Sri Lanka

இலங்கை அணியும், அதிகரித்திருக்கும் வீரர்கள் அறிமுகமும்….!!  ஓர் முழுமையான ஆய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளும், அடைவு மட்டங்களும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு மிகப்பெரும் தலையிடிக்குரிய விடையங்களாகவே மாறிப்போய்விட்டன.

இலங்கையின் வீரர்கள் பலருக்கு சனத் ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்கு குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்த வாய்ப்புக்களை வழங்கியும், ஒரு நிலையான தேசிய அணியை கட்டியெழுப்ப முடியாதுள்ளமை வேதனைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.

2019 உலக கிண்ணத்துக்கான நேரடி தகுதி பெறுவதற்கே இன்னுமொரு அணியின் தோல்விக்காக காத்திருக்க வேண்டிய மிகமோசமான நிலையும் இந்த காலகட்டத்தில்தான் இலங்கைக்கு நேர்ந்திருக்கிறது.

ஒருவாறாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவிய காரணத்தால், இலங்கையின் உலக கிண்ணத்துக்கான நேரடி தகுதி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு, சரியான வாய்ப்புக்களை தொடர்ச்சியாக இலங்கையின் தேர்வாளர்கள் வழங்கத் தவறியமையே, இலங்கை தேசிய அணியை வெற்றிமிகு அணியாக மாற்றமுடியாமைக்கு பிரதானமான காரணம் எனலாம்.

இப்படி எத்தனை வீரர்களுக்கு இலங்கையின் தேர்வாளர்கள் வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள் என்பதனை உங்களுக்காக இந்த கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்த விளைகிறோம்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான போட்டி தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான மைக்கல் ஆர்தர்டன் ஒரு முக்கிய புள்ளிவிபரத்தை தனது வர்ணனையில் சுட்டிக்காட்டினார்.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் இடம்பெற்ற ஜூலை மாதத்துக்கு முன்னரான இரண்டு ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் அணி 45 வீரர்களை ஒருநாள் அணிக்கு கொண்டுவந்திருக்கிறது என்கின்ற கருத்தை வெளியிட்டிருந்தார். (அதற்கு பின்னரான சிம்பாவே, இந்திய தொடர்களையும் கவனத்தில் கொண்டால் அந்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து நிற்கிறது)

ஒரு தேசிய கிரிக்கெட் அணிக்கு குறித்த இரண்டு ஆண்டு இடைவெளியில் 50 வீரர்களை அதுவும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்துவதென்பது,தேர்வுக்கு குழுவினரது மோசமான தேர்வா?? அல்லது இலங்கை கிரிக்கெட்டின் சீரற்ற நகர்வா?? என்பதும் சிந்திக்க வேண்டியதே.

மிலிந்த சிறிவர்தன அறிமுகம் மேற்கொண்ட 2015 ஜூலை மாதத்துக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இன்றுவரை 20 வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது.

மிலிந்த சிறிவர்தன, சச்சித் பத்திரண, தனுஷ்க குணதிலக, ஷெஹான் ஜெயசூரிய, ஜெப்ரி வண்டெர்சே, தனஞ்சய டீ சில்வா, குசல் மெண்டிஸ், தசுன் ஷனாக,சமிந்த பண்டார, அமில அபோன்சோ, லக்ஷன் சண்டகன், அவிஷ்க பெர்னாண்டோ, அசேல குணரத்ன, சந்துன் வீரக்கொடி, லஹிரு குமார ஆகியோரோடு சிம்பாவே தொடரில் லஹிரு மதுஷங்க, வானிது ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ மற்றும் இந்திய தொடரில் அறிமுகம் வழங்கப்பட்ட விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் முனவீர, மலிந்த புஷ்பகுமார வரையில் 20 வீரர்கள் உள்ளடக்கம்.

அத்தோடு அனைத்துவகையான போட்டிகளுக்குமாக 2015 ஜூலை மாதம் முதல்கொண்டு இப்போதுவரையில் இலங்கை அணியின் தேர்வாளர்களால் மொத்தமாக 49 அறிமுகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ஒருநாள் போட்டிகளில் 20 அறிமுகம், டெஸ்ட் போட்டிகளில் 11 அறிமுகம், T20 போட்டிகளில் 18 அறிமுகம் இதிலே உள்ளடக்கம்)

ஒரு வீரருக்கு ஒரு போட்டியில் அறிமுகம் வழங்கப்பட்டால் அனைத்துவகைப் போட்டிகளுக்குமான அறிமுகமாக நோக்கப்படுவதில்லை ,அவை அறிமுகம் என்று நோக்குகையில் வெவ்வேறான அறிமுகங்களாகவே கருத்தில் கொள்ளப்படுகின்றது.

இதேகாலப்பகுதியில் இந்திய தேர்வாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் வெறுமனே 5 அறிமுகங்களையும், ஒருநாள் போட்டிகளில் சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இரண்டாம்தர அணி சிம்பாவே சுற்றுலா சென்றமையும் அடங்கலாக மொத்தமாகவே 12 அறிமுகங்களையும் வழங்கியுள்ளனர் .

மற்றைய அணிகளெல்லாம் உலக கிண்ணத்துக்கான தமது 15 பேர்கொண்ட இறுதி அணியை அறிவிப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக ஆவலுடன் காத்திருக்கயில், இலங்கையின் தேர்வாளர்களால் இதுவரை ஒரு நிலையான அணியை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளமை மிகப்பெரும் வருத்தத்துக்குரியதே .

கடந்துபோன கசப்பான, விரும்பத்தகாத நெருக்கடி நிலைமைகள் கடந்து லொப்ரோய் தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழுவினர் இன்றையதினத்தில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளனர்.
அந்த அணியில் ரோஷன் சில்வா, மற்றும் சதிர சமரவிக்கிரம ஆகிய மிகத்திறமையாக உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் இருவருக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எது எவ்வாறாயினும் பழைய தேர்வுக்கு குழுவினர் விட்ட வரலாற்றுத் தவறுகள் கடந்து, புதிய தேர்வுக்குழுவினர் திறமைக்கும், தகுதிக்கும் முன்னுரிமை கொடுத்து தேசிய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வார்களாயின் அறிமுகமாகும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து, இலங்கையின் வெற்றிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எல்லோரது நம்பிக்கையாகும்.

#T.தரணீதரன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.