Home

#INDvAUS-அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறதா …?

#INDvAUS-அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறதா …?

இந்திய கிரிக்கெட் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்டதான டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியால் வெற்றிகளைக் பெற்றுக்கொள்ள முடியாது எனும் வரலாறுகள் மாறி, புதிய சரித்திரம் படைக்கலவல்ல அணியாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் சந்தித்திருக்கிறது.

கிரிக்கெட்டை ஆழமாக அறிந்தவர்கள் இம்முறை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவில் வரலாறு படைக்கும் என்றே நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

அதற்கு முக்கியமாக இரு அணிகளின் பலம் பலவீனம் என்பவற்றைக் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்தமாக இந்தக் கருத்து நிலவி வருகின்றது எனலாம்.

இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் தென் ஆபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, கடுமையான சர்சைகளை சந்தித்ததும் அதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்களும் அந்த அணியின் இத்தனை பின்னடைவுகளுக்கு காரணமாகும்.

பந்தை சேதமாக்குதல் அல்லது பந்தின் தன்மையை மாற்றுதல் (Ball-Tampering) எனும் சர்சையில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டார்கள் எனும் ஏற்க முடியாத குற்றச்சாட்டின் காரணமாக, அந்த அணியின் தலைவரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் ஆட்டக்காரருமான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உதவி தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் கட்டமைப்பு இன்னும் சீர்குலைந்துபோனது எனலாம்.

இதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது மட்டுமல்லாமல், பொருத்தமான தலைவரை தேர்வு செய்வதிலே கிரிக்கெட் அவுஸ்திரேலியா கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது,அதன் பின்னர் அடுக்கடுக்கான தோல்விகளால் துவண்டு போயிருக்கிறது.

இப்படியாக அவுஸ்திரேலிய அணி வலுவிழந்துபோயிருக்கும் தருணத்தில் இந்தியாவின் அவுஸ்திரேலிய பயணம் அமைந்திருப்பதே இந்தியாவுக்கான சாதகத்தில் பிரதான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தே விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் அசுர பலத்தை காண்பித்து தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

தென் ஆபிரிக்க மண்ணில் இடம்பெற்ற தென் ஆபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை 2-1 என்றும், இறுதியாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 4-1 என்று இழந்திருந்தாலும், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆதிக்க காலம் ஆரம்பித்திருக்கிறது என்பது தெளிவாக புலனாகிறது.

தென் ஆபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தாலும், அந்த அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே அனைத்து இன்னிங்ஸ்களிலும் அத்தனை விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதோடு,3 இன்னிங்ஸ்களில் அந்த அணியை 200 க்கும் குறைவான ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்க செய்து அசத்தியது இந்தியா.குறித்த தொடரில் தென் ஆபிரிக்க வீரர்கள் எவரையும் சதமடிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தொடரில் 5 தடவைகள் 300 க்கும் குறைவான ஓட்ட எண்ணிக்கையில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தியதுடன்,சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து வீரர்களால் வெறுமனே 4 டெஸ்ட் சதங்கள் பெறப்பட்டன, அந்தளவிற்கு இந்திய பந்துவீச்சின் பலம் இருக்கிறது.

இந்த புள்ளி விபரங்களுடன் ஒப்பிட்டு நோக்குகையில் இந்தியாவின் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளின் அடைவு மட்டும் மேல்நோக்கிப் பயணிப்பதை அவதானிக்கலாம்.

பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பூம்ரா,இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் சாமி ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுக்கவல்லவர்கள்.

விராட் கோஹ்லியின் அண்மைய ஓட்ட குவிப்புக்களோடு சேர்த்து அண்மைக் காலமாக இந்திய டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்திவரும் இளம் வீரர்களான ரிஷப் பாண்ட் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்ற அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

1999 ம் ஆண்டு சச்சின் தலைமையில் அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை (3-0) என்றும் ,2003 ம் ஆண்டு கங்குலி தலைமையில் விளையாடி 4 போட்டிகள் கொண்ட தொடரை (1-1) சமன் செய்திருந்தது.2007 ம் ஆண்டு கும்ப்ளே தலைமையில் பயணித்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை (2-1) என்று நிறைவு செய்தது,2011 இல் டோனி தலைமையில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்று மோசமான தோல்வியை தழுவியது.

இறுதியாக 2014 ம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலிய பயணத்தில் 4 போட்டிகளில் 2 போட்டிகளை வெற்றி தோல்வியற்று முடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் டோனி தலைமையில் 2011 இல் விளையாடிய டெஸ்ட் தொடரைவிட அனைத்து பயணங்களிலும் அண்மைக் காலமாக இந்திய அணி, அவுஸ்திரேலிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை வரலாறாகிறது.

இந்தநிலையில் வலுவிழந்து போயுள்ள அவுஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி , தங்கள் மீதான விமர்சனங்களை துடைத்தெறிய அருமையான வாய்ப்பு இந்தியாவுக்கு காத்திருக்கிறது.

இம்முறை இந்தியாவால் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது போகுமாயின் அது ஆச்சரியமான விடயம் என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்களையும் நோக்குகையில் இந்தியாவுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம்.

இரு அணிகளுக்குமான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை நோக்கத்தக்கத்து.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுடன் இடம்பெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் வெறுமனே ஒரேயொரு போட்டியில் மட்டுமே இந்தியா நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெறது, நாணய சுழற்சி யும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தால் எல்லாம் சாத்தியமே.

அவுஸ்திரேலியா மண்ணில் இடம்பெற்ற 44 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெறுமனே 5 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில் விறுவிறுப்பான ஒரு டெஸ்ட் தொடருக்காக காத்திருப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.