கிரிக்கெட் செய்திகள்

முதல் போட்டியில் வடக்கு மாகாணம் தோல்வி

முதல் போட்டியில் வடக்கு மாகாணம் தோல்வி

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், 19 வயது மாகாண அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி, 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் (சப்பிரமுவ மாகாணம் தவிர்ந்து) மேல் மாகாணத்தின் 3 அணிகளும் என மொத்தம் 10 அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாடசாலைகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகள் என்பவற்றிலிருந்து மாகாண அணிகளுக்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தென்மாகாணம், மத்திய மாகாணம், மேல்மாகாணம் (தெற்கு), மேல் மாகாணம் (மத்தி), மேல் மாகாணம் (வடக்கு), வடமாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம் என 10 அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்கேற்கின்றன.

அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலுள்ள அணிகளுக்கிடையில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மதுசன், ஏ.ஜெயதர்சன். ஆர்.ராஜ்கிளின்டன், வி.விஜஸ்காந்த், ரி.விதுசன், கே.இயலரசன் ஆகியோரும், சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எம்.அபினேஸ், என்.சௌமியன், ரி.டினோசன் ஆகியோரும், சென்.பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த என்.மொனிக் நிதுசன், ஏ.இவன் றொசாந்தன் ஆகியோரும், ஸ்கந்தவரோதயக் கல்லூரியைச் சேர்ந்த பி.அஜிந்தன், ஏ.தனுஸன் ஆகியோரும், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம்.கபிலன், கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.பானுஜன், மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.வரலக்சன் ஆகியோரும் வடமாகாண அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண அணி தனது முதல் போட்டியில் மேல் மாகாண அணியை எதிர்த்து மோதியது. இந்தப் போட்டி 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வடமாகாண அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எஸ்.பானுஜன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மேல்மாகாண அணி சார்பாக, பசிந்து உசேதி 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், பிரவீன் நிமேஸ், மஹேஸ் தீக்ஸன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலளித்தாடிய மேல் மாகாண அணி, இறுதிவரையில் போராடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மகேஸ் தீக்ஸன 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் வடமாகாண அணி சார்பாக, டி.தினேஸன், எஸ்.மதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

#குணசேகரன்_சேகர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.