கட்டுரைகள்

“இந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் தொடர்” – விரிவான அலசல்

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் நவெம்பர் 16 ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே இலங்கை அணியை ரஞ்சிக்கிண்ண அணியை விட பலவீனமான அணி என கவாஸ்கர் வர்ணித்திருந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரர்களான லக்ஸ்மன் மற்றும் ஓஷாவும் இத்தொடரில் இலங்கை 3-0 என்ற கணக்கில் தோல்வியைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளார்கள்.


இதுவரை இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட வெற்றியடையாத நிலையில் இலங்கை அணி காணப்படுகின்றது. முதல் அணியாக ஐக்கிய அரபு ராச்சியத்தில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த இலங்கை அணிக்கு, டெஸ்ட் தரவரிசை முதலிட அணியான இந்தியாவுக்கு எதிரான இத்தொடர் மிகச் சவாலானதாகத் தான் அமையப் போகின்றது.

அணிகளின் பலம் மற்றும் பலவீனம்

இந்திய அணி சகல துறைகளிலும் மிகப் பலமான அணியாக காணப்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்களாக முகமட் சமி மற்றும் உமேஷ் யாதவ்வுடன் இஷான் சர்மா அல்லது புவனேஸ்வர் குமார் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆறு துடுப்பாட்ட வீரர்கள், அஸ்வின், ஜடேஜா மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களே பொதுவாக களமிறங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

ஆனால் இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் கருணாரட்ன, சந்திமால் மற்றும் டிக்வெல்ல ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயற்படுகிறார்கள். சுழல் பந்துவீச்சில் ரங்கன ஹேரத்தை மட்டுமே நம்பக்கூடிய நிலை காணப்படுகின்றது. தில்ருவான் பெரேராவின் சுழலை அதிக வலது துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியா இலகுவாக எதிர் கொள்ளக் கூடிய நிலையும் காணப்படுகின்றது. வேகப்பந்தில் லக்மால் மட்டுமே நம்பிக்கை தரும் நிலையில் பந்து வீசுகின்றார்.

இலங்கை வீரர்களில் திரிமன்னேயின் பெரிதளவாக சோபிக்காத துடுப்பாட்டமும், சானக மற்றும் தனஞ்சய டீ சில்வாவின் ஸ்திரமற்ற தன்மையும் பலவீனமே.

ஆடுகளங்கள் தொடர்பான அலசல்

மூன்று டெஸ்ட் போட்டிகளும் கொல்கத்தா, நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய ஆடுகளங்களில் நடைபெறவுள்ள நிலையில் இம்மூன்று ஆடுகளங்களும் எவ்வாறு அமையப் போகின்றன என்ற கேள்வி எழுகின்றது.

சாதாரணமாக இந்த மூன்று ஆடுகளங்களும் சுழல் பந்திற்கே அதிக சாதகத்தைக் கொடுத்தாலும், இந்திய அணி எதிர்வரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயார் செய்யும் நோக்கோடு வேகப்பந்து வீச்சு ஆடுகளங்களையே தயார் செய்யும் என நம்பப்படுகின்றது. 

மேலும் சகலதுறை வீரர் ஹர்த்திக் பாண்டியா நீக்கப்பட்டு 4 வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் இணைத்த காரணத்தால் பொதுவாக புற்கள் நீக்கப்படாத ஆடுகளங்களே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகன்றது.

இவ்வாறான ஆடுகளங்களில் இறுதி இரண்டு நாட்களும் சுழல்பந்துவீச்சிற்கு சாதகமான நிலையும் காணப்படலாம். இதனால் ஆட்டத்தின் முடிவில் நாணயச் சுழற்சி முக்கிய பங்கை வகிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

காலநிலை

மூன்று டெஸ்ட் போட்டிகளின் போதும் வெப்பநிலை குறைந்த காலநிலை காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்புக் குறைவதாகக் காணப்படுவது சிறப்பம்சமாகும். போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டிகளின் சில ஓவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.

புள்ளி விபரங்கள்

இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ள இரண்டு அணிகளுக்கும் இடையிலான 17 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 10 போட்டிகளை வென்றுள்ள அதேவேளை 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

இம்முறை போட்டிகள் நடைபெறவுள்ள மூன்று ஆடுகளங்களில், டெல்லியில் மட்டுமே இலங்கை அணி இதற்கு முன்னர் போட்டியொன்றை விளையாடி இருந்தது. அந்தப் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியையே தழுவியிருந்தது.

மாறாக இந்திய அணி 30 வருடமாக டெல்லியில் தோல்வியைதனையும் சந்திக்கவில்லை. கடந்த 7 வருடமாக நாக்பூரிலும், இறுதி ஐந்து வருடங்களில் கொல்கத்தாவிலும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி எதனையும் சந்திக்கவில்லை என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

எதிர்பார்ப்பு 

இலங்கை டெஸ்ட் வரலாற்றில் அதிகூடிய வெற்றி வீதத்தைக் கொண்டுள்ள அணித் தலைவர்களான சனத் ஜெயசூரிய மற்றும் மகேல ஜயவர்தன ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்காத நிலையில், ஆக்ரோஷமான தலைவர் சந்திமால் இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வென்று குறையை நிவர்த்தி செய்வாரா?? என்பது கேள்விக்குறியே.

இந்திய அணி 3-0 என தொடரை வெல்லும் என்ற பரவலான எதிர்பார்ப்பு காணப்பட்டாலும், நாணயச் சுழற்சி சாதகமாக அமைந்து அதனை இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக பயன்படுத்தினால் லக்மாலும் ஹேரத்தும் இந்திய மண்ணில் அதிர்ச்சியைக் கொடுத்து டெஸ்ட்டில் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

Review தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதும்,  சிறப்பான முடிவுகளை எடுப்பதும் அதன் மூலம் இலங்கையை வெற்றியை நோக்கி நகர்த்துவதும் அணித்தலைவர் சந்திமாலின் கையிலேயே தங்கியுள்ளது.ந.ஜெயகணேஷன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.