Sri Lanka

மீண்டெழுமா இலங்கை😥😥😥

தோல்விகள் என்பது இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதான விடயமல்ல. இருந்தும் இந்திய தொடரின் போதான ஒட்டுமொத்தமான தோல்வியும் இலங்கை அணியின் ஆரம்ப காலத்தை நினைவுபடுத்திச் சென்றியிருக்கும். கத்துக்குட்டியாக இலங்கை அணி அறிமுகமாகிய போதுகூட இல்லாத பலவீனம் இப்பொழுது உள்ளது என்று சொன்னால் மிகையாகது.

இந்தத் தோல்விகளுக்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பதை அலசுவதாகவே இந்தக் கட்டுரை அமையவுள்ளது.

முதலில் இதற்கு ஒட்டுமொத்தப் பொறுப்பும் இலங்கை கிரிக்கெட் சபையினையே சாரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. மத்யூஸ் பதவி விலக எடுத்த முடிவில் ஏதேனும் தலையீடுகளை கிரிக்கெட் சபை எடுத்திருக்க வேண்டும். அதனைத் தவிர்த்து புதிய தலைவர்களை உள்வாங்கியது பிழையான விடயமே. சங்கக்காராவின் தலைமை ஓய்வின் பின் டிலஷானின் தலைமையின் கீழ் தத்தளித்த இலங்கையை விட இப்பொழுதுள்ள அணி மோசமான நிலையிலேயே உள்ளது.
உள்ளக அரசியல் நடைபெறும் இலங்கை கிரிக்கெட்டுக்குள் முதலில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரவிந்த டீ சில்வா, ஹசான் திலகரட்ண போன்ற மனிதர்களினை உள்ளீர்க்க வேண்டும். அதன் பின்பு தான் இந்த அணித் தெரிவுக்குள்ளேயே போகலாம். எடுத்த எடுப்பிலேயே அணியில் ஒவ்வொரு வீரனையும் மாற்றிப் பயனில்லை.

எந்த வீரன் எந்த இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதற்கு வாய்ப்புக்கள் வழங்க வேண்டும். ஒரு போட்டியில் அந்த வீரன் சரியாக ஆடாதவிடத்து அவனை அடுத்த போட்டியில் இடைநிறுத்தினால் அவனது திறமையை முழுமையாக அறியாமலே போய் விடும். இப்படியான ஒரு உதாரணம் திரிமன்னேயினை பார்க்கக் கிடைத்தது.

வீரர்களைத் தெரிவு செய்யும் போது அனுபவம்மிக்க வீரர்களின் ஆலோசனைகளோடு அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். சாதித்த வீரர்கள் என்று எத்தனையோ பேர் இலங்கையில் இருக்கும் போது வெளியிடங்களில் பயிற்சியாளர்களை உள்வாங்குவது வேடிக்கைக்குரியது.

இந்த டெஸ்ட் தொடரில் யார் ஒழுங்காகத் துடுப்பெடுத்தாடி இருக்கிறார்கள என்று பார்த்தால் கருணாரத்தன டிக்வெல, மெண்டீஸ், மத்யூஸ், டில்ரூவன் பெரேரா போன்றவர்களின் சராசரிகள் மாத்திரமே 30 இனைத் தாண்டியுள்ளது.
மேற்குறிப்பிட்டவர்கள் அனைவரும் ஒரே போட்டியில் கலக்கியிருப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் தான் ஒரு போட்டியில் சரியாக விளையாடுவார்கள். இந்தியாவின் பந்து வீச்சாளர்களை விட இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சராசரி குறைவாக உள்ளது என்பது வேதனைக்குரியது.

தொண்ணூறு ஓவர்கள் களத்தில் நின்று விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இயலாமல் தான் உள்ளது. ஐந்து நாட்கள் டெஸ்ட் இவர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் மூன்று நான்கு நாட்களுக்குள் முடிவடைவது வேதனைக்குரியது. சமரவீர, ஹசான், திலகரட்ண போன்ற அனுபவம் வாய்ந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் எல்லாம் இருந்த இலங்கை அணி இப்பொழுது ஒரு நாள் கூட முழுமையாகத் துடுப்பெடுத்தாட முடியாமல் தவிக்கிறது.

ஒருநாள் போட்டிகளிலும் மத்யூஸ், திரிமன்னே போன்றவர்களின் சராசரிகள் மாத்திரமே சொல்லக் கூடியதாகவுள்ளது. ஏனைய வீரர்கள் தொடர்ந்தும் தமது சிறப்பான ஆட்டத்தினை சரியான முறையில் வெளிக்காட்டவும் இல்லை.

பந்து வீச்சு என்று பார்க்கும் போது பலவீனத்தின் உச்சத்திலுள்ளது என்றே சொல்ல வேண்டும். டெஸ்டில் ஹேரத் என்று ஒரேயொருவர் தான் இப்பொழுதும் இருக்கிறார். அவரின் பந்து வீச்சிலும் இப்பொழுது நம்பிக்கை குறைந்தே வருகிறது. சரியான இன்னுமொரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரை இன்னும் இலங்கை அணி கண்டுகொள்ளாதது இலங்கை கிரிக்கெட்டின் சாபக்கேடே. சண்டகன் முயற்சி செய்கிறார். சண்டகனிற்கான வாய்ப்புக்கள் சரியாக வழங்க வேண்டும். பிரதீப், புஸ்பகுமாரா போன்றவர்களும் தம்மை மேம்படுத்த வேண்டும். மூன்று டெஸ்ட் போட்டியில் மொத்தமாக இலங்கை பந்து வீச்சாளர்களினால் 29 விக்கெட்டுக்களை மாத்திரமே சாய்க்க முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பெல்லாம் ஐம்பது ஓவர் போட்டிகளில் இலங்கை அணி 230 இனைத் தாண்டும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். அந்தளவிற்கு இலங்கை அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமையும். இப்பொழுது அதற்கு நேர்எதிர்மாறு. எத்தனை ஓட்டங்கள் குவித்தாலும் அதனை ஐம்பது ஓவர்களினை விட குறைந்த ஓவர்களில் ஓட்டங்களினை வழங்க இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கர்ண பரம்பரையோடு உறவினர்கள் போல் தமது மோசமான திறமைகளைக் காட்டுகின்றனர்.

அகில தனஞ்சய சுழலில் கலக்கி வருகிறார். தனஞ்சயவினைப் பார்க்கும் போது குறுகிய காலம் இலங்கை அணியைக் கலக்கிய அஜந்த மெண்டிஸ் தான் ஞாபகம் வருகிறார். சரி பரவாயில்லை இருக்கும் காலத்திற்காவது இவரை வைத்து சரியாகப் பயன்படுத்த எத்தனிக்க வேண்டும். சுழலுக்கென்று தனித்துவமான வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மலிங்க, மத்யூஸ் என்று சிறந்த பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுத் திறமை முற்றிலும் மங்கிக் கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

களத்தடுப்பு என்பது இலங்கை கிரிக்கெட்டில் இறந்தே விட்டது என்றே சொல்ல வேண்டும். மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில்

26 வீரர்களால் 65 பிடியெடுப்புக்கள் தவறவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவ்வளவு தூரம் வீரர்களின் பயிற்சியும் உடற்தகுதியும் உள்ளது. முதலில் இவற்றை சரி செய்ய வேண்டும். உடற்தகுதி இல்லாமல் சரியாகப் போட்டிகளினை உடலாலும் மனதாலும் எதிர்கொள்ள முடியாது. உடற்தகுதியின் தார்ப்பரியம் இன்னும் வீரர்களுக்கு விளங்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

சகலதுறை ஆட்டக்காரர்களினை உள்வாங்கும் மட்டும் இலங்கை அணிக்கு இவ்வாறான அழுத்தங்கள் தொடர்ந்தும் வந்து கொண்டேயிருக்கும்.

இவ்வளவு காலமும் சிறந்த பார்வையாளர்கள் என்ற பெயரினை வைத்திருந்த இலங்கை இரசிகர்களின் ஒட்டுமொத்த நற்பெயரும் பல்லேகலவில் நடந்த போத்தல்கள் எறிதல் எனும் கீழ்த்தரமான வேலையோடு காணமலே போய்விட்டது. இதுவரை எத்தனையோ போட்டிகள் மோசமான தோல்விகள் கண்ட போது கூட இல்லாத வேதனை அன்றைய தினம் வீரர்களுக்கு எதிராக போத்தல்கள் எறிந்த கேவலமானவர்களை நினைக்க எரிச்சல் வந்து சென்று கொண்டேயிருந்தது. தோல்விகளுக்கு மருந்து உண்டு. ஆனால் இழந்த நற்பெயரினை மீட்டுக் கொள்வது என்பது நிச்சயம் முடியாததொன்று.

இந்தப் போட்டிகளின் தோல்வி, அடுத்த உலகக் கிண்ணத்திற்கான நேரடி வாய்ப்பிற்கு ஆப்பு வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துடனான போட்டிகளினைப் பொறுத்தே இலங்கை அணியின் தகுதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பது வேதனையான விடயமே.

சங்கா, மகேல, முரளி, வாஸ், டில்ஷான் சமரவீர என்று ஒரு தொகை பட்டாளத்தினைக் கொண்ட இலங்கை முன்னாள் வீரர்கள் நிச்சயம் இலங்கை அணியோடு கைகோர்க்க வேண்டிய தருணமாக இது மாறியுள்ளது.

#கிருத்திகன்_நடராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.