Sri Lanka

சரிவில் இருந்து மீண்டு சரித்திரம் படைக்குமா இலங்கை…???

விளையாட்டுகளில் உலகளவில் இலங்கையின் பெயர் உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட். டங்கன் வைட், சுசந்திக ஜெயசிங்க போன்றோர் ஒலிம்பிக் நிலையில் இலங்கையின் பெயரை பதிய வைத்திருந்தாலும் விளையாட்டு உலகம் இலங்கை என்ற பெயரை ஞாபகம் வைத்திருக்க காரணம் கிரிக்கெட்.

1982 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்று கத்துக்குட்டியாக 1996 ஆசிய மண்ணில் நடைபெற்ற உலக கிண்ணத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் கிண்ணம் வென்று அதிர்ச்சியளித்தது ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி. அக்காலத்தில் மற்றைய அணிகளை விட புதுமையான அதிரடி பாணியில் விளையாடிய இலங்கை அணி குறிப்பாக ஜயசூரிய, களுவிதாரண ஜோடி பவர் பிளேயை சிறப்பாக பாவித்து எதிரணிகளை திணறடித்திருந்தனர்.

அரவிந்த டீ சில்வா, ஜயசூரிய , ரணதுங்க, முரளிதரன், அத்தப்பத்து, வாஸ் என திடமான பல திறமையான வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு தந்த இலங்கை தொடர்ந்து சிறப்பான வீரர்களையும் காலம் கடந்து தமது திறமையை வெளிப்படுத்தும் வீரர்களையும் உருவாக்கியுள்ளது. மஹேல ஜயவர்தன, சங்கக்கார, டில்ஷான், மலிங்க, சமரவீர என இந்த பட்டியல் நீள்கிறது.

1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றிகளையும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியையும் அளித்து வந்தது இலங்கை அணி. குறிப்பாக பிரதான தொடர்களில் இலங்கை அணியின் பெறுபேறுகள் மெய்ச்சும்படியாகவே அமைந்தன. உலக கிண்ணத்தை பொறுத்த வரையில் இலங்கை அணி 1996 இல் கிண்ணம் வென்றாலும் 1999 இல் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது. எனினும் 2003 இல் அரை இறுதி 2007, 2011 இல் இறுதி போட்டிவரை முன்னேறி உலக கிண்ண போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது.

அதேபோல் T20 உலககிண்ணத்தில் முதற்தர அணியாகவே இலங்கை அணி விளங்கியது. 2007 இல் சூப்பர் 8 சுற்று அதன் பின்னர் 2009 2012 இல் இறுதி போட்டி வரையும் 2010 இல் அரையிறுதி போட்டி வரையும் முன்னேறி இறுதியாக 2014 இல் கிண்ணம் வென்றும் அசத்தியிருந்தது.

ஆசியா கிண்ண போட்டிகளில் இலங்கை அணி சாதனை அணியாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. காரணம் 2012 இற்கு முன்னர் இலங்கை பங்குபெறாத ஆசியா கிண்ண இறுதி போட்டி நடைபெற்றதே கிடையாது. அதாவது இலங்கை அணி நடைபெற்ற அனைத்து ஆசியா கிண்ண தொடர்களிலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. 2012 ஆம் ஆண்டே முதல் முறையாக இறுதி போட்டியை தவறவிட்டிருந்தது. அதன் பின்னர் 2014 இல் கிண்ணம் வென்று அசத்தியிருந்தது.

சாம்பியன்ஸ் ட்ரோபி போட்டிகளிலும் இலங்கை அணி 1998 இல்  அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுடன் 2002 இல் இணை சாம்பியன்கள் ஆகியிருந்தது.

சவால் மிக்க கிரிக்கெட் உலகில் இலங்கை அணி தனது பெயரை வலுவாக பதித்திருந்த காலம். அசைக்க முடியாத ஆஸ்திரேலியா அணி கூட இலங்கை அணிக்கெதிராக முக்கிய தொடர்களில் குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் விளையாட பின்வாங்கிய காலம். இலங்கை அணி எதையும் சாதிக்க கூடிய அணியாக பார்க்கப்பட்டது.

இவையெல்லாம் 2011 உலக கிண்ண இறுதி போட்டியுடன் தலைகரணமாக மாறியது. 2011 உலக கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியுடன் தோல்வியுற்றதுடன் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதான அதிருப்தி காரணமாக சங்கக்கார தலைமை பொறுப்பில் இருந்து நீங்கினார். (உலக கிண்ண இறுதி போட்டியில் இலங்கை அணித்தெரிவு குறித்த சர்ச்சைகள் அச்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.)

இதன் பின்னர் டில்ஷானிடம் தலைமை பொறுப்பு கையளிக்கப்பட்டது. அனால் இலங்கை அணியின் பெறுபேறுகள் மிக மோசாமாகவே காணப்பட்டன. இதனால் தலைமை பொறுப்பில் இருந்து டில்ஷான் விலக மீண்டும் மஹேல ஜயவர்தன தலையை பொறுப்பை தற்காலிகமா ஏற்றார். இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய முக்கோண தொடரில் மந்தமாக ஆரம்பித்த்து பின் சிறப்பாக விளையாடியிருந்தது இலங்கை அணி. அத்துடன் சொந்த மண்ணில் நடைபெற்ற T20 உலக கிண்ண தொடரில் இறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்து கிண்ணத்தை கைவிட்டிருந்தது.

அதன் பின்னர் மத்தியூஸ் அணியின் தலைவரானார். இவரது தலைமையின் கீழ் மெல்ல பழைய நிலைக்கு திரும்பியது இலங்கை அணி. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி உச்சத்தில் இருந்தது. ஆசியா கிண்ணம் T20 உலக கிண்ணம் என தொடர் வெற்றிகளுடன் சிறப்பாக காணப்பட்டது. அத்துடன் இங்கிலாந்தில் வைத்து முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி என இலங்கை அணி அசத்தியது.


இலங்கை அணி இவ்வாறு உச்சத்தில் இருந்த நேரம் இலங்கை அணியின் இரு தூண்களாக இருந்த ஜயவர்தன சங்கக்கார இணை T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதுடன் ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். எனினும் 2014 இல் அப்போதைய பெறுபேறுகள் படி ஜயவர்தன சங்கக்கார வரிசையில் சந்திமால் திரிமன்னே இருவரும் இணைவார்கள் என கருதப்பட்டது. எனினும் 2014 இறுதியில் இலங்கை அணி இந்திய சுற்று பயணத்தில் வெள்ளையடிப்பு செய்யப்பட்டது. உலக்க் கிண்ணம் ஆரம்பிக்கும் நேரத்தில் இலங்கை அணியின் இத்தோல்வி யாரும் எதிர்பார்க்காத ஒன்றே. பின்னர் உலக கிண்ண தயார்படுத்தலில் நியூஸிலாந்தில் இலங்கை அணி மந்தமான பெறுபேறுகளையே வெளிப்படுத்தியது.

2015 உலக கிண்ணத்தில் இலங்கை அணி சங்கக்காராவின் சாதனைகளோடு காலிறுதி வரை பயணித்தது திரும்பியது. அத்தோடு ஜெயவர்தன சங்கக்கார இணை ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் விடை பெற்றது. 2015 இந்த பிற்பகுதியில் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதுடன் இலங்கை அணி அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறியது. இத்தகைய சூழ்நிலையை கையாள 2014 இல் இலங்கை அணி வைத்திருந்த யுக்திகள் அப்போது இலங்கை அணிக்கு உதவியிருக்கவில்லை. இப்போது வரைக்கும் அந்த இடம் நிரப்பப்படவில்லை என தான் கூறவேண்டும்.

இலங்கை அணி அதன் பிறகு மிக மோசமான தோல்விகளை சந்தித்ததுடன் அவ்வப் போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் வெள்ளையடிப்பு, வெளிநாட்டு மண்ணில் T20 தொடர் வெற்றிகள் சாம்பியன்ஸ் ட்ரோபியில் இந்திய அணிக்கெதிரான சாதனை வெற்றி என ஆறுதலளித்தது. எனினும் இலங்கை அணி வெற்றி பெரும் தருணங்களில் அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கவில்லை.

2017 சம்பியன்ஸ் ட்ரோபியோடு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போட்டும், அணி முகாமையாளரோடு முரண்பட்டு பதவி விலக இந்நிலைமை மேலும் மோசமானது. இந்நிலமை தற்போது நடைபெறும் இந்திய தொடர் வரை நீண்டு வந்திருக்கினறது. மனதளவில் இலங்கை அணி திடமாக இல்லை என்பதே தற்போது வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் முன்வைக்கும் ஒரு கருத்தாக உள்ளது. அதாவது ஒரு வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவோ அல்லது தோல்வியில் இருந்து மீண்டு வரவோ இலங்கை அணி மனதளவில் தயாராக இல்லை.

இலங்கை அணியின் இந்நிலைமைக்கு காரணமாக இலங்கை ரசிகர்களாலும் சரி கிரிக்கெட் விமர்சகர்களாலும் சரி இலகுவாக முன்வைக்கப்படும் காரணம் ஜயவர்தன சங்கக்கார போன்ற அனுபவ வீரர்களின் ஓய்வு. அனால் 2014 ஆம் ஆண்டில் இந்த காரணத்திற்கான தீர்வு இலங்கை அணியிடம் இருந்தது. அதை இலங்கை அணி மேற்கொண்டு செயற்படுத்தாமைக்கு காரணம் என்ன என்ற கேள்வி தற்சமயம் எழுந்துள்ளது.

இதற்கு விடையாக இலங்கை அணி தெரிவை குறிப்பிடலாம். இலங்கை அணி தெரிவை பொறுத்தவரை இலங்கை அணி இது தான் என எவராலும் குறிப்பிட முடியாத அளவுக்கு சிக்கல் வாய்ந்ததாகவே காணப்படுகிறது. 2014 இல் சிறப்பாக செயற்பட்ட இலங்கை வீரர்கள் திரிமன்னே, சதுரங்க டீ சில்வா போன்றோர் தொடர்ச்சியான வாய்ப்புக்களை பெற்றிருக்கவில்லை. இப்போது வரை இலங்கை அணிக்கு பலர் குறிப்பாக தனஞ்சய டீ சில்வா, சண்டகன், குணரத்ன, அகில தனஞ்செய மற்றும் டசுன் சானக்க போன்றோர் குறிப்பிட்ட தொடர்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்ச்சியாக அல்லது சரியான நேரத்தில் வழங்கப்படுவது இல்லை என்ற கருத்து ஓங்கி நிற்கின்றது.

அவ்வாறு அணியில் தொடர்ந்து அணியில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கும் அணியில் இவர்களின் நிலை தீர்மானமிக்கதாக இருந்ததாய் இல்லை. இது போன்ற செயல்கள் ஒரு திடமான அணியை கட்டியெழுப்ப உதவவில்லை. அத்துடன் சில வீரர்களுக்கு அவர்களின் செயற்பாடுகளுக்கு மீறி தொடர்ந்து அளிக்கப்பட்ட வாய்ப்பும் இலங்கை அணியை நிலை குலைய செய்துள்ளது. அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் அடிக்கடி காயப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு அணியின் தயார்படுத்தல்கள் சரியாக இல்லை என்பது ஒரு முக்கிய காரணம். இதனாலேயே இலங்கை அணியின் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது எனலாம்.

இவை அனைத்திற்கும் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்காக செயற்படவில்லை என்பதும் ஒரு காரணமாக அமைகின்றது. அரசியல் தாக்கங்கள் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இருப்பது தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை மீது வைக்கப்படும் குற்றசாட்டு. இருந்த போதிலும் அது தொடர்பான திருப்தியளிக்க கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இல்லை.

இலங்கை உள்மட்ட கிரிக்கெட் உலகத்தரம் வாய்ந்ததாக இல்லை என்பதும் அனைவராலும் உணரக்கூடியதாக உள்ளது. இலங்கை அணிக்கான அணித்தேர்வு இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாடுகளில் உள்ளமை போல் தரமான உள்ளூர் கிரிக்கெட் மூலம் இடம்பெற வேண்டிய அவசியம் தற்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளங்காமல் இல்லை. இருப்பினும் அது எப்போது நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கை அணி ரசிகர்களை வெறுப்படைய செய்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து இலங்கை அணியுடன் அவர்களுக்கு முழு ஆதரவாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது ரசிகர்களும் தமது பொறுமை எல்லையை மீறிவிட்டனர் என்பது இந்திய தொடரில் ரசிகர்களின் அத்துமீறிய செயல்களால் வெளிப்பட்டுள்ளது.

தற்சமயம் ஒரு இருண்ட காலத்தினுள் பயணித்து கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் மீளுவதற்கு ஏற்ற வீரர்கள் இலங்கை அணியில் இருப்பினும் அவர்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி திடமான இலங்கை அணியை கட்டியெழுப்ப வேண்டியது இலங்கை கிரிக்கெட் சபையின் பொறுப்பாகும். அதற்கு முறையான ஒரு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இலங்கை அணிக்கு வேண்டும் என்பது இலங்கை ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

 ஆசிரியர்-விளையாட்டு.கொம்


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.