Home

இலங்கை எதிர் இந்தியா ; நாக்பூர் டெஸ்ட் சிறப்புப் பார்வை…!!!

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

 

ஏற்கனவே இலங்கை அணியை “ரஞ்சிக்கிண்ண அணியை விடபலவீனமானஅணி என கவாஸ்கர் வர்ணித்திருந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரர்களான லக்ஸ்மன் மற்றும் ஓஷாவும் இலங்கை 3-0 என்ற கணக்கில் தோல்வியைச் சந்திக்கும் என எதிர்வு கூறியிருந்தார்கள்.

 

ஆயினும் இதுவரை இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட வெற்றியடையாத நிலையில் காணப்படும் இலங்கை அணி, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நான்கு நாட்களும் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இறுதிநாளில் ஆட்டத்தை இந்தியா தம் பக்கம் திருப்பியநிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

 

 

அணிகளின் பலம் மற்றும் பலவீனம்

இந்திய அணி சகல துறைகளிலும் மிகப் பலமான அணியாக காணப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுகின்றது. முதல் போட்டியின் ஆட்ட நாயகன் புவனேஸ்வர குமார் விலகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமட் சமி மற்றும் உமேஷ் யாதவ்வுடன் இஷான் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தவான் விலகியுள்ள நிலையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக முரளி விஜய் களமிறங்கவுள்ளார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள், அஸ்வின், ஜடேஜா மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களே பொதுவாக களமிறங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

ஆனால் இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் கருணாரட்ன, சந்திமால் மற்றும் டிக்வெல்ல ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயற்படுகிறார்கள். சுழல் பந்துவீச்சில் ரங்கன ஹேரத்தை மட்டுமே நம்பக்கூடிய நிலையில் தில்ருவான் பெரேராவின் சுழலை அதிக வலது துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியா இலகுவாக எதிர் கொள்ளக் கூடிய நிலையும் காணப்படுகின்றது.

வேகப்பந்தில் லக்மால் மட்டுமே நம்பிக்கை தரும் நிலையில் பந்து வீசுகின்றார். சானகவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தாலும் லகிரு கமகே முதல் போட்டியில் பெரிதளவில் சிறப்பாக செயற்படவில்லை.

இலங்கை வீரர்களில் ஆரம்ப வீரர்கள் முதற் போட்டியில் சோபிக்காத நிலையில், சானக மற்றும் ஸ்திரமற்ற துடுப்பாட்டமும் பலவீனமே.

 

 

ஆடுகளம் தொடர்பான அலசல்

சாதாரணமாக நாக்பூர் ஆடுகளம் சுழல் மற்றும் வேகப் பந்திற்கு சமனான சாதகத்தைக் கொடுத்தாலும், இந்திய அணி எதிர்வரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயார் செய்யும் நோக்கோடு வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமான, அதிகமாக புற்களைக் கொண்ட நாக்பூர் ஆடுகளமே பயன்படுத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகன்றது. இவ்வாறான ஆடுகளத்தில் இறுதி இரண்டு நாட்களும் சுழல்பந்துவீச்சிற்கு சாதகமான நிலையும் காணப்படலாம்.

இதனால் ஆட்டத்தின் முடிவில் நாணயச் சுழற்சி முக்கிய பங்கை வகிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

 

 

காலநிலை

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வெப்பநிலை குறைந்த காலநிலை காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்புக் குறைவதாகக் காணப்படுவது சிறப்பம்சமாகும். அதிக மேகமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டு போட்டிகளின் சில ஓவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.

 

 

 

புள்ளிவிபரங்கள்

இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ளஇரண்டு அணிகளுக்கும் இடையிலான18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 10 போட்டிகளை வென்றுள்ள அதேவேளை 8 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

நாக்பூரில் இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றை விளையாடுவது இதுவே முதற் தடவையாகும்.

மாறாக இந்திய அணி கடந்த 7 வருடமாக நாக்பூரில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி எதனையும் சந்திக்கவில்லை என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

 

 

எதிர்பார்ப்பு

இலங்கை டெஸ்ட் வரலாற்றில் அதிகூடிய வெற்றி வீதத்தைக் கொண்டுள்ள அணித் தலைவர்களான சனத் ஜெயசூரிய மற்றும் மகேல ஜயவர்தன ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்காத நிலையில், ஆக்ரோஷமான தலைவர் சந்திமால் இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வென்று குறையை நிவர்த்தி செய்வாரா?? என்பது கேள்விக்குறியே.

இந்திய அணி இப்போட்டியை வெல்லும் என்ற பரவலான எதிர்பார்ப்பு காணப்பட்டாலும், நாணயச்சுழற்சி சாதகமாக அமைந்து அதனை இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக பயன்படுத்தினால் லக்மாலும் ஹேரத்தும் இந்திய மண்ணில் அதிர்ச்சியைக் கொடுத்து கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கடந்த போட்டியில் Review தொழில் நுட்பம் மூலம் 4 சாதகமான தீர்ப்புக்களைப் பெற்ற இலங்கை இப்போட்டியில் reviews ஐ சரியாக பயன்படுத்துவதும் போட்டியின் போக்கில் செல்வாக்கைச் செலுத்தலாம்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.