Foot Ball

நான் செய்தது தவறுதான்

நான் செய்தது தவறுதான்

இவ்வருடம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் 32 நாடுகளுள் வடஅயர்லாந்து இடம்பெறவில்லை. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் ஐரோப்பியக் கண்டத்தின் ‘C’ குழுவில் இடம்பெற்ற வடஅயர்லாந்து அக்குழுவில் இரண்டாம் இடத்தையே பிடித்ததால் நேரடித்தகுதியைப் பெற முடியவில்லை.

இதனால் பிளேஓவ் சுற்றில் சுவிற்சர்லாந்து அணியுடன் விளையாடி வெற்றி பெற்றாலே தகுதி பெற முடியும் என்ற நிலை காணப்பட்டது. ஆனாலும் வடஅயர்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 1 : 0 என்று தோல்வி அடைந்திருந்தது.

இந்தப்போட்டிக்கு ருமேனியாவைச் சேர்ந்த ஒவிடியு ஹெட்டன் நடுவராகக் கடமையாற்றி இருந்தார். போட்டியின் ஒருகட்டத்தில் சுவிற்சர்லாந்து வீரர் அடித்த பந்து கோல்காப்பாளரின் அருகில் நின்ற வட அயர்லாந்து வீரரான கொரி இவன்ஸின் கையில் பட்டதனால் பெனால்ரி வழங்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை சுவிற்சர்லாந்து கோலாக மாற்றிப் போட்டியில் வெற்றியும் பெற்றது.

ஆனால் தொலைக்காட்சியில் பந்து கொரி இவன்சுடைய கையில் படாமல் தோள்மூட்டில் பட்டது பின்னர் தெரிய வந்தது. எனவே நடுவரின் தவறான தீர்ப்பாலேயே அந்தப்போட்டியில் வடஅயர்லாந்து தோற்க வேண்டி வந்தது. ஆனாலும் அதற்குப்பின்னும் வடஅயர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.

அந்தவகையில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 2 : 0 என்று வடஅயர்லாந்து வென்றால் அது சாத்தியமாகி இருக்கும். ஆனாலும் அந்தப்போட்டியில் இரண்டு அணிகளுமே கோல் எதனையும் அடிக்காததனால் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து முதலாவது ஆட்டத்தில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பாலேயே உலகக் கிண்ண வாய்ப்பை இழந்ததாக வடஅயர்லாந்து ரசிகர்களும் ஊடகங்களும் குற்றஞ்சாட்டி இருந்தன. அந்தக்குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்றாலும் முடிந்தது முடிந்தது தான்.

இந்தச் சர்ச்சையாலேயே இவ்வருட உலகக் கிண்ணப்போட்டிகளுக்காக FIFA ஆல் வெளியிடப்பட்ட 36 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலிலும் ஒவிடியு ஹெட்டனுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே கடந்தவாரம் தனது தீர்ப்புக் குறித்து ஒவிடியு ஹெட்டன் ‘அது ஒரு சோகமான மற்றும் விரும்பத்தகாத தருணம். நான் தவறு செய்தேன்’ என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

போட்டிகளில் நடுவர்கள் தவறு செய்வது அபூர்வமாக நடைபெற்றாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லா நடுவர்களுக்கும் இருப்பதில்லை. அந்தவகையில் ஒவிடியு ஹெட்டன் தனது தவறை ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது என்றாலும் வட அயர்லாந்தின் 32 வருட உலகக் கிண்ணக் கனவைக் கலைத்ததை அந்நாட்டு ரசிகர்கள் அவ்வளவு சுலபத்தில் மன்னிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

#விமலன்_சின்னராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.