Foot Ball

இரண்டு மணித்தியால சுணக்கம்

I.S.L உதைபந்தாட்டத் தொடரில் கடந்த 3ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற கோவா – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி 1 : 1 என்று சமநிலையில் முடிந்திருக்கிறது.

இரவு 8 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய இந்தப்போட்டி இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12.37 மணிக்கே முடிவடைந்துள்ளது.
கோவா அணி பிரயாணம் செய்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே போட்டியையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் எந்தவொரு உதைபந்தாட்டப் போட்டியும் 9 மணிக்குப் பின்னர் தொடங்கியதாக வரலாறு இல்லை. ஆனால் போட்டியன்று இரவு 8.59 மணிக்குத்தான் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது. அதன்பின்னர் வீரர்கள் மைதானத்தை அடையும் பொழுது நேரம் 9.42. இதனால் போட்டியை 10.45 மணிக்கே ஆரம்பிக்க முடிந்தது.

ஐ.எஸ்.எல் உதைபந்தாட்டத் தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியை உரிய நேரத்திற்கு நடத்த முடியாமல் போனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணித்தியாலங்களுக்குள் போட்டியை தாமதமாகத் தொடங்குவதற்கும் விதி உள்ளது.

அதற்குப் பிறகும் போட்டியை நடத்தவேண்டுமானால் எந்த மைதானத்தில் போட்டி நடைபெறுகிறதோ அந்த அணி சம்மதித்தால் விளையாட முடியும். அதனடிப்படையில் கொல்கத்தா அணி சம்மதித்த காரணத்தினாலேயே இந்தப்போட்டி நடைபெற்றது.

எந்தவொரு போட்டியையும் நடத்தி முடிப்பது போட்டி நிர்வாகத்தின் கடமையாக இருந்தாலும் வீரர்களின் ஆரோக்கியத்தையும் மனோநிலையையும் கருத்தில் எடுக்காமல் போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்ற மனநிலையில் அணுகுவது ஏற்புடையதொன்றாகத் தோன்றவில்லை.

அந்தவகையில் இந்தப் போட்டியை இப்படி நடத்தித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப்போட்டி முன்னதாக டிசம்பர் 31 ஆம் திகதியே கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. ஆனாலும் கொல்கத்தா பொலிஸார் மறுநாள் புதுவருடம் பிறக்க இருப்பதால் அந்தக் கொண்டாட்டங்களைக் கருத்திற்கொண்டு இந்தப்போட்டிக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம் என்று அறிவித்ததனாலேயே கடந்த 3ஆம் திகதிக்கு மாற்றப்பட்டிருந்தது.

எனவே இந்தப் போட்டியையும் இன்னொரு தினத்திற்கு மாற்றி அமைக்க முடியாதபடி நெருக்கமான போட்டி அட்டவணை இருந்த காரணத்தினாலேயே போட்டி நிர்வாகம் கங்கணம் கட்டி நடத்தி முடித்துள்ளது என்பதை அறியும் பொழுது அவர்கள் தரப்பு நியாயத்தையும் உணர முடிகிறது.

அதேவேளை கடந்த 2003 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற லாலிகா தொடரில் பார்சிலோனா – செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி தாமதமாக ஆரம்பித்து நள்ளிரவு 12.05 மணிக்கு முடிந்ததே இதுவரை உதைபந்தாட்ட வரலாற்றில் நள்ளிரவு தாண்டி முடிந்த போட்டியாக விளங்கியது. அந்த நள்ளிரவுச் சாதனையை இந்தப்போட்டி முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#விமலன் சின்னராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.