India

தினேஷ் கார்த்திக் அதிரடி: சென்னையை விரட்டி அடித்தது கொல்கத்தா …!!

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் கொல்கத்தா ஈர்டன் காடன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் சபுமான் ஹில் ஆகியோர் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடினமான இலக்கை இலகுவாக விரட்டி வெற்றியைத் தமதாக்கியது.

முன்னதாக இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

சென்னையின் இன்னிங்ஸ்

இதன் படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் ஓட்டங்களையும் வேகமாகப் பெற்றது. மத்திய வரிசையில் வந்த டோனி வானவேடிக்கை காட்ட, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய தோனி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களைக் குவிக்க, ஷோன் வற்சன் 36 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சுனில் நரைன் மற்றும் பியூஸ் சவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்கள்.

கொல்கத்தாவின் பதிலடி

பதிலளித்த கொல்கத்தா அணி வேகமாக ஓட்டங்களைக் குவித்த போதிலும் 11.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த போதிலும், அதன்பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், இளம் வீரர் சபுமான் ஹில்லுடன் இணைந்து வெற்றியை கொல்கத்தா பக்கம் திருப்பினார்.

இறுதியில் கொல்கத்தா அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. சபுமான் ஹில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களைப் பெற, தினேஷ் கார்த்திக் வெறும் 18 பந்துகளில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் 32 ஓட்டங்களைக் குவித்ததோடு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய சுனில் நரைன் தெரிவானார்.

இவ்வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேற சென்னை அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.