India

ஸ்டீவ் எனப்படும் புஜாரா !!

ஸ்டீவ் எனப்படும் புஜாரா !!

2010 ம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவுக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 4ம் இன்னிங்க்ஸில் 207 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் மற்றும் சேவக் ஜோடி சரியான ஆரம்பத்தை வழங்காத போது தான், தன் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்ற செட்டிஸ்வர் புஜாரா ராகுல் ட்ராவிட்டிற்கு பதிலாக 3ம் இலக்கத்தில் களமிறக்கபட்டார்.

89 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்று தான் இந்திய அணியின் எதிர்காலம் என்பதை அப்போதே நிறுபித்திருந்தார். இன்று இந்திய அணி 2-1 என அவுஸ்த்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கும் நிலையில் 2010 ஆம் ஆண்டு புஜாரா இவ்வாறான வெற்றிக்கு எதிர்காலத்தில் முக்கிய காராணமாக அமைவார் என எவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அவுஸ்த்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் இருந்த வரலாறு நீண்டு கொண்டிருந்த சந்தரப்பத்தில் தான் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ராகுல் ட்ராவிட்டின் முதல் இன்னிங்க்ஸ் இரட்டை சதம் , இரண்டாம் இன்னிங்க்ஸின் ஆட்டமிழக்காத அரைச்சதத்துடன் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி அத்தொடரை சமப்படுத்த உதவியதோடு இந்திய அணிக்குள் புதிய உத்வேகத்தையும் அநேக இந்திய ரசிகர்களின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசையும் பூர்த்தி செய்யபட்டது. எனினும் அதனை தொடரந்துவந்த காலங்களில் 2007/08 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேர்த் மைதானத்தில் வெற்றியை தவிர்த்து இந்திய அணியினால் அவுஸ்த்திரேலியாவில் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாத நிலையில் தான் பலம்மிக்க வேகபந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக இம்முறை அவுஸ்த்திரேலிய அணியை வீழ்த்தும் வாய்ப்புகளோடு 2018 ம் ஆண்டு இறுதிகளில் இந்திய அணியின் அவுஸ்த்திரேலிய தொடர் ஆரம்பித்தது.

ஆரம்பம் முதலே விராத் கோஹ்லி தான் எங்கள் இலக்கு என அவுஸ்த்ரேலியா வீரர்களும், பல ஓய்வுபெற்ற வீரர்களும் கோஹ்லி புகழ் பாடிக்கொண்டிருக்க அடிலெய்ட்டில் இடம்பெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்கஸில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிகொண்டிருந்த அணியை தனது சதத்தின் உதவியுடன் வெற்றியை நோக்கி அழைத்து சென்றார் புஜாரா.

இதனுள் இரண்டாம் இன்னிங்க்ஸில் பெற்ற அரைச்சதமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த போட்டியில் புஜாராவின் பங்களிப்பு ட்ராவிட் 2004 ம் ஆண்டு வழங்கிய பங்களிப்புக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்ற கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்துக்கு சாலப்பொருத்தமாக அமைந்தது.

அதனைத்தொடர்ந்து மெல்பர்ன் மைதானத்தில் புஜாரா பெற்ற சதம் இரணாடாவது வெற்றியை ஈட்டித்தர இந்திய அணியின் தொடர் வெற்றி உறுதியானது என்றே குறிப்பிட வேண்டும்.

புஜாரா 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலபகுதியில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இங்கிலாந்து தொடருக்கு தன்னை தயார் செய்யும் முகமாக இங்கிலாந்தின் யோர்க்ஷெயார் பிராந்திய அணிக்காக கவுன்டி போட்டிகளில் ஆடியிருந்தார்.

குறித்த காலத்தில் தான் செட்டிஸ்வர் புஜாரா என்ற பெயர் உச்சரிக்க கடினமாக இருப்பதாக கூறி யோர்க் ஷெயார் அணி வீரர்களால் செல்லமாக ஸ்டிவ் என புஜாரா அழைக்கபட்டார். எது எவ்வாறாயினும் இந்த தொடரில் கனிசமான ஓட்டங்களை பெறத்தவறி இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் தனது இடத்தை இழந்தார்.

எனினும் இரண்டாவது போட்டியில் அணிக்கு திரும்பிய புஜாரா மூன்றாவது போட்டியில் அரைச்சதம் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்க்க இந்திய அணி அப்போட்டியை வென்றது. இவ்வாறு இந்திய அணி 2018ம் ஆண்டு தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்த்திரேலியா ஆடுகளங்களில் வென்ற டெஸ்ட் போட்டிகளில் புஜாரா முக்கிய வகிபாகம் கொண்ட வீரரராக மாறிப்போயிருந்தார்.

புஜாரா மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிபடுத்துகிறார், SENA நாடுகளில் புஜாராவினால் பாரிய பங்களிப்பை வழங்க முடியாது என்ற விமர்சனங்களுக்கெல்லாம் Most Concervative batting style என்று சொல்லக்கூடிய பொறுமையான, முழுமையான டெஸ்ட் கிரிக்கெட் நுட்பங்களை சற்றும் தளராமல் கடைப்பிடித்து 90களிலிருந்து அவுஸ்த்திரேலிய மண்ணில் இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்காக காத்துக்கிடந்த ரசிகர்களிடத்தில் இன்று உச்சத்தில் நிற்கின்றார் புஜாரா.

சிட்னியில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் அவுஸ்த்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் Are you not bored yet ? என்று கேட்கும் அளவிற்கு அவுஸ்த்திரேலிய வீரர்களை களைப்படைய வைத்தது மட்டுமில்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்த்திரேலிய வர்ணனையாளர் கெரி ஓ கீபி Why would you name your kid Cheteshwar (தங்கள் பிள்ளைக்கு செட்டீஸ்வர் என எதற்காக பெயர்வைக்க வேண்டும்) என்று புஜாராவின் பெயரை சிலாகித்ததற்கும் சேர்த்து தன் பெயரை ஆழமாக அவுஸ்த்திரேலிய ஆடுகளங்களில் பதிவு செய்திருக்கிறார் புஜாரா.

தொடர்ச்சியாக தன்னுடைய சிறப்பாட்டத்தை வெளிபடுத்துவாராக இருந்தால் பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற பெயரையும் உலகின் தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பெருமையையும் ஸ்டிவ் எனப்படும் புஜாரா பெறுவது திண்ணம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.