கட்டுரைகள்

இலங்கை கிரிக்கெட்டின் பிதாமகன்- அர்ஜுன ரணதுங்க

இலங்கையர்களால் மறக்கமுடியாத சம்பவங்களில் மிக முக்கியமானது இலங்கை அணி கைப்பற்றிய 1996 உலகக் கிண்ணமே. கத்துக்குட்டியாக இருந்த இலங்கை அணியை, உலக கிண்ணம் வெல்லும் அணியாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

ஆம், அவர் தான் அர்ஜீன ரணதுங்க. அடிக்கடி “கப்டன் கூல்” எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தவர். இவ்வாறு சிறப்புக்கள் பொருந்திய அர்ஜீன 1963 ஆம் ஆண்டு டிசம்பர் ஓராம் திகதி பிறந்தார். எனினும் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர அரசியல் குதித்தார். இப்பொழுதும் ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அர்ஜீன.

இலங்கை அணிக்காக பதினெட்டு வருடங்கள் உழைத்தவர் இவர்(1982-2000). இலங்கையின் கன்னி டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட ரணதுங்க, ஒருநாள் போட்டிக்கான அறிமுகத்தை 14/02/1982 இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மேற்கொண்டார்.

இவரது கப்டன் செயற்பாட்டை எடுத்து நோக்கினால், 1988 இல் கப்டனாக செயற்பட ஆரம்பித்து 11 வருடங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தையும் வென்று கொடுத்தார். 1995,96, 97 என மூன்று சிங்கர் உலகத் தொடர்களை இலங்கை அணிக்கு வென்று கொடுத்ததோடு 1997 இல் ஆசியக்கிண்ணம், இந்தியாவின் சுதந்திரக் கிண்ணம் மற்றும் 1998 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற முக்கோணத்தொடர் என மொத்தமாக 7 பெரிய உலகத் தொடர்களை வென்று கொடுத்த பெருமை ரணதுங்கவையே சாரும்.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் 1994 இல் நியூசிலாந்து மண்ணில் கன்னி டெஸ்ட் தொடர் வெற்றி, 1995 இல் பாகிஸ்தானில் கன்னித் தொடர் வெற்றி மற்றும் 1998 இல் இங்கிலாந்து மண்ணில் கன்னித் தொடர் வெற்றி என வரலாறுகளை அடுக்கியவர் ரணதுங்க.

இவரது ஓய்வு பற்றி கருதினால், 1999 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கிண்ணத்தில் இலங்கை அணி சோபிக்கத்தவற அர்ஜீன பதவி விலகினார். ஆனால் அதே வருடம் “Wisden Cricketers of the year” எனும் விருதுக்கு ஐவரில் ஒருவராக பரிந்துரை செய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு ஜீன் மாதம் இலங்கை அணி தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆடியது. இப்போட்டியில் அர்ஜீனவும் ஆடினார். அத்தோடு இலங்கை ஆடிய முதலாவது டெஸ்ட் மற்றும் நூறாவது டெஸ்ட் ஆகிய இரு முக்கிய டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டு சகல போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

இவரது டெஸ்ட் போட்டிகளில் முக்கிய பகுதிகளை எடுத்து நோக்கின் பாகிஸ்தானுக்கு எதிராக 1985-1986 காலப்பகுதியில் கொழும்பில் வைத்து தனது அதிகூடிய டெஸ்ட் ஓட்டமான 135 இனை ஆட்டமிழக்காது பெற்றார்.இவரது சிறந்த டெஸ்ட் பந்துவீசசு நியூசிலாந்துக்கு எதிராக 17/2 ஆகும்.

இவர் அணித்தலைவராக ஆடிய 56 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 12 வெற்றிகளையும் 19 தோல்விகளையும் 25 வெற்றி தோல்வியின்மை முடிவுகளை பெற்றுள்ளது.

இவரது ஒருநாள் போட்டியின் சாதனையை எடுத்து நோக்கினால், ஒரு நாள் போட்டிகளில் இலக்கம் ஐந்தில் வந்து அதிகூடிய ஓட்டங்களைப் (4675) பெற்றுள்ளார். மற்றும் ஐந்தாம் இலக்க வீரராக முதன்முதலில் 4500 ஓட்டங்களைக் கடந்திருக்கிறார்.

இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளிலாடிய அர்ஜீன 5105 ஓட்டங்களை சராசரி 35.7 இல் பெற்றுள்ளார். இதில் 38 அரைச்சதங்களும் நான்குசதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 16 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதுவரை 269 ஒருநாள் போட்டிகளிலாடிய அர்ஜீன 7456 ஓட்டங்களை சராசரி 35.85 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 131 ஆகும். இதில் 49 அரைச்சதங்களும் நான்கு சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 79 ஒருநாள் விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

இலங்கை அணிக்கு உலக கிண்ணம் வென்று கொடுத்த ஒரேயொரு கப்டனாக இன்றுவரை மிளிர்ந்து வருகிறார் அர்ஜீன…..

சி. சாந்தகுமார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.