அடிச்சது. நான்லா ஸ்டன் ஆயிட்டேன். மிச்சம் இருந்தது மோங்கியா மட்டுந்தான். ஏன்னா என்னைக்காவது ஒருநாள் திடீர்னு நல்லா விளையாடுவாரு. காம்ப்லிக்கு ஜஸ்ட் கம்பெனி கொடுத்தா போதும்ன்னு எங்க எல்லாருக்கும் தோணுது. ஆனா அது நடக்கல.

தண்ணி பாட்டிலை க்ரவுண்டுக்குள்ள ஏறிய ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் ஒரு கால்மணி நேரம் என்னென்னவோ நடக்குது. டிவியை ஆப் பண்ணுங்கடான்னு சொல்லிட்டு எங்க சித்தப்பா சுருட்டு குடிக்க வெளிய போயிட்டாரு. நானு, எங்க அண்ணனுங்க எல்லாரும் என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம்னு உக்காந்திருக்கோம். யாருக்கும் இங்கிலீஷும் தெரியாது. கமென்டேடர் ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காரு. அந்த குரல் ஏதோ மிகப்பெரிய துக்கம் நடந்ததை ரேடியோல நியூஸா படிக்கும்போது ஒரு டோன் இருக்குமே.. அதுமாதிரி இருந்தது. கொஞ்சநேரத்துல காம்ப்ளியும், கும்பிளேவும் பிட்சை விட்டு கிளம்பி பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாங்க. எங்களுக்கு அப்போதான் புரியுது. மேட்ச் நிப்பாட்டிட்டாங்க. இந்தியா தோத்ததா அறிவிச்சிட்டாங்க.

காம்ப்லி அப்படிங்கிற அந்த மனுஷன் ஹெல்மட்டை கழட்டிட்டு நடக்குறப்போ அவன் கண்ல இருந்து தாரைதாரையாய் கண்ணீர் வடியுது. இந்தியாவோட ஏதோ ஒரு மூலையில உக்காந்து டிவியில “இன்னைக்கி கண்டிப்பா ஜெயிச்சி பைனலுக்கு போயிருவோம்”ன்னு நம்பிக்கையோட உக்காந்திருந்த என்னை மாதிரியே, அந்த கொல்கத்தா ஈடன் கார்டன் கிரவுண்ட்-ல பிட்ச்-ல பேட்டோட அதே நம்பிக்கையோட நின்னுக்கிட்டிருந்த ஒருத்தன்தான் இந்த காம்ப்லி-ன்னு அப்போ எனக்கு புரிஞ்சது. இல்லைன்னா அந்த கண்ணீர் வந்திருக்காது. ஏன்னா அன்னைக்கி ராத்திரி முழுக்க நான் தூங்கலை. என்னையும் அறியாம அழுதுகிட்டிருந்தேன். மறுநாள் பேப்பர்ல அந்த நியூஸை படிச்சப்பவும் நான் அழுதேன். எனக்கு வந்த அழுகையும்,காம்ப்லியோட அழுகையும் ஒண்ணுதான். அது அந்த மேட்ச் நாம தோத்துப்போனதால இல்ல. கோப்பையை ஜெயிக்க இருந்த வாய்ப்பு விட்டுப்போனதால இல்ல.

ஒரு இமாலய நம்பிக்கை எங்க ரெண்டு பேர் கண்ணுமுன்னாலயும் ஒன்னு சேர காத்துல கரைஞ்சி போனதால.

 

/பால கணேசன் – முகப்புத்தகத்திலிருந்து/

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.