உள்ளுர் செய்திகள்

தேசியத்தில் தடம் பதித்த இந்துக்கள் : சம்பியனாகிய யாழ்ப்பாணம் இந்து

தேசியத்தில் தடம் பதித்த இந்துக்கள் : சம்பியனாகிய யாழ்ப்பாணம் இந்து

மிகவும் அசாத்தியமான முறையில் முதற்சுற்று முதற்கொண்டு ஆடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி, கிண்ணம் வெல்லும் முழுத் தகுதியுடன் இறுதிப்போட்டி வரையில் சென்று, இறுதிப்போட்டியில் எந்தவித தடுமாற்றமுமின்றி தர்மபால அணியை இலகுவாக எதிர்கொண்டு வெற்றிகொண்டு சம்பியனாகியது.

யாழ்.மாவட்ட பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட வரலாற்றில் இது ஒரு மைக்கல்லாகவும் அமைந்துள்ளது. அதேபோல், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும், தமக்கான சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தி, கடுமையான போராட்டங்கள் சுவாரஸியமான ஆட்டங்கள் என மூன்றாமிடத்தை தனதாக்கியது.

தேசிய மட்டப் 19 வயது பிரிவு பி அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கொழும்பு வெஸ்லிக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்தச் சுற்றுப்போட்டியில் முதலாவது ஆட்டத்தில், டீ மசனோல்ட் கல்லூரி அணியை 75:55 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாவது போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணியை 64:45 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

காலிறுதியில் கண்டி தேஸ்ரன் கல்லூரியை 58:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதியில் லைசியம் சர்வதேசப் பாடசாலை அணியை, 71:52 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு தர்மபாலா கல்லூரி அணி மோதியது. இதில், அபாரமாக ஆடிய யாழ்ப்பாணம் இந்து வீரர்கள் தர்மபாலா வீரர்களை திக்குமுக்கடாச் செய்தனர். முடிவில், 74:39 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகினர்.

இந்தத் தொடரின் சிறந்த ஓவ்பென்சிப் பிளயராக யாழ்ப்பாணம் இந்துவின் சஞ்சயனும், மிக முக்கியம் வாய்ந்த வீரராக கீர்த்தனனும் தெரிவு செய்யப்பட்டனர்.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் லைசியம் சர்தேசப் பாடசாலை அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், கொக்குவில் இந்துக் கல்லூரி அணி, 62:61 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று மூன்றாமிடத்தைத் தட்டிச் சென்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இந்தச் சுற்றுப்போட்டியில், முதலாவது போட்டியில் பாணாந்துறை லைசியம் சர்வதேசப் பாடசாலை அணியை 60:58 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாவது போட்டியில் குருநாகனல் சென்.ஆன்ஸ் கல்லூரியை 72:67 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், கொழும்பு வெஸ்லிக் கல்லூரி அணியை 50:46 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

காலிறுதியில் அம்பாலங்கொடை களுரத்ன கல்லூரியை 45:42 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தொடர்ந்து அரையிறுதியில் கொழும்பு தர்மபால கல்லூரி அணியுடன் மோதியது.

எனினும் அந்தப் போட்டியில், தர்மபால கல்லூரி அணி, 54:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றதினால், கொக்குவில் இந்து இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.