IPL - Indian Premier League

பழைய கூட்டணியின் புதியவருகை

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செய்தி என்று நினைத்து விடாதீர்கள். இதுவும் விளையாட்டுச் செய்தி தான். கடந்தவாரம் நடைபெற்ற இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணியும் தமக்குத் தேவையான வீரர்களைத் தெரிவு செய்துள்ளன.

ஒவ்வொரு அணியும் துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள், விக்கெட் காப்பாளர்கள், சகலதுறை ஆட்டக்காரர்கள் என்று அனைவரையும் உள்ளடக்கியதான ஓர் சமநிலையான அணியையே தெரிவு செய்வது வழக்கம். அதற்கு பெங்களூரு றோயல் சலஞ்சர்ஸ் அணியும் விதிவிலக்கல்ல.

ஆனாலும் அவர்களைப் பொறுத்தவரையில் பந்துவீச்சே எப்போதும் பலவீனமாக இருப்பதனால் இம்முறை பந்து வீச்சாளர் தெரிவில் கூடிய அக்கறை செலுத்தி உள்ளமையை அவர்களது அணித்தெரிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் குறிப்பாக அவர்கள் தெரிவுசெய்த 4 பந்துவீச்சாளர்கள் தொடர்பில் தற்போது ஆச்சரியமொன்று வெளிப்பட்டுள்ளது.

கடந்தவருடம் கொல்கத்தாவில் நடைபெற்ற பெங்களூரு றோயல் சலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைற்றைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைற்றைடர்ஸ் அணி 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பெங்களூரு றோயல் சலஞ்சர்ஸ் அணியை கொல்கத்தா நைற்றைடர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே 49 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருந்தது.

ஐ.பி.எல் போட்டி ஒன்றில் ஓர் அணிபெற்ற மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்தப்போட்டியில் கொல்கத்தா நைற்றைடர்ஸ் அணி சார்பில் பந்துவீசிய நாதன் கோல்ரர் நைல், கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிராண்ட்கோம் ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றியதோடு உமேஸ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையிலேயே கடந்தவாரம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இந்த நான்கு பந்துவீச்சாளர்களையும் பெங்களூரு றோயல் சலஞ்சர்ஸ் அணி வாங்கி உள்ளமைதான் ஆச்சரியமாக நோக்கப்படுகின்றது.

வீரர்கள் ஏலத்தின் பொழுது அணி மாறுவது சகஜம் என்றாலும் குறித்த போட்டியில் விளையாடிய இந்த நான்கு வீரர்களும் ஒரே அணியால் வாங்கப்பட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது றோயல் சலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்தால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா? அல்லது தற்செயலாக அமைந்ததா? என்று தெரியாவிட்டாலும் கிரிக்கெட்டில் ஏற்படும் விசித்திரங்களில் இதுவும் ஒன்றெனவே தோன்றுகிறது.

#விமலன்_சின்னராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.