IPL - Indian Premier League

மும்பை இமாலய வெற்றி; பிளே-ஓப் வாய்ப்பு கையில்..!!!

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கொல்கத்தா ஈர்டன் காடன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் இஷன் கிஷானின் மின்னல் வேக அரைச்சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் மும்பை அணி 102 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைத் தமதாகியது.

மும்பையின் அதிரடி

முன்னதாக இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன் படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி தொடக்கம் முதலே ஓட்டங்களை வேகமாகப் பெற்றது. ஆரம்ப வீரர்களின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய இஷன் கிஷான் குலதீப் யாதவ்வின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசி வான வேடிக்கை காட்டினார். 17 பந்துகளில் அரைச்சதம் கடந்த கிஷன் 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் அடங்கலாக 21 பந்துகளில் 62 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.

பின் வரிசையில் வந்த பென் கட்டிங்கும் வானவேடிக்கை காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 210 என்ற இமாலய இலக்கை தொட்டது. பந்துவீச்சில் கொல்கத்தா சார்பாக பியூஸ் சவ்லா 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

கொல்கத்தாவின் சொதப்பல்

பதிலளித்த கொல்கத்தா அணி வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முனைந்த போதிலும் அடுத்தடுத்து இலக்குக்களை இழந்து திணறியது.

முன்னணி வீரர்கள் எவரும் சோபிக்காத நிலையில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால் மும்பை அணி 102 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது. இவ் வெற்றியோடு மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிராக தொடர்ச்சியாக எட்டு வெற்றிகளை பெற்ற சாதனையையும் பதிவு செய்துள்ளது.

மும்பை சார்பாக பந்துவீச்சில் பாண்டியா சகோதரர்கள் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.

இவ்வெற்றி மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காமிடத்திற்கு முன்னேற கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு தள்ளப்பட்டது. இவ் வெற்றியோடு மும்பை அணியின் நிகர ஓட்ட சராசரியும் வலுவாக அதிகரித்ததோடு பிளே-ஓப்பிற்கான வாய்ப்பையும் பிரகாசமாக்கி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.