Australia

என்ன செய்யப் போகிறது ஐ.சி.சி ?

என்ன செய்யப் போகிறது ஐ.சி.சி ?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் ஐசிசியால் உருவாக்கப்பட்ட விதிகளின் பிரகாரமே அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் அதற்கு மாறாக அவுஸ்ரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியதற்கு கிரிக்கெட் அவுஸ்ரேலியா விதித்த தண்டனை கடுமையானதோ என எண்ணத் தோன்றுகின்றது.

ஏனென்றால் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்ரேலிய வீரர்கள் மூவருக்கும் ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டித் தடை, தண்டப் பணம், புள்ளிக்குறைப்பென அறிவித்த பிற்பாடும் சிமித்துக்கும் வோணருக்கும் ஒருவருடத்தடையும் பாங்றொவ்ருக்கு ஒன்பது மாதத்தடையும் விதித்தது அவசியமா?

பொதுவாக எந்தவொரு கிரிக்கெட் சபையும் வீரர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பத்தில் கூட ஐசிசி விதிக்கும் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யுமே தவிர கூடுதல் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காது.

ஒருவகையில் கிரிக்கெட் அவுஸ்ரேலியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை கிரிக்கெட்டுக்கு அவர்கள் கொடுக்கும் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினாலும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறிழைக்க நினைக்கும் வீரர்களுக்கு இது ஒரு பாடமாக விளங்கும் என்ற வகையில் வரவேற்புக்குரியதே.

ஆனாலும் கடந்தகாலங்களில் அவுஸ்ரேலிய வீரர்கள் ஏனைய வீரர்களுடன் கண்ணியக்குறைவாக நடந்த பொழுதுகளில் இவ்வாறான தண்டனைகளை வழங்கி இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

பெரும்பாலான அவுஸ்ரேலிய வீரர்கள் கடந்த காலங்களில் இவ்வாறு கண்ணியக்குறைவாக நடந்தாலும் எந்தவொரு வீரரும் தான் செய்தது தவறென்று அந்தநேரத்தில் ஒப்புக்கொண்டதில்லை. ஆனால் சிமித் விடயத்தில் அவர் உண்மையை உடனடியாக ஒப்புக்கொண்டதனாலும் அவுஸ்ரேலியப் பிரதமரே கண்டித்ததனாலும் வீரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் கிரிக்கெட் அவுஸ்ரேலியாவுக்கு ஏற்பட்டிருந்தது.

அந்தவகையில் கிரிக்கெட் அவுஸ்ரேலியாவின் முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் ஏற்கனவே ஐசிசியின் மீது வீரர்களின் தண்டனை விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதான குற்றச்சாட்டும் காலாகாலமாகச் சுமத்தப்பட்டு வந்திருக்கின்றது.

அத்தோடு போட்டிகளின் போது பந்தைச் சேதப்படுத்தும் விடயம் கிரிக்கெட் உலகில் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஐசிசி விதித்த தண்டனைகளின் போதாமையும் ஒரு காரணமெனத் தோன்றுகிறது.

எனவே தண்டனைகள் கடுமையாக இருந்தாலே குற்றங்கள் குறையும் என்பார்கள். அந்தவகையில் கிரிக்கெட் அவுஸ்ரேலியா எடுத்த நடவடிக்கை சரியெனத் தோன்றினாலும் அவர்களைப் போன்று ஏனைய நாட்டு கிரிக்கெட் சபைகளும் தமக்கு ஏற்ற விதத்தில் தண்டனையை நடைமுறைப்படுத்தினால் இந்த விடயத்தில் ஐசிசியின் வகிபங்கு கேள்விக்குரியதொன்றாகி விடுகின்றது.

இந்தப்பின்னணியிலேயே சில தினங்களுக்கு முன்னர் ஐசிசி, போட்டிகளில் எல்லை மீறும் மற்றும் பந்தைச் சேதப்படுத்தும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதற்கு பரிசீலித்து வருவதான அறிவிப்பை நோக்க வேண்டியுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் விரும்பியோ விரும்பாமலோ குறிப்பாகப் பந்தைச் சேதப்படுத்தும் விடயத்தில் தண்டனையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு கிரிக்கெட் அவுஸ்ரேலியாவின் முடிவு ஐசிசியை நெருக்கடிக்குத் தள்ளி உள்ளதே உண்மையாகும்.

 #விமலன்_சின்னராஜா
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.