Sri Lanka

வெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை!!!!

வெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை!!!!

இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை வெற்றி கொள்ள போகும் அணியாக எதிர்பார்க்கப்பட்டது பங்களாதேஷ் அணி தான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அதற்கு இலங்கை அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அண்மைக்கால தொடர் தோல்விகள்,அணித்தலைமையில் பல மாற்றங்கள் என இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கின்ற இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே. இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்ற முதல் தொடரிலேயே சாதித்திருக்கிறார் ஹத்துருசிங்க. இனி வரும் தொடர்களிலும் வெற்றிகளை தக்க வைப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அனைத்து போட்டிகளும் பங்களாதேஷ் டாக்கா மைதானத்திலேயே இடம்பெற்றது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் போட்டியிலேயே சொந்த மண்ணில் தமது ஆதிக்கத்தை நிரூபித்திருந்தது பங்களாதேஷ் அணி. சிம்பாவே அணியுடனான போட்டியில் மிகவும் இலகுவாக 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த வெற்றியை பெற்றிருந்தது பங்களாதேஷ் அணி. இந்த தொடரில் பங்களாதேஷ் அணியில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாற்றங்கள் பங்களாதேஷ் அணி உலகக் கோப்பைக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்து விட்டது என்ற ஊகத்தை தெளிவாக காட்டி இருந்தது. ஆரம்ப ஆட்டக்காரர் தமிம் இக்பால் சிறப்பாக ஆடி வரும் நிலையில் இங்கிலாந்து மைதானங்களில் நிதானமாகவும் தேவையான நேரங்களில் அடித்தும் களத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய ஒரு வீரர் என்ற எண்ணத்தில் அணியின் மூத்த வீரர் சகிப் அல் ஹசனை மூன்றாம் இலக்கத்தில் ஆட அனுப்பியது smart move என்று சொல்லலாம்.அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்தார் சகிப். தொடர்ந்து ரகிம்,மகமுதுல்லா சபிர் ரஹ்மான் என அந்த துடுப்பாட்ட வரிசை அமைந்திருந்தது.

இரண்டாவது போட்டி ஒரு அதிர்ச்சி மீண்டும் நடந்தேறி இருந்தது என்றே சொல்லலாம்.மீண்டும் சிம்பாவே அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது இலங்கை அணி. கடந்த ஆண்டு இலங்கை அணி சொந்த மண்ணில் சிம்பாவே அணியுடனான தொடரை 3-2 என இழந்திருந்தது.பங்களாதேஷ் இல் நான்கு வருட பயணம் அதன் மூலம் இந்த தொடரிலிருந்தாவது இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார் ஹத்துருசிங்க என்று இருந்த இலங்கை அணி இரசிகர்களுக்கு இந்த தோல்வி பேரிடியை கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த போட்டியில் வெல்ல தகுதி உடைய அணியாக அதாவது deserve to win என்பார்கள் என்பது போன்று ஒரு அணியாக சிறப்பாக விளையாடியது சிம்பாவே. திசர பெரேராவின் இறுதி நேர போராட்டமும் வீண்போனது என்றே சொல்லலாம். இந்த போட்டியில் மட்டும் அல்லாமல் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திசர பெரேரா தொடர் நாயகன் விருதை வென்றார்.

மூன்றாவது போட்டி இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி.ஆரம்ப எதிர்பார்ப்பே பங்களாதேஷ் அணி மீது இருக்க அதை உண்மையும் ஆக்கி இருந்தார்கள் வங்கப்புலிகள். ஒரு நாள் போட்டிகளில், ஓட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தமது பெரிய வெற்றியை(163 ஓட்டங்கள்) பதிவு செய்தது பங்களாதேஷ். இதற்கிடையில் அணித்தலைவர் மத்தியூஸ் காயம்காரணமாக விலக,இந்த பின்னடைவோடு அடுத்தடுத்த இரண்டு தோல்விகள் மீண்டும் எழுமா இலங்கை அணி அல்லது பங்களாதேஷ்,சிம்பாவே அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியா என்ற கேள்விகள் எழ தொடங்கின.

இதற்கிடையில் மீண்டும் இலங்கை சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது லீக் போட்டி அதாவது தொடரின் நான்காவது போட்டி. மீண்டும் சிம்பாவே முதலில் துடுப்பெடுத்தாடியது. பொதுவாக பங்களாதேஷ் மைதானங்களில் இரண்டாவது துடுப்பாட்டம் கடினமே. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி அனைத்து இலக்குகளையும் இழந்து வெறுமனே 198 ஓட்டங்களையே பெற்றது.மீண்டும் ஒரு முறை பந்துவீச்சில் இலங்கை அணிக்கு கைகொடுத்தார் திசர. அதிகபட்சமாக நான்கு இலக்குகளை சாய்த்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இடையில் சிறு தடுமாற்றம் என்றாலும் மீண்டும் திசர அதிரடி காட்ட ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தமது இருப்பை உறுதி செய்தது இலங்கை அணி.

ஐந்தாவது போட்டியில் மீண்டும் பங்களாதேஷ்,சிம்பாவே அணிகள் சந்தித்தன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஓட்டங்களை குவிக்க தவறினாலும் பந்துவீச்சில் அசத்தி இலகு வெற்றியை பதிவு செய்தது. அத்தோடு முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கும் நுழைந்தது.

ஆறாவதும் இறுதியுமான லீக் போட்டி கட்டாய வெற்றியை நோக்கி களம் இறங்கியது இலங்கை அணி. ஆரம்பம் முதலே பந்துவீச்சில் அசத்தினர் இலங்கையின் சிங்கங்கள். இலங்கை அணியின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறுமனே 82 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ் அணி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடியில் வெளுத்து வாங்கி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப் போட்டிக்கான தகுதியையும் உறுதி செய்தது.

இலங்கை அணியின் திடீர் அதிரடி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. சொந்த மைதானம் பங்களாதேஷ் அணி கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என்ற கருத்தே மேலோங்கி இருந்த நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி இறுதிப் போட்டியிலும் வங்கப்புலிகளை சிங்கங்கள் வேட்டையாடின என்றே சொல்லலாம். வெறுமனே 222 ஓட்டங்களையே இலக்காக நிர்ணயித்த போதும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாகவே இருந்தது. இதனை சரியாக பயன்படுத்திய இலங்கை வேகப்பந்தாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர் என்றால் மிகையாகாது. தனித்து நின்று போராடிய மகமுதுல்லாவின் போராட்டமும் வீணானது. இந்தபோட்டியில் சகிப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியதே. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தரங்கவும் தொடர் நாயகனாக திசர பெரேராவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இருந்த இலங்கை அணியின் பெறுபேறுகளுடன் ஒப்பிடும் போது இறுதி மூன்று போட்டிகளிலும் இலங்கை அணியின் பெறுபேறு மெச்சும்படியே இருந்தது. இந்த தொடரில் குசல் பெரேரா,தரங்க தந்த தொடக்கம்,பந்துவீச்சில் காட்டிய உத்வேகம், மீண்டும் குசல் மெண்டிஸ், திசர பெரேராவின் சகலதுறை அசத்தல் அதுவும் தற்போது இருப்பவர்களில் முக்கியமானவரும் அணித்தலைவருமான மத்தியூஸ் இல்லாத நிலையில் என்று எடுத்துக் கொள்வதற்கு எக்கச்சக்க பொசிட்டிவ் விசயங்கள் அரங்கேறி இருக்கின்றன என்றே சொல்லலாம். ஹத்துருசிங்கவின் முதலாவது தயாரிப்பே சிறப்பான முடிவை தந்திருக்கின்ற நிலையில் இதை மெருகேற்ற முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பல பலமான அணிகளான இந்தியா,ஆஸ்திரேலியா போன்ற அணிகளையே தமது சொந்த மைதானங்களில் வைத்து துவைத்த பங்களாதேஷ் அணிக்கு இந்த தோல்வி உலகக் கிண்ணத்துக்கான தயார் படுத்தலை இன்னும் பலப்படுத்தும். இன்னும் அவர்கள் தகுதிகாண் போட்டிகளில் வேறு ஆட வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்தடுத்த தொடர்களை.

சிம்பாவே அணி அண்மைக்காலமாக அதிர்ச்சி வைத்தியங்களை கொடுக்கும் அணியாக மாறி உள்ள நிலையில் முயற்சிக்கும் பட்சத்தில் தொடர்ந்து அதிர்ச்சிகளை கொடுக்கும் அணியாக மாறலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் சிங்கங்கள் உலகக் கிரிக்கெட் அரங்கில் வலுப்பெறுவார்களா என்பதை👍👍👍

#தேவதாஸ்_பிரசன்னா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.