Afghanistan

உதவும் கரங்கள்

1995 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு காலடி எடுத்து வைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் ஏனைய அணிகளுக்குச் சவாலாக விளங்கி வருகின்றது. அத்தோடு கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற ஆப்கானிஸ்தான் எதிர்வரும் ஜூன் மாதம் தனது முதற் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவும் உள்ளது.

ஆனாலும் போதிய மைதான வசதிகள் இல்லாததாலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் அண்மைக்காலமாக சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தமுடியாமல் பாகிஸ்தான் போன்று மூன்றாவது நாட்டிலேயே விளையாடி வருகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடியையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சந்தித்து வருகின்றது.

குறிப்பாக காபூலில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் ஆப்கானிஸ்தான் வீரர்களே அங்கு விளையாட முடியாத துயரநிலை ஏற்பட்டிருந்தது.

இதனைக் கருத்திற்கொண்டே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தற்போது இந்தியாவின் லக்னோவில் அமைந்துள்ள ஏகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அந்த மைதானத்தையே தமது சொந்த மைதானமாக ஆப்கானிஸ்தான் அணி பயன்படுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே கடந்தவாரம் இந்தியத் தூதரகத்திற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகி உள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இந்தியப் பொருளாதார அமைச்சுக்கு ஆப்கானிஸ்தானில் மைதானம் அமைப்பது தொடர்பாக வழங்கிய உத்தேச வரைவுத்திட்டம் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரமே ஆப்கானிஸ்தானில் உள்ள பாஹ் மாகாணத்தில் மைதானம் அமைப்பதற்கு 1.765 மில்லியன் அமெரிக்க டொலர்களும் லோகர் மாகாணத்தில் மைதானம் அமைப்பதற்கு 4 இலட்சம் அமெரிக்க டொலர்களும் ஹந்தகார் மாகாணத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிக்கு 3 இலட்சத்து அறுபதினாயிரம் அமெரிக்க டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#விமலன்_சின்னராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.