Sri Lanka

இலங்கை அணி ஏன் தடுமாறுகிறது…??? காரணங்களும் அதற்கான தீர்வுகளும்- பாகம் ஒன்று

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி அடுத்தடுத்து பல தொடர்களில் தடுமாறி வருகின்றது. அதற்கு பல காரணங்கள் இருப்பதோடு அவை ஒவ்வொன்றையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. இக்கட்டுரை மூன்று பாகங்களாக வெளிவர உள்ள, நிலையில் முதலாவது பாகம் இங்கு ஆராயப்படுகின்றது.

இலங்கை அணியின் அண்மைக்கால தடுமாற்றங்களிற்கான பிரதான காரணங்கள் பின்வருமாறு

 

1. உள்ளூர் போட்டிகளின் போட்டித்தன்மை குறைவாக இருக்கின்றமை

2. சர்வதேசப் போட்டிகளில் எழும் சவால்களைச் சமாளிக்கும் வகையில் வீரர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளாமை

3. தேர்வாளர்களிடையே தெளிவான நோக்கு (No clear vision) இல்லாமை

4. அணித்தெரிவுகளில் காணப்படும் அரசியல் தலையீடுகள்

5. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்யப்படாமையும் பயிற்றுவிப்பாளரை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படாமையும்

 

இலங்கை அணியின் அண்மைக்கால தடுமாற்றங்களுக்கு உள்ளூர்ப் போட்டிகள் போட்டித்தன்மை குறைந்தவையாக இருக்கின்றமையே பிரதான காரணமாகும். இவ்வாறு உள்ளூர் போட்டிகள் போட்டித்தன்மை குறைவாக இருக்கின்றமைக்கு

a.அதிக அணிகள் முதல்தரப் போட்டிகளில் விளையாடுகின்றமை

b.உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும் முறை பொருத்தமானதாக அமையாமை

என்பவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.




அதிக அணிகள் முதல்தரப் போட்டிகளில் விளையாடுகின்றமை

 

ஒரு நாட்டில் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு அணிகளிலும் உள்ள மிகத் திறமையான வீரர்களின் எண்ணிக்கை/செறிவு குறைவடைந்து, முதல்தரப் போட்டிகளின் போட்டித்தன்மையானது குறைவடைவதுடன் உள்ளூர் போட்டிகளின் போட்டித்தன்மைக்கும் சர்வதேசப் போட்டிகளின் போட்டித்தன்மைக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கின்றது.
இலங்கையில் தற்போது கொழும்பிலும் அதன் அயல் பிரதேசங்களிலும் உள்ள 24 கழக அணிகள் முதல்தரப்போட்டிகளில் விளையாடுகின்றன. இது இலங்கையை ஒத்த சனத்தொகை உடைய அவுஸ்ரேலியாவில் உள்ள முதல்தர அணிகளுடன் (5பிராந்திய அணிகள்) ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 5 மடங்காகும்.

இவ்வாறு அதிக அணிகள் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதால் இலங்கையில் முதல்தரப்போட்டிகளில் விளையாடும் அனேக கழக அணிகளின் துடுப்பாட்ட வரிசையில் 1 அல்லது 2 தரமான துடுப்பாட்ட வீரர்களே இருக்கின்றனர்(திறமையான வீரர்களின் செறிவு மிகக்குறைவு). பந்துவீச்சு வரிசைகளும் அவ்வாறே.

இதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் முதல்தரப் போட்டிகளின் போட்டித்தன்மை மிகக்குறைவாகவும், சர்வதேசப் போட்டிகளினதும் இலங்கையின் முதல்தரப் போட்டிகளினதும் போட்டித்தன்மைகளுக்கு இடையிலான இடைவெளி மிக அதிகமாகவும் இருக்கிறது.

இதனால் தான் உள்ளூர் போட்டிகளில் அசத்தி ஆயிரக்கணக்கில் ஓட்டங்களைக் குவித்து அணியில் இடம்பிடிக்கின்ற பல துடுப்பாட்ட வீரர்கள் போட்டித்தன்மை அதிகமாக இருக்கின்ற சர்வதேச அரங்கிற்கு வரும் போது தடுமாறுகின்றனர்.

பந்துவீச்சாளர்களின் நிலமையும் அவ்வாறே இலங்கையின் போட்டித்தன்மை குறைவான உள்ளூர் போட்டிகளில் விக்கெட்களை வீழ்த்துகின்ற பந்துகளைக் கூட சர்வதேச அரங்கில் உள்ள தரமான துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரிகளுக்கும் சிக்கர்களுக்கும் விரட்டுவதால் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாமலும் ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறுகின்றனர்.

ஆரம்பத்தில் திணறுகின்ற வீரர்களில் சிலர் சர்வதேசப்போட்டிகளின் போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு தங்களை வளர்த்துக் கொண்டாலும் உள்ளூர் போட்டிகளுக்கும் சர்வதேசப் போட்டிகளுக்கும் இடையில் போட்டித்தன்மையில் இருக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் அவ்வாறு சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்றவாறு தம்மை வளர்த்துக் கொள்ள அதிக காலம் தேவைப்படுகின்றது, பல வீரர்கள் அவ்வாறான ஒரு பாரிய மாற்றத்தை தம்மில் ஏற்படுத்த முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்.

அத்துடன் உள்ளூர் போட்டிகள் போட்டித்தன்மை குறைவாக இருப்பதால், இலகுவான பரீட்சைகளில் அதிகமானவர்கள் கிட்டத்தட்ட ஒரேபுள்ளிகளைப் பெற்று சித்தி அடைவதைப் போன்று அதிக வீரர்கள் இலகுவாக ஒரே அளவான சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களில் மிகச்சிறந்த, அணிக்குத் தேவையான வீரர் யார்??? என்று இனங்காண்பதில் தேர்வாளர்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். (போட்டித்தன்மை உயர்வாக இருந்தால் தான் சிறப்பாக செயற்படுபவர்களுக்குள் இருந்து மிகத் திறமையானவர்களை அடையாளம் காணமுடியும்)

இதற்கு 2015 உலகக்கிண்ணத்துக்குப் பின் ஒருநாள் அணிக்கான நிரந்தரமான சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை அடையாளப் படுத்த முடியாமல் தேர்வாளர்கள் சிரமப்படுவதை உதாரணமாக குறிப்பிடலாம். 2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் பின் வெண்டர்ஸே, ரண்டீவ், சந்தக்கன், டில்றுவான் பெரேரா, அபொன்ஸொ, சஜித் பத்திரண, பிரசன்ன இறுதியாக அகில தனஞ்சய, புஷ்பகுமார என உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட பல சுழல்பந்து வீச்சாளர்களை ஒவ்வொரு தொடருக்கும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி இருந்தனர் (ஒருவர் கூட 15க்கு அதிகமான போட்டிகளில் விளையாட வில்லை) இதற்கான காரணம் உள்ளூர் போட்டிகளின் போட்டித்தன்மை குறைவாக இருப்பதால் உள்ளூர் போட்டிகளில் ஓரே அளவான சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய சுழல்பந்து வீச்சாளர்களில் மிகத்திறமையான, அணிக்குத் தேவையான சுழல்பந்து வீச்சாளரை கண்டறிய சர்வதேசப் போட்டிகளைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தேர்வாளர்களுக்கு இருந்தமையே ஆகும்.


 

உள்ளூர் போட்டிகள் நடாத்தப்படும் முறை

 

இலங்கையில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும் முறையும் இலங்கையின் உள்ளூர் போட்டிகள் போட்டித்தன்மை குறைந்தவையாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

இலங்கையின் முக்கியமான முதல்தரப் போட்டியான பிரிமியர்லீக் போட்டிகளுக்கு ஒத்ததான இந்தியாவின் ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில் குழு நிலைப் போட்டிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகளுக்கிடையில் காலுறுதிப் போட்டிகள் நடைபெற்று பின் அரை இறுதி, இறுதி என கட்டாயம் வெற்றி பெறவேண்டிய, அழுத்தமும் போட்டியும் நிறைந்த போட்டிகள் நடைபெற்றே வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.

ஆனால் இலங்கையின் பிறிமியர் லீக் போட்டித் தொடரின் வெற்றியாளர், ஒவ்வொரு அணிகளுக்குமான போட்டிகள் முடிவடைந்தவுடன் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இங்கு காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என்று போட்டித்தன்மை அதிகமான போட்டிகள் எவையுமே இல்லை.
அத்துடன் ஏனைய டெஸ்ட் விளையாடும் நாடுகள் அனைத்தும் தமது முதல்தரப் போட்டிகளை 4 நாட்கள் கொண்டதாக நடத்த, இலங்கையில் மட்டும் 3 நாட்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. இவ்வாறாக குறுகிய (3) நாட்கள் கொண்ட முதலதரப் போட்டிகள் இருப்பதே அண்மைக்காலமாக இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இனிங்ஸ்களை ஆடமுயாது தடுமாறி வருவதற்கான காரணமாக இருக்கின்றது.

தீர்வுகள் (Solutions)

எனவே இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிற்க உடனடியாக முதல்தரப் போட்டிகளின் போட்டித்தன்மை அதிகரிக்கப்படவேண்டும். இதற்கு முதலில் முதல்தரக் கழக அணிகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன் 3நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளை 4நாட்கள் கொண்டதாக மாற்ற வேண்டும்.

அடுத்த கட்டமாக போட்டிகளை மாகாண அணிகளை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவதன் மூலம் உள்ளூர் போட்டிகளின் போட்டித்தன்மையைக் மேலும் அதிகரித்து சர்வதேசப் போட்டிகளுக்கும் உள்ளூர் போட்டிகளுக்கும் இடையில் போட்டித்தன்மையில் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைக்க முடியும்.

இவ்வாறாக போட்டித்தன்மைகளுக்கிடையிலான இடைவெளி குறைகின்றபோது, சர்வதேசப் போட்டிகளில் பிரகாசிக்கக் கூடிய திறமையுடைய ஒரு சிலரே உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துவார்கள். இதனால் தேர்வாளர்கள் அவர்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும் அத்துடன் புதிதாக சர்வதேச அரங்குக்கு வருகின்ற வீரர்கள் தம்மை விரைவாக சர்வதேசப் போட்டிகளில் உள்ள சவால்களை வெற்றி கொள்ளக் கூடியவர்களாக வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

பாகம் இரண்டில் சந்திப்போம் ……


சிறீரஞ்சன் தகீசன் 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.