கட்டுரைகள்

வரலாற்றை மாற்றி எழுதப்போகும் “கிரிக்கெட்டின் பிதாமகன்” கோஹ்லி

வரலாற்றை மாற்றி எழுதப்போகும் “கிரிக்கெட்டின் பிதாமகன்” கோஹ்லி

விராட் கோஹ்லி – நிகழ்கால சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் போற்றப்படும் அசைக்கமுடியாத துடுப்பாட்டப் பெரும்சுவராக மாறியிருப்பதுடன், கிரிக்கெட்டின் வருங்கால “பிதாமகன்” ஆகவும் மிளர்ந்துகொண்டிருக்கின்றார். அந்தப்பெரும் வீரரனின் சாதித்த, சாதிக்கப்போகும் கிரிக்கெட் சாதனைகளின் ஒருபார்வையாக இக்கட்டுரை தொடருகின்றது.

பத்தொன்பது வயதில் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகிய விராட் கோஹ்லிக்கு தற்போது 30 வயதாகின்றது. இந்த, 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் கோஹ்லி செய்த சாதனைகளும், பெற்ற விருதுகளும் “விராட் கோஹ்லி” எனும் பெயரை உரத்து சொல்லும் வகையில் தனித்துவம் மிக்கதாகவே அமைந்திருக்கின்றது.

உலகின் முன்னணி வீரர்கள் பலரின் சாதனைகளை தகர்தெறிந்திருக்கும் கோஹ்லி “கிரிக்கெட்டின் கடவுள்” என்று அனைவராலும் பிரமிப்புடன் பார்க்கப்பட்ட(டும்) சச்சின் டென்டுல்கரின் சாதனைகளையும் மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கின்றார். சச்சின் டென்டுல்கரின் ஓய்வுக்கு பின்னர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இந்திய அணியின் அசைக்க முடியாத துடுப்பாட்டச் சுவராகவும் இருந்து தனது அணிக்கு எச்சந்தர்ப்பத்திலும் வெற்றியை பெற்றுக்கொடுக்க கூடிய அசாத்திய திறமை கொண்டவராகவும் கோஹ்லி மிளிர்ந்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

சிலசந்தர்ப்பங்களில் ஒருசில போட்டிகளில் சொதப்பினால் பின்னாட்களில் அதில் இருந்து மீண்டெழுந்து ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி “இதுவே கோஹ்லி என்று” கூறவைப்பது போல் தனது திறமையை பறைசாற்றும் போராட்டக் குணம் அதிகம் கொண்டவராகவே இந்தக் கோஹ்லி காணப்படுகின்றார். ஆக்ரோசமான அந்தப் போராட்டக் குணமே இன்று கோஹ்லியின் பெயரை உரத்து உச்சிரிக்கும் வகையில் அவரை கிரிக்கெட்டில் பல சாதனைகளை உடைத்தெறியும் வீரராகவும் மாற்றியிருக்கின்றது எனலாம்.

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள், ரி-20 என்று மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 50 இற்கும் மேற்பட்ட துடுப்பாட்டச் சராசரியை கொண்டிருக்கும் ஒரேயொரு வீரராகவும் இந்த விராட் கோஹ்லி காணப்படுகின்றார். மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கும் கோஹ்லி, ரி-20 அரங்கில் 67 போட்டிகளில் ஆடி (2,263 – ஓட்டங்கள்), டெஸ்ட் அரங்கில் 77 போட்டிகளில் ஆடி (6,613 – ஓட்டங்கள்) மற்றும் ஒருநாள் அரங்கில் 225 போட்டிகளில் விளையாடி (10,816 – ஓட்டங்கள்) பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

All Format Cricket Record

விராட் கோஹ்லி : “வீரராக சாதனை” –

சர்வதேச ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்த வீரர்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் 40 சதங்களை வேகமாக கடந்த வீரர்.

அனைத்துவித சர்வதேச கிரிக்கெட்டிலும் வேகமாக 50 சதங்களை (348 – இன்னிங்ஸ்) கடந்த (ஹசிம் அம்லாவுடன்) வீரர்.

ஒருநாள் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர்.

ரி-20 அரங்கில் 2 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்த வீரர்.

2010 – 2018 வரையில் ஒருநாள் அரங்கில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இந்திய வீரர்.

விராட் கோஹ்லி : “தலைவராக சாதனை” –

தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வெற்றி கொண்ட தலைவர் (ரிக்கி பொன்டிங்குடன் பகிர்ந்துகொண்டார்).

தலைவராக தான் ஆடிய முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் டெஸ்ட் தலைவர்.

தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதம் அடித்த முதல் தலைவர்.

டெஸ்ட் அரங்கில் ஓர் ஆண்டில் 10 சதங்களை அடித்த முதல் தலைவர்.

டெஸ்ட் அரங்கில் அதிக சதமடித்த (12) இந்திய தலைவர்.

டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதமடித்த (6) முதல் தலைவர்.

ஒருநாள் அரங்கில் அதிக சதமடித்த (13) தலைவர்.

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டில் குறைந்தது டெஸ்ட் போட்டி ஒன்றை வெற்றி கொண்ட முதல் ஆசிய தலைவர்.

விராட் கோஹ்லி : “விருதுகள்” –

ஆர்ஜூனா தேசிய விருது – (2013).

பட்மஸ்ரீ தேசிய விருது – (2017).

ராஜிவ் காந்தில் ஹீல் ரத்னா தேசிய விருது – (2018).

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபெர்ஸ் ரோபி விருதுகள் (இரண்டு தடவை).

ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுகள் (மூன்று தடவை).

ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி வீரருக்கான விருதுகள் (ஐந்து தடவைகள்).

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரருக்கான விஷ்டன் விருது (இரண்டு தடவைகள்).

விராட் கோஹ்லி – இவ்வாறு, இன்னும் பல சாதனைகளை செய்துள்ளதுடன், மேலும் பல விருதுகளையும் அள்ளிய வீரராகவும் காணப்படுகின்றார்.

அதேபோல், இதுவரையிலும் ரி-20 போட்டிகளில் 20 அரை சதங்களையும் (அதிக அரைச்சம் அடித்த வீரர்).

ஒருநாள் அரங்கில் 41 சதங்கள் (அதிக சதமடித்த இரண்டாவது வீரர்), 49 அரை சதங்கள்.

டெஸ்ட் அரங்கில் 25 சதங்கள், 20 அரை சதங்கள், 6 இரட்டை சதங்கள் (அதிக இரட்டை சதமடித்த 6வது வீரர்) என்று இரட்டை சதங்கள், சதங்கள், அரைச்சதங்கள் என்று சதங்களிலும் அசத்திக்கொண்டிருக்கும் கோஹ்லி விரைவில் ஒருநாள் சர்வதேச அரங்கில் சதங்களின் மூலம் அரைச்சதம் (50 சதங்கள்) அடித்த முதல் வீரராக சச்சினின் சாதனையை தகர்த்தெறிந்து உலக சாதனை படைக்க காத்திருக்கின்றார்.

அத்துடன், டெஸ்ட் அரங்கிலும் அதிக இரட்டைச்சத சாதனையை தகர்த்தெறியகூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது. இப்படி, சதங்களில் சாதனை படைத்துவரும் கோஹ்லி இதுவரை மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 66 சதங்களை அடித்து அதிக சதமடித்த மூன்றாவது வீரராக (சச்சின் டென்டுல்கர் -100 சதங்கள்), (ரிக்கி பொன்டிங் – 71 சதங்கள்) காணப்படுகின்றார்.Most Hundreds All Format

கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி சார்பிலும், சர்வதேச ரீதியிலும் வீரராக, அணில் தலைவராக பல்வேறு சாதனைகளை தகர்த்து அவற்றை புதுப்பித்துக்கொண்டிருக்கும் விராட் கோஹ்லி விரைவில் மேலும் பல தகர்க்க முடியாது என்று பிரமிப்பாக பார்க்கப்பட்ட சாதனைகளை தகர்த்து குமார் சங்கக்கார, ரிக்கி பொன்டிங், ஜக் கலிஸ், மஹேல ஜெயவர்த்தன போன்றவர்களை பின்தள்ளி “கிரிக்கெட்டின் கடவுள்” எனப்படும் சச்சின் டென்டுல்கரின் நாமத்திற்கு ஈடான “கிரிக்கெட்டின் பிதாமகன்” எனும் நாமத்தை சூடி கிரிக்கெட்டின் வரலாற்றை விராட் கோஹ்லி மாற்றி எழுதுவார் என்பதில் துளியும் ஐயம்கொள்ள முடியாது. ஏனெனில், விராட் கோஹ்லி இன்னும் 10 ஆண்டுகாலம் கிரிக்கெடில் இருக்கப்போகும் உலகின் மிகச் சிறந்த வீரராக இருக்கின்றார்.

(ஞா.பிரகாஸ்)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.