Pakistan

இந்த நாள் இனிய நாள் – சாகித் அவ்ரிடி தினம்

அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் ஆதர் நகர மேயர் அலுவலகத்தால் இந்த மாதம் 5ஆம் திகதி ‘சாகித் அவ்ரிடி தினம்’ ஆகக் கொண்டாடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரான அவ்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாலும் தற்போதும் சில நாடுகளில் நடைபெறும் இருபதுக்கிருபது போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றார்.
அத்தோடு தனது பெயரில் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது பாகிஸ்தானில் ஒரு பாடசாலையும் ஒரு வைத்தியசாலையும் கட்டுவதற்காக முழுமூச்சாக முயன்று வரும் அவ்ரிடி பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயலும் செயற்பாட்டாளர்களுள் தவிர்க்க முடியாத ஒருவராகவும் விளங்குகின்றார்.

அவ்ரிடியின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதைப் போலவே அவர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளையும் சர்வதேச ரீதியாகப் பலரது கவனத்தையும் பெற்றது.

அந்தவகையில் அவ்ரிடி 2014 ஆம் ஆண்டு தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற சமயம் அங்கு பல நகரங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்கா ஐ.சி.சி.யின் அங்கத்துவ நாடாக இருந்தாலும் அந்நாட்டு வீரர்களால் இதுவரை கிரிக்கெட்டில் பெரிதாக எதனையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் அங்கு கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளதனால் அவ்ரிடியின் அமெரிக்க வருகை கொண்டாட்டத்துக்குரியதாக இருந்தது.

இதன்போதே தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கைக்கெதிராக 37 பந்துகளில் சதமடித்தமை உள்ளிட்ட அவ்ரிடியின் கிரிக்கெட் சாதனைகளைக் கௌரவப்படுத்தும் முகமாக போர்ட் ஆதர் நகர மேயரால் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 5 ஆம் திகதி ‘ சாகித் அவ்ரிடி தினம் ‘ போர்ட் ஆதர் நகரில் கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#விமலன்_சின்னராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.