IPL - Indian Premier League

ஐபில் 2018 ஒரு முழுமையான பார்வை

IPL 2018-பதிவுகள்

பதினொராவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. 60 போட்டிகளின் முடிவில் இறுதியாக 11வது ஐ.பி.எல் கிண்ணம் சென்னை அணியின் கைகளிற்கு சென்றிருக்கிறது. சென்னை அணியும் மூன்றாவது முறையாக கிண்ணம் வென்று தமது மீள்வருகையை பலமாகவே உறுதி செய்திருக்கிறார்கள். இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் சாதித்தவை, சந்தித்தவை என்பவற்றை பார்க்கலாம்….

8.டெல்லி டேர் டெவில்ஸ்
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பலமான அணியாக களம் இறங்கிய அணி புள்ளி பட்டியலில் கடைசி அணியாக மாறி இருந்தது. இரண்டு ஐ.பி.எல் கிண்ணங்களை கொல்கத்தா அணிக்கு பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் கம்பீர், தனது சொந்த மாநிலமான டெல்லி அணிக்காக ஆட விருப்பம் தெரிவிக்க, ஐ.பி.எல் வரலாற்றில் அனுபவமான அணித்தலைவர், இந்த வருட ஏலத்தின் போது மக்ஸ்வெல்,முன்ரோ, ஜேசன் ரோய், ரபடா, போல்ட் என அற்புதமான T-20 ஆட்டக்காரர்களின் தெரிவு, ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட ரிசப் பாண்ட்,ஸ்ரேயாஸ் ஐயர், கிறிஸ் மொரிஸ் என இந்த வருட ஐ.பி எல் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது டெல்லி அணி. ஆனால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கம்பீர் துடுப்பாட்டம் சரி, அணித்தலைமை சரி இரண்டிலும் சொதப்ப அங்கு தொடங்கியது பிரச்சினை. ஆரம்ப ஆட்டக்காரராக வந்த கம்பீர் ஒற்றை ஓட்டங்களுடன் பவிலியன் திரும்ப சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற தவறியது டெல்லி அணி. தொடர் தோல்விகளால் கம்பீர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக டெல்லி அணிக்கு சிக்கல் ஆரம்பித்தது. அதன் பிறகு டெல்லி அணி பங்கேற்ற ஏழு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சாதாரண துடுப்பாட்ட வீரராக ஆடுவதற்கு கம்பீர் வாய்ப்பு பெறாதது கவனிக்க வேண்டிய விஷயமே.கம்பீர் ஆட்டங்களில் பங்கேற்க விரும்பவில்லை என பயிற்சியாளர் பொண்டிங் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது, ஆனால் அதனை தற்போது கம்பீர் மறுத்திருப்பது அடுத்த ஐ.பி.எல் தொடரில் கம்பீர் ஆடுவாரா என்ற கேள்வியை விட கம்பீர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கம்பீரின் பதவி விலகலை அடுத்து அணித்தலைவராக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். அனுபவமற்ற அவரின் அணுகுமுறைகள் டெல்லி அணிக்கு இன்னும் பாதகமாகவே இருந்தது. குறிப்பாக ஒரு போட்டியில் வெறுமனே மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களம் இறங்கியது டெல்லி அணி. அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்ஸ்வெல் இந்த தொடர் முழுவதும் சொதப்பினார். இது இன்னும் டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 12 போட்டிகளில் ஆடிய மக்ஸ்வெல் வெறுமனே 169 ஓட்டங்களை மாத்திரமே குவித்தார். தொடர் முழுவதும் ஓட்டங்கள் குவிக்க தவறிய மக்ஸ்வெல் க்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டது ஆஸ்திரேலிய வீரர் என்ற அடிப்படையில் பொண்டிங் பக்கச்சார்பாக நடந்து கொண்டாரா என்ற கேள்வியையும் ஏற்படுத்த தவறவில்லை.முக்கியமாக T-20 போட்டிகளில் சிறந்த ஆரம்ப ஆட்டக்காரர்களான முன்றோ,ஜேசன் ரோய் அணியில் இருந்தும் மக்ஸ்வெல் ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டது யோசிக்க வேண்டியதே. காயமும் ஒரு பக்கம் டெல்லி அணியை வாட்டியது எனலாம். தொடர் ஆரம்பத்திலேயே ரபடா காயம் காரணமாக விலகினார். தொடரின் இடையில் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் உம் விலக இங்கு தான் நான்காவது வெளிநாட்டு வீரருக்கான சிக்கலில் தடுமாற தொடங்கியது டெல்லி அணி. டெல்லி அணி சார்பில் கவனத்தை ஈர்த்த வீரர்களாக ப்ரித்வி சோ, ஐயர், ரிசப் பாண்ட், நேபாளத்தின் 17 ஏ வயதான லெமிச்சினி, போல்ட் ஆகியோரை குறிப்பிடலாம். அதிலும் ரிசப் பாண்ட் இந்த தொடரின் நாயகன் என்றாலும் மிகையாகாது. ஒரு சதம் உட்பட லீக் போட்டிகளின் முடிவில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தார் பாண்ட். 14 போட்டிகளில் 684 ஓட்டங்களை குவித்து “ஒரேஞ்ச்” தொப்பிக்கு சொந்தக்காரர் ஆனார்.

அனைத்து போட்டிகளிலும் தனது பங்களிப்பை வழங்கி கொண்டு இருந்தார் பாண்ட். பந்துவீச்சில் போல்ட் அசத்தினார்.வேறு எவரும் பந்துவீச்சில் அவ்வளவு பெரிதாக சோபிக்கவில்லை. புள்ளி பட்டியலில் இறுதி அணியாக தொடரை நிறைவு செய்தாலும் இறுதி இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி பலமான சென்னை மற்றும் மும்பை அணிகளை வீழ்த்தி மும்பை அணியின் ப்ளே ஓஃப் கனவையும் தகர்த்தது டெல்லி அணி. இதே வீரர்கள் இன்னும் இரண்டு வருடங்கள் அதே அணிகளிலேயே தொடர்ந்து ஆட உள்ள நிலையில் இந்த வருடத்தின் தவறுகளை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த வருடம் பலமாகவே களம் இறங்குவார்கள் என நம்பலாம்….

7.கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தொடரின் ஆரம்பத்தில் மிகவும் பலமான அதிரடியான அணியாகவும், கிண்ணம் வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது பஞ்சாப் அணி. ஆனால் இறுதியில் ஏழாவது அணியாக தொடரை நிறைவு செய்திருக்கிறது. ஏலத்தின் போது வீரர்களை வாங்குவதில் ப்ரீத்தி ஜிந்தா காட்டிய ஆர்வம் சிறப்பான ஒரு வீரர்கள் குழாம் ஒன்றை பஞ்சாப் அணிக்கு பெற்றுக்கொடுத்தது. ராகுல்,கிறிஸ் கெய்ல், பிஞ்ச்,மில்லர்,அகர்வால், கருண் நாயர், ஸ்டொய்னிஸ் என அதிரடியான மட்டையாளர்களையும், பந்துவீச்சில் அன்ட்ரூ டை,மோகித் சர்மா, அஸ்வின், அக்சார் பட்டேல் என ஓரளவு பலமான அணியாக களம் இறங்கிய பஞ்சாப் அணி தான் பங்கேற்ற முதல் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பதிவு செய்ததோடு இம்முறை கிண்ணத்துக்கான பந்தயத்தில் முதலிடத்தில் இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பின்னர் பங்கேற்ற எட்டு போட்டிகளில் வெறுமனே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது பஞ்சாப் அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர் ஆரம்பிக்கும் போது அணித்தலைவராக பொறுப்பளிக்கப்பட்ட அஸ்வின் ‘unpredictable captain’ ஆக இருப்பேன் என அறிவித்திருந்தார். முடிவுகள் எதிர்வுகூற முடியாதவையாக இருந்த போதிலும் அணிக்கு பாதகமான முடிவுகளாக இருந்தன என்றாலும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கான போட்டியில் மூன்றாம் இடத்தில் தான் களம் இறங்கியது, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர், அகர்வால் இருவருக்கும் பதிலாக யுவராஜ், திவாரி ஆகியோரை களம் இறக்கியதுடன் யுவராஜ் க்கு முன்னர் அக்சார் பட்டேல் ஐ துடுப்பெடுத்தாட அனுப்பியமை என அந்த போட்டியை வெறுமனே மூன்று ஓட்டங்களால் கோட்டை விட்டது பஞ்சாப் அணி. யுவராஜ் சிங் இந்த தொடரில் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்தையும் வீணடித்ததோடு பஞ்சாப் அணியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்காகவும் மாறி இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் ராகுல் துடுப்பாட்டத்திலும், ஆண்ட்ரூ டை பந்துவீச்சிலும் அசத்தினர். 14 ஆட்டங்களில் பங்கேற்ற ராகுல் ஆறு அரைச்சதங்கள் உட்பட மொத்தமாக 659 ஓட்டங்களை குவித்தார். மறு முனையில் எந்த வீரரும் இணைப்பாட்டங்களை வழங்காத போதும் எதிரணிகளுக்கு தனிமனித போராட்டங்களை வழங்கினார் ராகுல் என்றே சொல்லலாம். கெய்ல் தொடரின் கன்னி சதத்தை பதிவு செய்தாலும் பிற்பாதியில் இடம்பெற்ற போட்டிகளில் கைகொடுக்க தவறினார். பந்துவீச்சில் அன்ட்றூ டை அசத்தினார். 14 போட்டிகளில் 24 இலக்குகளை சாய்த்து purple cap ஐ தன்னகப்படுத்தி இருந்தார். ஏனைய பந்துவீச்சாளர்கள் சொதப்பினாலும் ஆப்கானிஸ்தானின் இளம் சுழல் நட்சத்திரம் முஜீப் உர் ரஹ்மான் தன் பக்கம் கவனத்தை திருப்ப தவறவில்லை.காயம் காரணமாக இறுதி லீக் ஆட்டங்களில் ஆடாமல் போனாலும் பங்கேற்ற 11 போட்டிகளில் 14 இலக்குகளை சாய்த்தார் அவர். பஞ்சாப் அணியின் வீழ்ச்சிக்கு பயிற்சியாளர் சேவாக் ஐ சாடினாலும் தவறில்லை எனலாம். தொடர்ச்சியாக கெய்ல் கைகொடுக்காத போதும் ஆரம்ப ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். மில்லருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதை விட முக்கியமாக ஒவ்வொரு வீரருக்கும் என எந்த role உம் வழங்கப்படவில்லை என்றே எண்ண தோன்றுகிறது. அனைவரும் வருவதும் அடித்தாடுவதும் விக்கெட் ஐ பறிகொடுப்பதுமாக இருந்தார்கள். ராகுல் தனித்து நின்று ஆடிய போட்டிகளில் ஒரு வீரராவது மறுமுனையில் பொறுமையாக ஆடி இணைப்பாட்டங்களை வழங்கி இருப்பின் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும். அடுத்த தொடரில் கெய்ல் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க சிறப்பான ஒரு இளம் அதிரடியான அணி அடுத்த தொடரிலாவது சாதிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்…..

6.பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்
ஹோலி,டி வில்லியர்ஸ் இரண்டு வீரர்களும் இல்லை எனில் பெங்களூர் அணி ஒரு பூச்சியம் என்றாலும் மிகையாகாது. ஏலத்தின் போதே பெங்களூர் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் குறைந்தது எனலாம். முக்கியமாக சப்ராஸ் கானின் தக்கவைப்பு அதிர்ச்சி எனலாம். ராகுல்,கெய்ல், வட்சன், கேதார் ஜாதவ் ஆகியோரை தக்க வைக்காமல் சப்ராஸ் கானின் தக்கவைப்பு ஆச்சர்யம் என்பதை விட முட்டாள்தனம் எனலாம். அதனை சப்ராஸ் கானும் உண்மை என உறுதி செய்திருக்கிறார். அத்தோடு ஹோலி தவிர அனுபவமான உள்ளூர் வீரர்கள் எவரையும் ஏலத்தின் போது தேர்தெடுக்கவில்லை பெங்களூர் அணி. ஹோலியும் இந்த தொடரில் வழக்கம் போல ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணற இன்னும் நெருக்கடிக்குள்ளானது பெங்களூர் அணி. அத்தோடு அணி தெரிவிலும் சொதப்பினர் ஹோலியும், விட்டோரியும். பந்துவீச்சில் பலவீனமான அணியாக இருந்தும் இரண்டு வெளிநாட்டு ஆரம்ப ஆட்டக்காரர்களுடன் களம் இறங்கியது பெங்களூர் அணி. அதிலும் தோல்வியே மிஞ்சியது.

மாறாக கடந்த தொடரில் மும்பை அணிக்காக அதிரடியான ஆரம்பங்களை வழங்கிய பார்த்திவ் பட்டேல், பஞ்சாப் அணிக்கு ஆரம்ப ஆட்டக்காரராக ஆடிய மனன் வோஹ்ரா என இருவரும் வெளியே இருத்தி வைக்கப்பட்டனர். இருவரில் ஒருவராவது ஆரம்ப ஆட்டக்காரராக அனுப்பப்பட்டு வெளிநாட்டு பந்துவீச்சாளர் ஒருவரை உள்வாங்கி இருக்கலாம். அணியின் மத்திய வரிசை பலவீனமான நிலையில் ஹோலி ஆரம்ப ஆட்டக்காரராகவும், டிவில்லியர்ஸ் மூன்றாம் இலக்கத்திலும் ஆடுவது இருவரின் மீதும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியதோடு இந்த இரண்டு இலக்குகளும் சரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தோல்வியை உறுதி செய்தது. பந்துவீச்சில் உமேஷ் யாதவ் அசத்தினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் T-20 போட்டியின் எந்த கட்டத்தில் பந்துவீச அழைகப்பட்டாலும் சிக்கனமாகவும், இலக்குகளை சாய்ப்பதும் புதிது எனினும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார் உமேஷ் யாதவ். சாகல், சவுத்தி இருவரும் தம் பங்குக்கு கை கொடுத்தனர். அடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்குமான தேடல் தொடர் முழுவதும் நடந்து கொண்டே இருந்தது. பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அணித்தலைவர் ஹோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளிகளை வெளியிட்டதோடு, 34 வயதேயான டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது உலக கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் ஐ பார்க்கலாம் என நம்பலாம். அடுத்த ஐ.பி.எல் தொடரில் டிவில்லியர்ஸ் ஆடுவார் என நம்பலாம். அடுத்த தொடரிலாவது பெங்களூர் அணி சாதிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்…

5.மும்பை இந்தியன்ஸ்
நடப்பு சம்பியன்கள். இரண்டாவது தடவையாகவும் நடப்பு சம்பியன்களாக களம் இறங்கி லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.(2016 ஆம் ஆண்டிலும் நடப்பு சாம்பியன்களாக களம் இறங்கி லீக் சுற்றோடு வெளியேறி இருந்தார்கள்) மும்பை அணியின் தோல்விக்கு சரியான combination ஒன்றை அவர்கள் ஏற்படுத்த தவறியதை குறிப்பிடலாம். அதாவது அணித்தெரிவு, துடுப்பாட்ட வரிசையில் சரியான வீரர்கள் களம் இறக்கப்படாமை என ஆரம்பத்தில் சிக்கலில் தவித்தது மும்பை அணி. குறிப்பாக ரோகித் சர்மா ஓட்டங்களை குவிக்காதது, டுமினி களம் இறங்கிய ஆட்டங்களில் கூட சரியான துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்படாதது, சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற தவறியது, பும்ப்ரா ஆரம்ப போட்டிகளில் சொதப்பியது என மும்பை அணிக்கு பாதகமாகவே தொடர் ஆரம்பித்தது. தான் பங்கேற்ற முதல் ஆறு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று இருந்தது மும்பை அணி. இந்த ஆரம்பத்தில் ஏற்பட்ட தோல்விகளே மும்பை அணி ப்ளே ஓஃப் சுற்றுக்கு முன்னேற முட்டுக்கட்டையாக இருந்தது என்றாலும் மறுப்பதற்கில்லை. பின்னர் சுதாரித்து கொண்ட மும்பை அணி அனைத்து போட்டிகளிலும் அசத்தியது. கடைசி எட்டு லீக் ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்று ப்ளே ஓஃப் சுற்றுக்கான பந்தயத்தில் மல்லுக்கு நின்றது. ஆனாலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இறுதி லீக் போட்டியில் டெல்லி அணியுடனான தோல்வி மும்பை அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது எனலாம். மும்பை அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக ரோகித் சர்மாவை குறிப்பிடலாம். தொடர் முழுவதும் ஒற்றை ஓட்டங்களுடன் வெளியேறி வெறுப்பேற்றினார். மற்றையவர் பொலார்ட். ஏலத்தின் போது right to match card மூலம் தக்க வைக்கப்பட்ட பொலார்ட், மும்பை அணிக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மும்பை அணி சார்பில் கவனத்தை ஈர்த்த வீரர்களாக சூர்யகுமார் ஜாதவ், இஷான் கிசான், ஹார்டிக் பாண்டியா, மயங் மார்கண்டே, பும்ப்ரா ஆகியோரை குறிப்பிடலாம். சூர்யகுமார் ஜாதவ் ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறங்கி சிறப்பான ஆரம்பங்களை வழங்கி கொண்டு இருந்தார். இளம் விக்கெட் காப்பாளர் இஷான் கிசான் மும்பை அணிக்கு அதிரடியான இன்னிங்ஸ் களை வழங்கினார் என்றாலும் தொடர்ச்சியான பெறுபேறுகளை கொடுக்க தவறினார். ஹார்டிக் பாண்டியா துடுப்பாட்டத்தில் அவ்வளவு கைகொடுக்காமல் விட்டாலும் பந்துவீச்சு, களத்தடுப்பு இரண்டிலும் அசத்தினார்.

பும்ப்ரா ஆரம்ப போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும் பிற்பாதி லீக் ஆட்டங்களில் தனது பந்துகள் மூலம் பேசினார். குறிப்பாக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் வீசிய அந்த பந்துவீச்சு பெறுதி சிறப்பானது. 4 ஓவர்களில் வெறுமனே 15 ஓட்டங்களை விட்டு கொடுத்து 3 இலக்குகளையும் சாய்த்தார். தொடரில் இருந்து வெளியேறினாலும் இறுதி நேரங்களில் தொடர்ச்சியாக பெற்று கொண்ட வெற்றிகள் புதிய வீரர்கள் குழாமில் இருந்து ஒரு சிறப்பான அணியை இனங்கண்டு விட்டார்கள் என்றே எண்ண தோன்றுகிறது. கண்டிப்பாக அடுத்த வருடம் பலமாக களம் காணுவார்கள் இந்த மும்பை இந்தியன்ஸ்…

4.ராஜஸ்தான் ரோயல்ஸ்
தொடரின் ஆரம்பத்தில் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருட தடை காரணமாக பங்கேற்க முடியாது போக ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பும் இல்லாமல் போனது. அணித்தலைவராக அனுபவ ரகானே நியமிக்கப்பட்டாலும் ஸ்மித் இல்லாதது துடுப்பாட்ட வரிசையில் ஸ்திரத்தன்மையை குறைத்தது என்றாலும் மிகையாகாது. எதிர்பார்ப்புகள் இன்றி களம் இறங்கிய அணி,பட்லரின் தனிமனித போராட்டம், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளின் வீழ்ச்சியால் ப்ளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்றாலும் மறுப்பதற்கில்லை. ஆரம்ப ஆட்டங்களில் ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்ட பிக்பாஷ் லீக்கின் அதிரடி நாயகன் டார்சி சோஃர்ட் இந்திய மண்ணில் அதிரடி காட்ட தவறினார். ரஹானேவும் ஓட்டங்களை குவிக்க அவசரப்பட்டு ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி பரிதாப நிலையில் இருந்தது. கடந்த தொடரில் மும்பை அணிக்காக அதிரடியான ஆரம்பங்களை வழங்கிய பட்லர் நான்காவது இலக்கத்தில் களம் இறக்கப்பட அவரும் ஓட்டங்களை பெறுவதற்கு சிரமப்பட்டார். பிற்பாதியில் ஆரம்ப ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்களை குவித்ததோடு அணியின் வெற்றிக்கும் பெரும் பங்கு வகித்தார் எனலாம். ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இந்த தொடரின் பெரிய விலைக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், மற்றும் ஜெய்தேவ் உனட்கட் இருவரையும் குறிப்பிடலாம். கடந்த தொடரில் புனே அணியை தனது சகலதுறை ஆட்டத்தின் மூலம் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்டோக்ஸ் இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படியான பெறுதிகள் எவற்றையும் வெளிக்கொணரவில்லை.

இந்திய வீரர்கள் வரிசையில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட உனட்கட் உம் ஏமாற்றினார். ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு இலக்குகளை சாய்க்கவும் தவறினார். இந்த இருவரினதும் தொடர்ச்சியான ஏமாற்றம் ராஜஸ்தான் அணியை பின்காலிலேயே நிற்க வைத்தது என்றாலும் மறுப்பதற்கில்லை. ராஜஸ்தான் அணி சார்பில் கவனத்தை ஈர்த்த வீரர்களாக பட்லர், ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கெளதம்,கிளாசன் ஆகியோரை குறிப்பிடலாம். பட்லர் ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்ட பின்னர் அசத்தினார்.அடுத்த தொடரில் ஆரம்ப வீரராக களம் இறக்கப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏலத்தின் போது ஆச்சர்யமான விலை மேற்கிந்தியாவின் ஜொஃப்ரா ஆர்ச்சர், முதல் ஆறு லீக் போட்டிகளிலும் காயம் காரணமாக ஆடாத ஆர்ச்சர் பின்னர் களம் இறங்கிய ஆட்டங்களில் தனது வேகத்தில் மிரட்டினார் என்றாலும் முக்கியமான ஆட்டங்களில் ஓட்டங்களையும் விட்டு கொடுத்தார். மற்றையவர் கிருஷ்ணப்பா கெளதம். சுழல்பந்து வீச்சு, இறுதி நேரங்களில் அதிரடி என ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை தந்த வீரர்களில் ஒருவர். குறிப்பாக பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி இலக்குகளையும் சாய்த்தார்.அத்தோடு இறுதி நேர அதிரடியில் வெளுத்து வாங்கினார் கெளதம். குறிப்பாக மும்பை அணியுடனான லீக் போட்டியில் இறுதி நேரத்தில் வெறுமனே 11 பந்துகளில் 33 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மற்றையவர் தென்னாப்பிரிக்காவின் ஹென்ட்ரிக் கிளாசன். துடுப்பாட்டத்தில் கைகொடுக்க தவறினார். இருந்தாலும் பட்லர் தாயகம் திரும்பியதன் பின்னர் விக்கெட் காப்பாளராக ஆடிய கிளாசன் ஸ்டம்பிங்க்,பிடியெடுப்பு என அசத்தினார். கன்னி தொடர், இந்திய ஆடுகளங்கள் என்பவற்றில் திணறினாலும் அடுத்த தொடர்களில் சாதிப்பார். ஸ்மித் அடுத்த தொடரில் பங்கேற்கும் பட்சத்தில் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.பார்க்கலாம் ஸ்மித் இன் வரவுடன் அடுத்த தொடரில் எழுச்சி பெறுவார்களா ராஜஸ்தான் அணி என்று….

3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணியின் வெற்றி அணித்தலைவர் கம்பீர் இல்லாமல் புதிதாக தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் களம் இறங்கும் போதே துடுப்பாட்டம், பந்துவீச்சு என சமபலம் வாய்ந்த அணியாகவே களம் இறங்கியது கொல்கத்தா அணி. ஆனால் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் விலகியமை பந்துவீச்சில் பாதிப்பை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. தொடர் முடியும் வரை இந்த நான்காவது வெளிநாட்டு வீரருக்கான தேடலில் தான் இருந்தது கொல்கத்தா அணி. தினேஷ் கார்த்திக் அணித்தலைவராக தனது கன்னி தொடரில் முத்திரை பதித்திருக்கிறார் என்று சொல்லலாம். அணித்தெரிவு, நேர்த்தியான துடுப்பாட்டவரிசை, பந்துவீச்சு மாற்றங்கள் என முத்திரை பதித்தார் தமிழ் நாட்டின் நாயகன். தொடர் முழுவதும் ஒரு அணியாக இணைந்து வெற்றிகளை குவித்த அணி எது என்று பார்த்தால் அது கொல்கத்தா அணி என்றே எண்ண தோன்றுகிறது. குறிப்பாக ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு வீரர் என்பதை விடுத்து அணியின் வீரர்கள் அனைவரும் தமது பங்களிப்புகளை வழங்கி அணியின் வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தார்கள். கொல்கத்தா அணி சார்பில் கிட்டத்தட்ட அனைவரும் கவனத்தை தம் பக்கம் திருப்பினர் என்றாலும் மறுப்பதற்கில்லை. ஆரம்ப ஜோடி கிறிஸ் லின், நரைன். இதில் நரைன் அடித்தாடுவதற்காக களம் இறக்கப்படுகிறேன் என்ற காரணம் அறிந்து வேகமாக ஓட்டங்களை குவித்தார். ஒரு சில போட்டிகளில் ஏமாற்றினாலும் பல போட்டிகளில் கை கொடுத்தார். லின் வழக்கமான அதிரடியை விடுத்து சற்றே அடக்கி வாசித்தாலும் ஓட்டங்களை அணிக்கு பெற்றுக்கொடுத்தவாறு இருந்தார். நிதிஷ் ராணா, உத்தப்பா அடுத்தடுத்த மூன்றாம், நான்காம் இலக்கங்களில் ஓட்டங்களை சேர்த்தாலும் big innings என்று சொல்ல கூடிய பெரிய ஓட்டப்பெறுதிகளை பெறாதது சற்று பின்னடைவே. அடுத்து அணித்தலைவர் கார்த்திக். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி கொல்கத்தா அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்று கொடுத்த வீரரானார். குறிப்பாக இந்த தொடர் முழுவதும் finisher என்று சொல்ல கூடிய ஒவ்வொரு போட்டியிலும் இறுதி நேரங்களில் களத்திற்கு தேவையான ஆட்டத்தை ஆடி கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித் தந்திருந்தார் கார்த்திக்.

அடுத்து அதிரடி மன்னன் ரசல். ஆறுகளை பறக்க விட்டு அதிரடியாக ஓட்டங்களை பெற்று கொடுத்ததோடு பந்துவீச்சிலும் கைகொடுத்தார். வரிசையில் அடுத்தவர் இளையோர் உலகக்கிண்ண நாயகன் சுப்மன் கில். வழக்கமாக மூன்றாம் இலக்கத்தில் ஆடும் கில் கொல்கத்தா அணியில் பின்களத்தில், வழக்கமாக ஆறாம் இலக்க வீரராகவே பயன்படுத்தப்பட்டார். பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் ஓட்டங்களை குவிக்க தவறவில்லை இந்த இளம் கில். குறிப்பாக சென்னை அணியுடனான போட்டியில் மூன்றாம் இலக்கத்தில் களம் இறங்கி பெற்ற அரைச்சதம் இவரின் திறமையை காட்ட தவறவில்லை. அடுத்தடுத்த தொடர்களில் அசத்துவார் என நம்பலாம். பந்துவீச்சில் இரண்டு சுழல் மாயாவிகளை தன்னகத்தே கொண்டிருந்தது கொல்கத்தா அணி. சுனில் நரைன், குல்தீப் ஜாதவ் இருவரும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர் என்றாலும் மிகையாகாது. சிக்கனமாக பந்துவீசியதோடு இலக்குகளையும் சாய்த்தனர் இருவரும். இவர்களோடு பவர் ப்ளேயில் கூட சிறப்பாக பந்து வீசிய சாவ்லாவும் சேர்ந்து அசத்தினார். இளம் வேகப்பந்து வீச்சாளர்களான சிவம் மவி, ப்ரசீட் கிருஷ்ணா இருவரும் தம்மையும் கவனிக்க செய்தனர். இந்தியாவில் 145+, அதாவது மணிக்கு 145 km வேகத்தில் பந்துவீச கூடிய இவர்கள் போன்ற இளைய வீரர்கள் இந்திய அணி இனிவரும் காலங்களில் வேகப்பந்து வீச்சிலும் கோலோச்சும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தொடரின் qualifier வரை முன்னேறிய இவர்கள் அடுத்த வருடம் ஸ்டார்க் இன் வருகையோடு இன்னும் பலமாக களம் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை….

2.சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
பந்துவீச்சு பலமான அணி. இறுதியில் இவர்களின் பந்துவீச்சே இவர்களின் கிண்ணக்கனவை தகர்த்தது என்று சொல்லலாம்.இவர்களும் தொடரின் ஆரம்பத்திலேயே அணித்தலைவர் வோர்னரை இழந்தனர். பதில் அணித்தலைவராக நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். நடப்பு தொடரின் ஒரே ஒரு வெளிநாட்டு கப்டனானார் வில்லியம்சன். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் தொடர் முழுவதும் அணித்தலைவராகவும், துடுப்பாட்டத்திலும் அசத்தினார் வில்லியம்சன். 17 இன்னிங்ஸ் களில் 735 ஓட்டங்களை குவித்து ஹைதராபாத் அணியின் வெற்றி பயணத்தின் முதுகெலும்பாக இருந்தார் வில்லியம்சன் என்றாலும் மிகையாகாது. அனைத்து போட்டிகளிலும் போட்டியின் போக்கிற்கேற்ப இன்னிங்ஸ் களை ஆடுவதில் முன்னின்றார் வில்லியம்சன். அணித்தலைமையிலும் அசத்தினார். சரியான களத்தடுப்பு வியூகங்கள், பந்துவீச்சு மாற்றங்கள் என முத்திரை பதித்தார். ஆனாலும் ஒரு சில இடங்களில் சில முடிவுகள் எதிர்பாராதவையாக இருந்ததோடு முக்கியமான ஆட்டங்களில் அணியின் தோல்விக்கும் வழிசமைத்தது என்றாலும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக சென்னை அணியுடனான qualifier இல் 18 ஆவது பந்துப்பரிமாற்றத்தை வீசுவதற்கு பரத்வெய்ட் ஐ அழைத்தது அந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருந்தும் இறுதியில் தோல்வியை தழுவியது சன் ரைசர்ஸ் அணி. அதே போன்று இறுதி போட்டியிலும் சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற புவனேஷ்வர் குமாரின் மூன்று ஓவர்களையும் பவர் ப்ளேயிலேயே முடித்தார். ஏழாவது இலக்க வீரர் வரை நீண்ட துடுப்பாட்ட வரிசை உள்ள சென்னை அணியை கட்டுப்படுத்த அவர் வகுத்த அந்த வியூகம் தான் என்ன என்று இன்னும் புரிந்தபாடில்லை. அடுத்த தொடரில் வோர்னர் ஆடுமிடத்து சன் ரைசர்ஸ் நிர்வாகம் யாரை அணித்தலைவராக தொடர போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வி….
மறுபுறத்தில் தவானும் சன் ரைசர்ஸ் அணிக்காக ஓட்டங்களை குவித்து நல்ல தொடக்கங்களை வழங்கி கொண்டு இருந்தார். ஆனால் இரண்டாவது ஆரம்ப வீரராக சகா, ஹேல்ஸ்,கோஸ்வாமி என மூவரை பயன்படுத்தியும் சன் ரைசர்ஸ் க்கு வெற்றி கிடைக்கவில்லை, ஆரம்ப விக்கெட்டை இலகுவில் இழந்தாலும் மூன்றாம் இலக்கத்தில் வில்லியம்சன் நங்கூரம் இட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் மறுபடியும் வேறு எந்த வீரர்களும் அதற்கு பக்கபலமான இன்னிங்ஸ் களை விளையாடுவதற்கு தவறியிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சன் ரைசர்ஸ் நிர்வாகத்தால் பெரிய விலைக்கு வாங்கப்பட்ட மனிஷ் பாண்டே ஏமாற்றினார். தொடரில் ஒரு அரைச்சதம் மட்டுமே கடந்தார். முக்கியமாக, போட்டிகளின் இறுதி நேரங்களில் கூட அடித்தாடாமல் வெறுப்பேற்றினார் பாண்டே. இதன் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி தகுதிகாண் போட்டி, இறுதிப்போட்டி இரண்டிலும் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டும் இருந்தார். அடுத்து பங்களாதேஷ் இன் சகலதுறை வீரர் சகிப் போட்டிகளில் ஓட்டங்களை குவித்தாலும், பெரிய ஓட்டப்பெறுதிகளை பெற தவறினார். யூசுப் பதான் சில போட்டிகளில் இறுதி நேரங்களில் அதிரடிகளில் ஓட்டங்களை பெற்றாலும், களத்தடுப்பில் சொதப்பினார். ஆனாலும் இறுதிப் போட்டியில் ஆடிய அதிரடியான அந்த ஆட்டமே சன் ரைசர்ஸ் அணி பெரிய ஓட்ட இலக்கை நிர்ணயிக்க உறுதுணையாக இருந்ததை மறுக்க முடியாது. கன்னி ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியிலும் இதே சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக அரச்சதத்தை கடந்ததோடு அந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவாகி இருந்தார் யூசுப் பதான். சன் ரைசர்ஸ் சார்பில் அதிகம் கவர்ந்த வீரர் என்றால் ஆப்கானிஸ்தானின் ரசீட் கான் ஐ குறிப்பிடலாம். ரசீட் கானின் சுழல் சூறாவளியில் எதிரணி வீரர்கள் நிலைகுலைந்தனர் என்றாலும் மறுப்பதற்கில்லை. மிகவும் சிக்கனமாகவும், அணிக்கு தேவையான போது இலக்குகளையும் சாய்த்து சன் ரைசர்ஸ் அணியின் முக்கியமான சொத்தாக தன்னை மாற்றி இருக்கிறார் ரசீட் கான். குறிப்பாக கண்டிப்பாக வென்றாக வேண்டிய இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 11 பந்துகளில் 34 ஓட்டங்களை குவித்து துடுப்பின் மூலமும் பலம் சேர்த்தார் ரசீட். களத்தடுப்பிலும் அசத்த தவறவில்லை இந்த ஆப்கானிஸ்தானின் இளம் சுழல்புயல். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கோல், ஸ்டான்லேக் ஆகியோர் தடம்பதித்தனர். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக சில ஆட்டங்களில் ஆடாமல் போனாலும் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை உறுதி செய்தார். பவர் ப்ளே என்றாலும் சரி, இறுதி நேரங்களில் என்றாலும் சரி போட்டு தாக்கினார் புவி. சித்தார்த் கோல் ஹோலியின் தலைமையில் இளையோர் உலகக் கோப்பையில் ஆடிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர். கடந்த வருடம் அசத்தி இருந்தார். இந்த தொடரிலும் இலக்குகளை சாய்த்தாலும், முக்கியமான ஆட்டங்களில் ஓட்டங்களையும் விட்டு கொடுத்தார். தனது பந்துவீச்சு பெறுபேறுகள் மூலம் இந்திய தேசிய அணிக்காகவும் தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சித்தார்த் கோல், இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி தருவார் என நம்பலாம். ஸ்டான்லேக்,ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர். காயம் காரணமாக தொடரின் இடையில் விலகி இருந்தாலும், ஆடிய ஆரம்ப ஆட்டங்களில் தனது வேகத்தில் அச்சுறுத்தி இருந்தார்.பந்துவீச்சில் பலமான அணி, பந்துவீச்சு மூலம் வெற்றிகளை குவித்த அணி சன் ரைசர்ஸ் தான் என்றாலும், தொடரில் பெறப்பட்ட ஐந்து சதங்களில் நான்கு சதங்கள் இவர்களுக்கு எதிராகவே பெறப்பட்டு இருக்கிறது.அத்தோடு இன்னும் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்கள் சன் ரைசர்ஸ் அணியினர். ஒரே தொடரில் எந்த ஒரு அணியும் ஒரே எதிரணியிடம் இரண்டு போட்டிகளுக்கு மேல் தோல்வி அடைந்தது இல்லை. ஆனால் சன் ரைசர்ஸ் இந்த தொடரில் இறுதி போட்டி உட்பட சென்னை அணியுடனான நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது தான் அந்த மோசமான சாதனை. இந்த தொடரில் இறுதி போட்டி வரை முன்னறிய அணி அடுத்த தொடரில் வோர்னர், ஸ்டான்லேக் இருவரினதும் வருகையோடு மிகவும் பலமாக களம் காணும் என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை….

1.சென்னை சுப்பர் கிங்ஸ்
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் களம் இறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி தமது மீள்வருகையை கிண்ணத்தோடு நிறைவு செய்திருக்கிறார்கள். இதுவரை நடந்த அனைத்து தொடர்களிலும் ஒரே தலைவரின் கீழ் ஆடிக்கொண்டிருக்கும் ஒரே அணியாக திகழ்கிறது சென்னை அணி. இரண்டு வருட இடைவெளியின் பின்னர் ஒரு அணியை முழுமையாக தலைமையேற்று வழிநடத்திய டோனி, சில தழும்பல்கள் இருந்தாலும் சென்னை அணிக்கு மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பலமான துடுப்பாட்ட வரிசையுடன் தொடரை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட அணி, அதே போன்று அனுபவமான துடுப்பாட்டத்தின் மூலம் கிண்ணத்தை வென்று சாதித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். சென்னை அணிக்கு பெரிதும் கைகொடுத்தது துடுப்பாட்டமே. ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் அல்லது இருவர் என மாறி மாறி துடுப்பாட்டத்தில் அசத்தினர்.முதலாவது லீக் போட்டியில் ப்ராவோவில் ஆரம்பித்து இறுதிப் போட்டியில் வட்சன் வரை இது தொடர்ந்தது. ஆரம்ப ஜோடி வட்சன், ராயுடு இணை சிறந்த ஆரம்ப இணைப்பாட்டங்களை வழங்கினர். இந்த தொடரில் ஆரம்ப வீரராக புதிய அவதாரம் எடுத்த ராயுடு அசத்தினார். டு ப்ளசிஸ் ஆடிய ஆட்டங்களில் நான்காவது இலக்கத்தில் ஆடினாலும் அதிலும் அசத்தினார்.மொத்தமாக தொடரில் 34 சிக்சர்கள் அடங்கலாக 602 ஓட்டங்களை குவித்திருந்தார் ராயுடு. வட்சன் சில போட்டிகளில் சொதப்பினாலும் பல போட்டிகளில் கைகொடுத்தார். தொடரில் இரண்டு சதங்களையும் குவித்தார் வட்சன். அதிலும் இறுதிப் போட்டியில் ஆடிய அந்த ருத்ரதாண்டவம் சென்னை அணிக்கு மூன்றாவது கிண்ணத்தை பெற்று கொடுத்தது என்றாலும் மறுப்பதற்கில்லை. இறுதிப் போட்டியில் ஓட்டக்கணக்கை ஆரம்பிப்பதற்கு 11 பந்துகளை வீணடித்த வட்சன் இறுதியில் 57 பந்துகளில் 117 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்ததோடு ஆட்டநாயகனாகவும் தெரிவானார். அடுத்து Mr.IPL என செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா, ஆரம்ப ஆட்டங்களில் ஓட்டங்களை குவிக்க தவறினாலும் பின்னர் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு பங்கு வகித்தார். கூடுதலான போட்டிகளில் நான்காம் இலக்கத்தில் அல்லது ஐந்தாம் இலக்கத்தில் ஆடிய டோனியும் இம்முறை ஓட்டங்களை குவிக்க தவறவில்லை. சற்று அதிரடியாகவும் ஆடி ஓட்டங்களை குவித்தார் டோனி. டு ப்ளசிஸ் கிடைத்த வாய்ப்புகளில் ஓட்டங்களை பெற தவறினாலும் சன் ரைசர்ஸ் அணியுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் தனிமனிதனாக போராடி வென்று கொடுத்த இன்னிங்ஸ் இந்த வெற்றிப்பயணத்தின் ஒரு மைல் கல் என்பதை மறுப்பதற்கில்லை. சகலதுறை வீரர்கள் ப்ராவோ, ஜடேஜா இருவரும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை என்றே சொல்லலாம். முதலாவது லீக் போட்டியின் பின்னர் ப்ராவோவின் துடுப்பில் இருந்து பெரியளவில் ஓட்டங்கள் வரவில்லை. ஜடேஜாவின் துடுப்பில் இருந்து ஓட்டங்களே வரவில்லை என்றாலும் மறுப்பதற்கில்லை. துடுப்பாட்டத்தில் சொதப்பினார் ஜடேஜா. கடந்த தொடர்களில் death overs என்று அழைக்கப்படும் இறுதிக்கட்ட ஓவர்களை சிறப்பாக வீசிய ப்ராவோ,

இந்த தொடரில் அதிக ஓட்டங்களை விட்டு கொடுத்ததோடு அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளரானார். சென்னை அணி பந்துவீச்சில் பலவீனமாக இருந்தாலும் தீபக் சாகர், நெகிடி இருவரும் அசத்தினர். குறிப்பாக தீபக் சாகர் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி இலக்குகளையும் சாய்த்தார். நெகிடி பிற்பாதி ஆட்டங்களிலேயே வாய்ப்பு பெற்றாலும் தனது கன்னித்தொடரிலேயே அசத்தி இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றிக்கு உரிய அணியாக ஆடியது சென்னை அணி என்றாலும் மறுப்பதற்கில்லை. முதலாவது தகுதிகாண் போட்டியில் விளையாடியும் பந்துவீச வாய்ப்பு கிடைக்காத ஹர்பஜன் சிங் க்கு பதிலாக கரண் சர்மா அழைக்கப்பட்டு இருந்தார். சன் ரைசர்ஸ் இன் மத்திய வரிசையில் இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களை சமாளிப்பதற்காக சிறந்த உத்தி அது. அதற்கு ஏற்றாற்போல் முக்கியமான வில்லியம்சனின் இலக்கை சாய்த்தார் கரண் சர்மா. அத்தோடு கடந்த போட்டி போன்று அல்லாமல் இறுதி நேரத்தில் சிறப்பாகவே பந்துவீசி இருந்தனர் சென்னை பந்துவீச்சாளர்கள். துடுப்பாட்டத்தில் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய சன் ரைசர்ஸ் அணியை சமாளிக்க தடுமாறினாலும் விக்கெட்களை பாதுகாத்து கொண்டனர் வட்சன் மற்றும் ரெய்னா ஜோடி. இருவரும் களத்தில் சற்று நிலை கொண்ட பின்னர் ஓட்டங்களை குவிக்க தொடங்கினர். அதிலும் வட்சன் சன் ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார் என்றே சொல்லலாம்.அத்தோடு கடந்த தகுதிகாண் போட்டியில் சுழலில் கலக்கி விக்கெட்களை வீழ்த்திய ரசீட் கானின் பந்துபரிமாற்றங்களை மிகவும் கவனத்துடன் கையாண்டு விக்கெட் இழப்புக்களை தவிர்த்த இந்த ஜோடி வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றாலும் மறுப்பதற்கில்லை.வட்சன் ஐ.பி.எல் வரலாற்றில் தனது சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை நேற்றைய தினம் ஆடினார் என்றாலும் மிகையாகாது.
அனைவரும் வயதான வீரர்கள். இதில் அனைவரும் அடுத்த தொடரில் ஆடுவார்களா என்ற கேள்வியும் நியாயமானதே. தோனிக்காக இந்த தொடரை வெல்ல ஆசைப்படுகிறோம் என ரெய்னா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது தோனியின் இறுதி ஐ.பி.எல் தொடராகவும் இது அமையலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது என்றாலும் மறுப்பதற்கில்லை. பார்க்கலாம் அடுத்த தொடரை நடப்பு சம்பியன்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்று…..

இந்த தொடரின் விருதுகள் விபரம்:
தொடரின் Fair play award, அதாவது களத்தில் நியாயமான மற்றும் நற்குணமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியாக மும்பை அணி தெரிவாகி இருக்கிறது.

தொடர் நாயகனாக அதாவது most valuable player award ஐ கொல்கத்தாவின் சுனில் நரைன் பெற்று கொண்டார். இது அவருக்கு இரண்டாவது தொடர் நாயகன் விருது.இதற்கு முன்னர் 2012 இலும் தொடர் நாயகனாக தெரிவாகி இருந்தார் நரைன். இரண்டு தொடர் நாயகன் விருதுகள் பெற்ற இரண்டாவது வீரரானார் நரைன். இதற்கு முன்னர் வட்சனும் இரண்டு தடவைகள் தொடர் நாயகன் விருதை பெற்றிருந்தார்.

இந்த தொடரின் வளர்ந்து வரும் வீரர் அதாவது emerging player award ஐ டெல்லி அணியின் அதிரடி மன்னன் ரிசப் பாண்ட் பெற்றிருந்தார். அத்தோடு இந்த தொடரின் stylish player award ஐயும் பாண்ட் பெற்றிருந்தார்.

அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கான “ஒரேஞ்ச்” நிற தொப்பிக்கு சொந்தக்காரர் ஆனார் வில்லியம்சன். அதிக இலக்குகளை சாய்த்த வீரருக்கான “பேர்ப்பிள்” நிற தொப்பிக்கு சொந்தக்காரர் ஆனார் பஞ்சாப் அணியின் அன்ட்ரூ டை.

இந்த தொடரின் போட்டிகளில் இருந்து ஒரு கனவு அணியை ஐ.பி.எல் வீரர்கள் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த அணி👉👉

1.கே எல் ராகுல்
2.ராயுடு
3.வில்லியம்சன்
4.டிவில்லியர்ஸ்
5.ரிசப் பாண்ட்
6.தோனி(C/WK)
7.ஹார்டிக் பாண்டியா
8.ரசீட் கான்
9.குல்தீப் ஜாதவ்
10.அன்ட்றூ டை
11.பும்ப்ரா

12.சுனில் நரைன்

 

#தேவதாஸ்_பிரசன்னா

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.