IPL - Indian Premier League

IPL 2018

IPL 2018 ஓர் கண்ணோட்டம்

2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் பதினொராவது தொடராக அமைய இருக்கிறது இந்த வருட ஐ.பி.எல் தொடர். மற்றைய நாட்டு உள்ளூர் தொடர்களை விட ஐ.பி.எல் தொடர் முக்கியம் பெற காரணம் கிட்டத்தட்ட அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் பங்குபெறும் ஒரு தொடர் என்பது தான் காரணமாக இருக்க முடியும்.

ஒவ்வொரு தொடர்களும் சிக்ஸர் மழைகள்,அதிரடியான ஆட்டங்கள், அதிரடிகளை அடக்கும் பந்துவீச்சுகள், குறைந்த ஓட்டங்கள் என்றாலும் விறுவிறுப்பான போட்டிகள் என எம்மை குஷிப்படுத்த தவறியதில்லை. இந்த தொடரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என நம்பலாம். தொடர் ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இன்னும் இரண்டு மாத காலம் அதிரடியான ஒரு கிரிக்கெட் திருவிழாவை நோக்கி காத்திருக்கிறோம் என்றால் மிகையாகாது.

இதுவரை நடந்த பத்து தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று தடவைகளும், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணத்தை சுவீகரித்திருக்க நடப்பு சம்பியன்களாக இருக்கிறார்கள் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து இன்றுவரை
2008-ராஜஸ்தான் ரோயல்ஸ்
2009-டெக்கான் சார்ஜர்ஸ்
2010-சென்னை சுப்பர் கிங்ஸ்
2011-சென்னை சுப்பர் கிங்ஸ்
2012-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013-மும்பை இந்தியன்ஸ்
2014-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015-மும்பை இந்தியன்ஸ்
2016-சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2017-மும்பை இந்தியன்ஸ்
2018-?????

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் களம்காண காத்திருப்பது இரண்டு அணி ரசிகர்களுக்கு மாத்திரம் அல்ல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த தொடரின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். இரண்டு அணிகளும் ஐ.பி.எல் அரங்கில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய அணிகள், இந்த தொடரில் சாதிப்பார்களா என்று பார்க்கலாம்.

இந்த தொடரில் எந்த அணிக்கான வாய்ப்புகள் அதிகம் என்று நோக்கலாம்.

1.மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் கிண்ணத்தை அதிகபட்சமாக மூன்று தடவைகள் கைப்பற்றிய அணி. ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் அசத்துமா என்று பார்த்தால் சற்று கேள்விக்குறியாக தான் இருக்கிறது நிலமை. ரோகித் சர்மா தவிர்த்து அனுபவமான உள்ளூர் அதாவது இந்திய துடுப்பாட்ட வீரர்கள் யாரும் இல்லாதது அணித்தெரிவில் கடும் நெருக்கடியை தரும். நான்கு வெளிநாட்டு வீரர்களே அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் துடுப்பாட்டத்திலும் சரி, பந்துவீச்சிலும் சரி வெளிநாட்டு வீரர்களே அதிகம் பங்களிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். எனவே மேற்கிந்தியாவின் ஆரம்ப அதிரடி மன்னன் லூயிஸ், டுமினி இருவருமே கண்டிப்பாக அணியின் நிரந்தர நிலையில் இருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. பாண்டியா சகோதரர்கள்,பொலார்ட் என சகலதுறை வீரர்கள் இருப்பது பலமே. அத்தோடு பந்துவீச்சில் பும்ப்ரா,கமின்ஸ்,மக்ளஃன்கன், முஸ்தாபிசர் ரஹ்மான் என இருக்கும் வரிசை இன்னும் பலம் தான் என்றாலும் வெளிநாட்டு வீரர்களில் இருக்கும் கட்டுப்பாடு மும்பை அணி அதனை எவ்வாறு கையாளப்போகிறது என்றும் பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்.

2.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐ.பி.எல் வரலாற்றில் முக்கியமான தனக்கென ஓர் இடம் பிடித்த அணி என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை இரண்டு ஐ.பி.எல் கிண்ணங்களை சுவீகரித்திருக்கிறது கொல்கத்தா அணி. ஆனால் இரண்டுமே கம்பீர் தலைமையில் பெறப்பட்ட கிண்ணங்கள்.தற்போது கம்பீர் தனது சொந்த மாநிலமான டெல்லி அணிக்கு மாற்றம் பெற்றிருப்பது அணித்தலைமை என்ற வகையில் கொல்கத்தா அணிக்கு இழப்பே. ஆனால் இந்த முறை ஏலத்தின் போது தனக்கு தேவையான வீரர்களை தெரிவு செய்வதில் கொல்கத்தா முகாமைத்துவம் சிறப்பாகவே செயற்பட்டு இருக்கிறது. தினேஷ் கார்த்திக்,உத்தப்பா, குல்தீப் ஜாதவ்,கிறிஸ் லின்,ரசல்,ஸ்ரார்க் என சிறப்பான தெரிவுகள் என்றாலும் தற்போது ஸ்ரார்க்,ரசல் இல்லாதது இழப்பே. அவ்வளவு சிறப்பான பந்துவீச்சாளர்கள் எவரும் இல்லாத நிலையில் கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தையே பெரிதும் நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றாலும் மிகையாகாது. பார்க்கலாம் இம்முறை லின்,உத்தப்பா,கார்த்திக் அத்தோடு அண்மைய இளையோர் உலகக் கிண்ண தொடர் நாயகன் சுப்மன் கில் என்ன செய்ய போகிறார்கள் என்று.

3.பெங்களூர் ரோஜல் சலஞ்சர்ஸ்

ஹோலி,டி வில்லியர்ஸ்,கெய்ல் என t-20 போட்டிகளில் சக்கை போடு போட கூடிய வீரர்கள் இருந்தும் இன்னமும் ஒரு கிண்ணம் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது பெங்களூர் அணி. ஒவ்வொரு தொடரின் ஆரம்பத்திலும் வெற்றிக்குரிய அணியாக கணிக்கப்பட்டாலும் ஆரம்ப போட்டிகளிலேயே சோடை போய்விடுவார்கள் இவர்கள். பின்னர் தலைக்கு மேல் வெள்ளம் போன கதையாகிவிடும் இவர்களின் நிலமை. இம்முறையும் ஹோலி,டி வில்லியர்ஸ்,மக்கலம் என அதிரடி வீரர்கள் இருந்தாலும் துடுப்பாட்டத்தில் உள்ளூர் வீரர்கள் என ஹோலியை தவிர வேறு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாமல் இருப்பது பின்னடைவே. பந்துவீச்சு வழக்கத்தை விட இம்முறை சற்று பலமாகவே இருந்தாலும் தனிமனித போராட்டங்களே இம்முறையும் கைகொடுக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் ஹோலி இம்முறையாவது பெங்களூர் அணிக்கு கிண்ணத்தை பெற்று கொடுப்பாரா என்று.

4.சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

தொடர் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு பெரிய இடியை வாங்கி இருக்கிறது சன் ரைசர்ஸ் நிர்வாகம் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அணித்தலைவர் மற்றும் எப்போதும் அதிரடியான ஆரம்பத்தை வழங்கும் ஆக்ரோஷமான டேவிட் வோர்னரை இழந்து இருக்கிறது சன் ரைசர்ஸ். வோர்னர் இல்லாதது பெரியளவில் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இந்திய வீரர்கள் சரி, வெளிநாட்டு வீரர்கள் சரி அனைவரையும் தேவைக்கு அதிகமாகவே வைத்திருக்கிறது சன் ரைசர்ஸ் நிர்வாகம். தவான்,மனிஷ் பாண்டே, சகா, புவனேஷ்வர் குமார், யூசுப் பதான் என இந்திய வீரர்களாக இருக்கட்டும், வில்லியம்ஸன், சகிப் அல் ஹசன், ரசீட் கான் என வெளிநாட்டு வீரர்களாக இருக்கட்டும் ஒரு பலமான அணிக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கிறது என்றாலும் மறுப்பதற்கில்லை. பார்க்கலாம் வில்லியம்ஸனின் தலைமைத்துவத்தில் தமது இரண்டாவது கிண்ணக் கனவை நனவாக்குவார்களா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என்று.

5.ராஜஸ்தான் ரோயல்ஸ்

இரண்டு வருட தடைகளின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் அரங்கில் காலடி எடுத்து வைக்கிறது ராஜஸ்தான் அணி.கன்னித் தொடரின் சாம்பியன்ஸ். அதன் பிறகு பெரியளவில் சாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அத்தோடு ராஜஸ்தான் அணியும் அணித்தலைவர் ஸ்மித் ஐ இழந்து தடுமாறிய நிலையில் தான் இருக்கிறது. இம்முறை ஏலத்தின் போது பென் ஸ்டோக்ஸ், உனட்கட், ஆர்ச்சர் என பெரிய விலைகளுக்கு வீரர்களை வாங்கி இருந்தாலும் ஓர் சமநிலையான அணிக்கு தேவையான வீரர்களை தெரிவு செய்ய தவறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரஹானே,சாம்சன் இருவருமே இந்திய தரப்பில் நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள். வெளிநாட்டு வீரர்களிலும் நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் என்று குறிப்பிடும் அளவில் நட்சத்திரங்கள் யாரும் இல்லை. ஸ்டோக்ஸ் இம்முறையும் சகலதுறை பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏலத்தின் ஜக்பொட் மேற்கிந்தியாவின் ஜொப்ரா ஆர்ச்சர் பிக் பாஷ் லீக் இல் காட்டிய சகலதுறை பெறுபேறுகளை வழங்குவாரா என்று பார்க்கலாம். பந்துவீச்சும் குறிப்பிடும் படி இல்லை. மீள்வருகையில் சாதிப்பது ராஜஸ்தான் அணிக்கு அசாத்தியமே.

6.கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் எந்த தொடரிலும் பெரியளவில் சாதிக்காத ஒரு அணி. ஆனால் இம்முறை இருக்கும் வீரர்கள் வைத்து பார்க்கும் போது இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கவனிக்க வேண்டிய அணியாக மாறி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஏலத்தின் போதே அதிகளவில் வீரர்களை பெற்று கொள்ள முனைப்பு காட்டிய ப்ரீத்தி சிந்தா அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் எனலாம். அஸ்வின்,அக்சார் பட்டேல், கருண் நாயர், ராகுல்,யுவராஜ் சிங், மயங் அகர்வால் என ஒரு தொகை இந்திய வீரர்கள் மறுபுறம் பிஞ்ச்,மில்லர், கெய்ல்,ஸ்டொய்னிஸ்,அன்ட்றூ டை என வெளிநாட்டு வீரர்கள் என அணித்தெரிவில் பல தெரிவுகள் கைவசம் வைத்திருக்கிறது பஞ்சாப் அணி. அஸ்வின் அணித்தலைமைக்கு புதியவர் என்பதே சற்று யோசிக்க வேண்டும் என்றாலும் அதிக அனுபவம் கொண்டவர் என்பது மறுக்க முடியாதே.பார்க்கலாம் பஞ்சாப் அணி தமது கன்னிக் கிண்ணத்தை சுவீகரிப்பார்களா என்று.

7.டெல்லி டேர் டெவில்ஸ்

இதுவரை நடந்த தொடர்களில் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தாமல் எதிர்பார்த்தது போன்றே பெரியளவில் சோபிக்காமல் செல்லும் அணி. ஆனால் இம்முறை கண்டிப்பாக இவர்களிடம் இருந்து புதிதாக பலவற்றை எதிர்பார்க்கலாம் என்பது திண்ணம். ஏலத்தின் முன்னரே மொரிஸ்,பாண்ட்,ஐயர் ஆகியோரை தக்க வைத்துக் கொண்ட டெல்லி நிர்வாகம் ஏலத்தின் போதும் பல smart buy கள் அதாவது தேவையான வீரர்களை தெரிவு செய்தார்கள் என்றால் மிகையாகாது. கம்பீர் டெல்லி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த நிலையில் அவரை வாங்கி அணித்தலைவராகவும் நியமித்தது டெல்லி அணியின் முதலாவது வெற்றியே. ஏற்கனவே இரண்டு ஐ.பி.எல் கிண்ணங்களை கொல்கத்தா அணிக்காக பெற்று கொடுத்த கம்பீர் தனது சொந்த மாநிலமான டெல்லி அணிக்கு கன்னி கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பார் என நம்பலாம். அத்தோடு அதிரடி ஆட்டக்காரர்கள் மக்ஸ்வெல்,முன்ரோ,ரோய் இருவரது தெரிவும் பந்துவீச்சில் போல்ட்,ரபாடா,மிஸ்ரா என டெல்லி அணிக்கும் அணித்தெரிவில் பல தெரிவுகள் இருப்பது சாதகமே. பொறுத்திருந்து பார்ப்போம் கன்னி கிண்ணம் டெல்லி அணியின் கைகளில் தவழுமா என்று.

8.சென்னை சுப்பர் கிங்ஸ்

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களம் காண காத்திருக்கிறது சென்னை அணி.
சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றின் ஆஸ்திரேலியா என்று தான் சொல்ல வேண்டும். காரணம் தான் பங்கேற்ற அனைத்து அதாவது எட்டு தொடர்களிலும் ப்ளே ஓஃப் சுற்றிற்கு தகுதி பெற்ற ஒரே அணி, ஐந்து இறுதி ஆட்டங்கள், இரண்டு ஐ.பி.எல் கிண்ணங்கள், இரண்டு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்கள் என ஐ.பி.எல் தொடரின் வல்லரசன் என்றாலும் மிகையாகாது. இரண்டு வருட தடைக்கு பின்னர் மீண்டும் தமது core team அதாவது முக்கியமான வீரர்கள், பயிற்சியாளர்கள் என பெரும்பாலானவர்கள் ஒன்றாக இணைந்திருப்பது சென்னை அணி மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அணித்தலைவர் டோனி, ரெய்னா,முரளி விஜய்,கேதார் ஜாதவ், ராயுடு,ஜடேஜா,ஹர்பஜன் என இந்திய வீரர்கள் பட்டாளம் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் வட்சன்,டு ப்ளசிஸ்,பிராவோ,தாகிர் என அனுபவமான வீரர்கள் என பலமான தமது மீள்வருகையை சென்னை அணி உறுதி செய்திருக்கிறது என்று சொல்லலாம். பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பலவீனமே. தமது மீள்வருகையில் மீண்டும் தாங்கள் வல்லரசுகள் தான் என நிரூபிப்பார்களா சென்னை அணியினர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

#தேவதாஸ்_பிரசன்னா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.