India

ஆரம்பித்தது இந்திய-அவுஸ்ரேலிய டெஸ்ட் தொடர்..! தரநிலையில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன-கணிப்பு

ஆரம்பித்தது இந்திய-அவுஸ்ரேலிய டெஸ்ட் தொடர்..!
தரநிலையில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன-கணிப்பு

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய தொடராக கணிக்கப்பட்டிருக்கும் இந்திய -அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்டதான டெஸ்ட் தொடர் அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இன்று ஆரம்பித்திருக்கிறது.

இந்த போட்டி தொடருக்கு பின்னர் தரநிலையில் எவ்வாறான மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கும் போது, குருவி விளையாட்டு குழு அது தொடர்பில் கணித்து உங்களுக்கு சொல்லப்போகிறது.

குறிப்பாக கடந்த 25 மாதங்களாக உலக டெஸ்ட் தரநிலையில் முதலிடத்தில் நீடித்துக்கொண்டு உலக சாதனையை தன்னகப்படுத்தியுள்ள இந்திய அணிக்கு, இந்த டெஸ்ட் தொடர் மாறுதலான முடிவுகளையும் உருவாக்கலாம்,2016 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக இந்திய அணி முதலிடத்தை தனதாக்கியது.

அதிகமாக இந்த தொடரை இந்திய அணியே கைப்பற்றும் என்று முன்னாள் அவுஸ்ரேலியாவின் ஜாம்பவான்களான டீன் ஜோன்ஸ், ஸ்டீவ் வோ, ஜேசன் கில்லஸ்பி,இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, VVS.லக்ஸ்மன் ஆகியோர் கணித்திருந்தாலும் இதுவரைக்கும் மாறுதலான கணிப்பொன்று முன்னாள் அவுஸ்ரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கிடமிருந்து வெளியானது, அதாவது 2-1 எனும் அடிப்படையில் அவுஸ்ரேலியாவே இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது அவரது கணிப்பாகும்.

இப்படி மாறுபட்ட கருத்துக் கணிப்புக்களுக்கு மத்தியில் 4-0 எனும் அடிப்படையில் இந்தியாவை, அவுஸ்ரேலிய அணி தோற்கடிக்குமாயின் 5 வது இடத்தில நீடிக்கும் அவுஸ்ரேலியா முதலிடத்துக்கு முன்னேற்றம் அடையும் அதேவேளையில், இந்திய அணி 3 வது இடத்துக்கு பின்தள்ளப்படும் நிலைமை காணப்படுகின்றது.அதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றது என்பதுவே ரசிகர்களின் கணிப்பாகும்.
116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்தியா 108 புள்ளிகளை பெற்று 3 வது இடத்துக்கு பின்தள்ளப்பட ,அவுஸ்ரேலியா 110 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெறலாம்.

இதேவேளையில் 4-0 எனும் அடிப்படையில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை தோற்கடிக்குமாயின், இந்திய அணி 120 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கும் நிலையில்,அவுஸ்திரேலிய அணி 6 வது இடத்துக்கு பின்தள்ளப்படும் நிலையும் காணப்படுகின்றது.

அத்தோடு 2-2 என்று தொடர் சமநிலையில் நிறைவுக்கு வருமாயின், இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தாலும் தரநிலையில் இந்தியா பின்தள்ளப்படப்போவதில்லை என்பது உறுதியானது.

3-1 என்று இந்தியா தொடரை வெல்லுமாயின் மேலதிகமாக 2 புள்ளிகளை இந்திய அணி பெற்றுக்கொள்ளும்,3-1 என்று அவுஸ்ரேலிய அணி தொடரை வெற்றிகொண்டாலும், இந்தியாவுக்கு தரநிலையில் சிக்கல் இல்லாது (7 புள்ளிகளை இழந்து) தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

எது எவ்வாறாயினும் இந்த தொடரை 4-0 என்று இழந்தால் மட்டுமேதான் இந்தியாவுக்கு தரநிலையில் முதலிடத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதே, கிரிக்கெட்டில் எதையும் எப்போதும் நேரகாலத்துக்கு கணித்து சொல்ல முடியாது என்ற காரணத்தால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7 ம் திகதி இந்திய-அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான தொடர் நிறைவுக்கு வரும் வரை காத்திருப்போம்.

போட்டி அட்டவணை

முதலாவது டெஸ்ட்- டிசம்பர் 6-10 வரை-அடிலெய்ட் மைதானம்
2 வது டெஸ்ட்- டிசம்பர் 14-18 வரை-பேர்த் மைதானம்
3 வது டெஸ்ட் – டிசம்பர் 26-30 வரை-மெல்போர்ன் மைதானம்
4 வது டெஸ்ட்-ஜனவரி 3-7 வரை-சிட்னி மைதானம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.